Published : 04 Dec 2016 01:56 PM
Last Updated : 04 Dec 2016 01:56 PM
தனியார் தொலைக்காட்சி நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரித்த பிறகு அவற்றில் ஒளிபரப்பாகிற நிகழ்ச்சிகளின் எண்ணிக்கைக்குக் கொஞ்சமும் பஞ்சமில்லை. எல்லாமே பொழுதுபோக்கின் அடிப்படையில் அமைகிறவைதான் என்றாலும், அறிவை வளர்க்கக்கூடிய நிகழ்ச்சிகளை விரல்விட்டு எண்ணிவிடலாம். மற்றவை எல்லாமே கண்ணுக்கு விருந்தளிக்கிற ரகம்தான். ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என்ற அடையாளத்தோடு சின்னக் குழந்தைகளைக்கூட ஆபாச நடனம் ஆடவைத்து ரசித்தவர்களின் ரசனை, இன்று எல்லைகடந்துவிட்டது. அதன் வெளிப்பாடாகத்தான் அடுத்தவர் வீட்டு அந்தரங்கத்தை நடுத்தெருவில் வைத்து அக்குவேறு ஆணிவேறாகப் பிய்க்கிறார்கள். அவற்றைப் பார்வையாளர்களுக்கு விருந்துபோல பரிமாறுகிறார்கள். இதுபோன்ற நிகழ்ச்சிகளையே மக்கள் பெரிதும் விரும்பிப் பார்க்கிறார்கள் என்பதால், ஒவ்வொரு தொலைக்காட்சி நிறுவனமும் தனக்குப் பிடித்த வடிவில் இதை ஒளிபரப்பத் தொடங்கியிருக்கிறது. மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதாகச் சொல்லிக்கொண்டு அரங்கேறும் இதுபோன்ற நிகழ்ச்சிகள், உண்மையில் அந்த நோக்கத்தை அடையும் சரியான பாதையில்தான் பயணிக்கின்றனவா?
குடும்பத் திரைப்படம்?
மக்களின் பிரச்சினைகளுக்கு ஒரு மேடை அமைத்துக் கொடுத்து, அதைப் பற்றி துறைசார் நிபுணர்களோடு இணைந்து பிரச்சினைக்குத் தீர்வு காண்பதுதான் இதுபோன்ற நிகழ்ச்சிகளின் நோக்கமாகச் சொல்லப்படுகிறது. ஆரம்பக் காலத்தில் சில தொலைக்காட்சிகளில், அந்த நோக்கம் ஓரளவு சரியான இலக்கை எட்டியது. சில குற்றங்கள் வெளிச்சத்துக்கு வந்தன. திருமண பந்தத்தால் சுரண்டப்பட்டவர்களுக்கு சற்றே விடுதலையும் ஆசுவாசமும் கிடைத்தன. பொருளாதார ரீதியாக நலிவுற்றவர்கள் அதிலிருந்து மீள இதுபோன்ற நிகழ்ச்சிகள் காரணமாகவும் அமைந்திருக்கின்றன.
ஆனால், சமீபகாலமாக இதுபோன்ற எந்தவொரு ஆக்கபூர்வமான மாற்றமும் நடப்பதாகத் தெரியவில்லை. குடும்பமாகவோ தனியாகவோ சிலர் வருவார்கள், அவர்களுக்குள் சண்டையிட்டுக்கொள்வார்கள்,
மத்தியஸ்தம் செய்துவைக்க வேண்டிய பொறுப்பில் இருக்கும் தொகுப்பாளர் (பெரும்பாலும் நடிகைகள்தான் இந்தப் பொறுப்பை வகிக்கிறார்கள், நிபுணர்கள் அல்ல) பாரபட்சமாகவும், நமது உணர்ச்சிவசப்பட வைப்பதுபோலவும் எதிர்த்தரப்பினரைத் திட்டித் தீர்ப்பார். சில நேரம் கைகலப்பும் நடந்துவிடும். மனதின் மென் உணர்வைத் தூண்டிவிட்டு அழவைத்து வேடிக்கை பார்க்கிற சம்பவங்களும் அரங்கேறும். எல்லாம் முடிந்து தொகுப்பாளர் வணக்கம் வைப்பதற்குள், முழு நீள குடும்பத் திரைப்படத்தை நிஜமாகப் பார்த்த திருப்தி பார்வையாளருக்கு ஏற்படத்தானே செய்யும்? அந்த நிகழ்ச்சியின் தயாரிப்பாளர்கள் எதிர்பார்ப்பதும் இதைதான் என்று நினைக்க வைக்கிறார்கள்.
அடித்தட்டு மக்கள் எங்கே போவார்கள்?
நடுத்தர, மேல்தட்டு மக்களுக்குக் குடும்பப் பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்ள நீதிமன்றம் இருக்கிறது. அவர்களால் தயங்காமல் காவல்துறையை அணுகி புகார் கொடுத்துப் போராட முடியும். இதெல்லாம் இல்லையென்றால், அவர்களால் உளவியல் ஆலோசர்களை அணுகவும் முடியும். ஆனால் இப்படியான எந்த வழியையும் நெருங்க முடியாத அல்லது வழி இருக்கிறது என்பதே தெரியாத அடித்தட்டு மக்கள் எங்கே செல்வார்கள்? இதுபோன்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், தங்களுக்கு நியாயம் கிடைக்க ஏற்பாடு செய்யும் என்ற நம்பிக்கையில் இங்கே தஞ்சம் அடைகிறார்கள்.
அந்த வகையில் பொதுமக்களுக்கு மேடை அமைத்துத் தரும், இதுபோன்ற நிகழ்ச்சிகளை வரவேற்கலாம். ஆனால் நிகழ்ச்சியைக் கையாள்கிறவர்களின் பொறுப்பற்றதனமும், நிகழ்ச்சியை நடத்தும் விதத்தில் வெளிப்படும் அசட்டையும் அடிப்படை நியதிகளை புறக்கணிக்கும் வகையில் இருப்பது ஏற்புடையதல்ல.
உணர்வுச் சுரண்டல்
சமீபத்தில் ஒளிபரப்பான ஒரு நிகழ்ச்சியில் ஒன்பது வயதுச் சிறுமியை வீட்டைவிட்டு வெளியேறிவிட்ட, அவளுடைய அம்மாவுடன் பேசச் சொல்கிறார்கள். அம்மா எங்கே இருக்கிறார் என்றே தெரியாத அந்தக் குழந்தை கேமராவைப் பார்த்து, “நீ எங்கம்மா இருக்க, வந்துடும்மா” என்று கதறியழுகிறாள். அந்தச் சிறுமியைவிட நான்கு வயது இளைய குழந்தையையும் அம்மாவிடம் பேசச் சொல்கிறார் தொகுப்பாளர்.
ஏதும் புரியாமல் அந்தக் குழந்தை விழிக்கிறது. பதினெட்டு வயதுக்கு உட்பட்ட குழந்தையை இப்படியொரு நிகழ்ச்சியில் உட்காரவைத்து, உணர்வைச் சுரண்டிக் காட்சிப் பொருளாக்குவது தவறு என்று, அந்த நிகழ்ச்சியில் தொடர்புடைய யாருக்குமே தெரியாதா? இதெல்லாம் குழந்தைகள் மீதான வன்முறை இல்லையா?
இதுபோன்ற நிகழ்ச்சிகளின் இன்னொரு அபத்தம், தங்களுடைய கருத்தையும், மதிப்பீட்டையும் நிகழ்ச்சியில் பங்கேற்பவர்கள் மீது திணிப்பது. சமூகத்தின் எந்தத் தட்டில் இருக்கிறோம் என்பதைப் பொறுத்து ஒவ்வொருவருக்கான சமூக மதிப்பீடும் சுயஒழுக்க மதிப்பீடும் மாறும் என்ற நினைப்பே இல்லாமல் அனைவரையும் சகட்டுமேனிக்குக் கேள்வி கேட்கிறார்கள். கணவனை இழந்த, 45 வயது மதிக்கத்தக்க பெண்ணுக்கு ஒரு இளைஞருடன் தொடர்பு இருப்பதாகச் சொல்லி பஞ்சாயத்தைக் கூட்டியிருந்தார்கள். நிகழ்ச்சித் தொகுப்பாளர் அந்தப் பெண்ணிடம், “ஏம்மா, உன் புருஷன்தான் செத்துட்டாரே.
உனக்கு எதுக்கு இன்னொரு ஆள் தேவைப்படுது? பேசாம கிராமத்துக்குப் போய் தனியா இருந்து சேவை செய்யலாமே” என்று சொல்கிறார். இன்னொரு நிகழ்ச்சியில் மறுமணம் என்பது தேச துரோகம் என்ற ரீதியில் தொகுப்பாளர் பேச, அதைக் கேட்டுக்கொண்டிந்த பெண் கூனிக் குறுகிப் போனார். சமூகத்தின் அடித்தட்டில் இருந்துகொண்டு, அடுத்த வேளையைக் கழிப்பது எப்படியென்ற கவலையில் இருக்கும் பெண்ணிடம், “லைஃப்ல வேல்யூ ரொம்ப முக்கியம். நாம சாதிக்க எவ்வளவோ இருக்கு. முதல்ல அதைப் புரிஞ்சுக்கோங்க” என்று கருத்து சொல்கிற தொகுப்பாளரை என்னவென்று சொல்வது?
சமூகப் பொறுப்பு வேண்டாமா?
“அடித்தட்டு மக்கள் தங்கள் பிரச்சினைகளைப் பகிர்ந்துகொள்கிற களம் இதுபோன்ற மேடைகள்தான். இதுகூட இல்லையென்றால் அவர்கள் எங்கே போவார்கள்?” என்று கேட்கிறார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒருங்கிணைப்பில் ஈடுபட்டிருந்த ஒருவர். அவருடைய கேள்வி நியாயம்தான். ஆனால், இந்த நிகழ்ச்சிகளில் மலிந்திருக்கிற சுரண்டலையும் பொறுப்பின்மையையும் யார் சரிசெய்வது?
நிகழ்ச்சியில் பங்கேற்கிறவர்களின் பிரச்சினைகளைப் பெரும்பாலான தொகுப்பாளர்கள் முதலில் காதுகொடுத்து கேட்பதே இல்லை. அவர்களின் காதில் பொருத்தப்பட்டிருக்கும் கருவியில் ஒலிக்கிற கட்டளைகளுக்கு ஏற்பதான் பெரும்பாலானோர் செயல்படுகிறார்கள்.
“நான் இந்த மாதிரி நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து பார்த்துக்கிட்டு வர்றேன். இப்ப புதுசா ஒளிப்பரப்பாகுற நிகழ்ச்சிகளில் கூச்சல்தான் அதிகமா இருக்கு. முன்ன எல்லாம் நிகழ்ச்சியில கலந்துக்கறவங்கதான் ஒருத்தரை ஒருத்தர் அடிச்சிப்பாங்க. இப்ப தொகுப்பாளர்களே அடிதடியில இறங்கிடறாங்க. சில தொகுப்பாளர்கள் ரொம்ப அநாகரிகமா பேசறாங்க. சில வார்த்தைகளை காதுகொடுத்து கேட்கவே முடியறதில்லை” என்று சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த இல்லத்தரசி உமாதேவி.
உண்மையிலேயே மக்களின் வாழ்வில் மலர்ச்சியை ஏற்படுத்துவதுதான் இந்த நிகழ்ச்சிகளின் நோக்கம் என்றால், அதன் ஒரு அங்கமாக இலவச சட்ட உதவி மையங்களை நடத்துகிறார்களா? உளவியல் ஆலோகர்களின் உதவியை நாடுகிறார்களா? காவல்துறை, நீதிமன்றம் ஆகியவற்றின் வழியாகத் தீர்க்கக்கூடிய பிரச்சினைகளைக்குச் சரியான வழியைக் காட்டுகிறார்களா? அனைத்துக்கும் மேலாக தொகுப்பாளர்கள் தங்களுடைய மதிப்பீட்டை எளிய மக்களின் மீது வலிந்து திணிப்பதை நிச்சயம் தவிர்க்க வேண்டும். பயன்படுத்துகிற வார்த்தைகளில் குறைந்தபட்ச கண்ணியமாவது வேண்டும்.
முக்கியமாக கட்டப்பஞ்சாயத்து போன்ற தொனியைக் கைவிட வேண்டும். மிரட்டுவது, அதிகாரம் செய்வது, கூச்சல் போடுவது போன்றவற்றைத் தவிர்த்துவிட்டு தீர்வை நோக்கி நகர வேண்டும். சமூகத்தின் அனைத்துத் தரப்பு மக்களும் இந்த நிகழ்ச்சியைப் பார்க்கிறார்கள் என்ற பொறுப்புடன் செயல்பட வேண்டும். மலிவான வகையில் நடத்தப்படுகிற நிகழ்ச்சிகள் அப்போதைக்கு வெற்றி பெறுவதுபோலத் தோன்றினாலும், மக்களின் மனதில் மறைமுகமாக வெறுப்பை விதைப்பதை சாதாரணமாகப் புறக்கணித்துவிட முடியுமா?
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT