Published : 04 Dec 2016 01:52 PM
Last Updated : 04 Dec 2016 01:52 PM

வீட்டில் இருந்தே சம்பாதிக்கலாம்: க்ளிக் செய்தால் வருமானம்

ஆன்லைனில் வெப்சைட் அமைத்து உங்கள் அலுவலகத்தைத் தொடங்கிய பிறகு, உங்கள் தயாரிப்பு, பணி, திறமை ஆகியவற்றை வெளியுலகுக்கு இலவசமாக விளம்பரப்படுத்துவதில் பிளாக் (Blog) எனப்படும் வலைப்பூ பெரும்பங்கு வகிக்கிறது. பெரும்பாலானோர் வெப்சைட்டுகளில் உள்ள தயாரிப்புகளையும் விலைப்பட்டியலையும் பார்வையிடுவதைவிட, அவை குறித்து பிளாகில் பதிவிடும் தகவல்களை விரும்பிப் படிப்பார்கள். தகவல்கள் சுவாரஸ்யமாக இருக்கும்போது தயாரிப்புகள் மீதும் கவனம் செல்லும். விற்பனையும் விரிவுபடுத்தலும் தானாகவே நடக்கும். பொதுவாகவே விளம்பரங்களைவிட, விளம்பரப்படுத்தப்படும் பொருளைப் பற்றிய கட்டுரைக்கு வாசகர்கள் அதிகம்.

பிளாக் மூலம் விளம்பரம்

உங்கள் வெப்சைட்டின் பெயரிலேயே பிளாகையும் உருவாக்கிக்கொண்டு அதில் எழுத்துகள், புகைப்படங்கள், வீடியோக்கள் வாயிலாக உங்கள் தயாரிப்புகள் குறித்த செய்திகளை எவ்வளவு வேண்டுமானாலும் பதிவிட முடியும். வெப்சைட்டிலும் அதன் லிங்க்கை இணைத்துக்கொள்ளலாம்.

உங்கள் வெப்சைட்டின் பெயர் www. shreeviarts.com என்றிருந்தால் www.shreeviarts.wordpress.com என்றோ www.shreeviarts.blogspot.com என்றோ பிளாகின் பெயரை அமைத்துக்கொண்டு, அதை வெப்சைட்டில் இணைத்துக்கொள்ளலாம். தஞ்சாவூர் பெயின்ட்டிங், கேரளா ஆர்ட்ஸ், பெண்களுக்கான ஆபரணங்கள் என்று விற்பனை செய்ய இருக்கும் தயாரிப்புகளைக் காட்சிப்படுத்தலாம்.

www. shreeviarts.com என்ற வெப்சைட்டில் உள்ள தயாரிப்புகளைப் பற்றிய விரிவான செய்திகளை www. shreeviarts.wordpress.com அல்லது www.shreeviarts.blogspot.com என்ற பிளாகுகளில் கொடுத்து விளம்பரப்படுத்தலாம். மேலும் அந்த பிளாகின் முகவரியை வெப்சைட்டில் லிங்க் கொடுத்து இணைத்துக்கொள்ளலாம். பிளாகில் செய்திகளைப் படிக்கும் பார்வையாளர்கள் அந்தப் பொருட்களை வாங்க விரும்பினால், அங்கிருந்தே வாங்குவதற்கு உங்கள் வெப்சைட்டின் பெயரை லிங்க் கொடுக்கலாம். வெப்சைட், உங்கள் தயாரிப்பு அலுவலகம் (Production Unit). பிளாக், உங்கள் விளம்பர அலுவலகம் (Advertisement Unit).

பிளாக் தொடங்குவது எப்படி?

வேர்ட் பிரஸ் ( >www.wordpress.com), பிளாகர் ( >www.blogger.com) போன்ற வெப்சைட்டுகள் மூலம் இலவசமாக பிளாகை உருவாக்க முடியும். வெப்சைட்டை கிராஃபிக்ஸ் டிசைனர்கள், வெப்டிசைனர்கள் உதவியுடன் வடிவமைத்தால்தான் சிறப்பாக அமையும். ஆனால், பிளாகை நீங்களே எளிதாக வடிவமைக்கலாம். எம்.எஸ். வேர்ட், பவர்பாயிண்ட் போன்ற சாஃப்ட்வேர்களில் டைப் செய்து, படத்தை இடையே இணைத்துக்கொள்ளலாம்.

பணம் கொடுக்கும் பிளாக்

பிளாக் மூலம் உங்கள் வெப்சைட் தயாரிப்புகளை இலவசமாக விளம்பரப்படுத்தி விற்பனை செய்யவும் முடியும்; வருமானத்தை ஈட்டிக் கொள்ளவும் முடியும். பிளாகை உங்கள் ஆன்லைன் அலுவலகத்தில் உள்ள தயாரிப்புகளுக்கு விளம்பரம் கொடுக்க மட்டும் பயன்படுத்தாமல், உங்கள் தயாரிப்புகளுக்குப் பொருத்தமான அவற்றோடு தொடர்புடைய செய்திகளைத் தொடர்ச்சியாகப் பதிவிட்டு வந்தால், நாளடைவில் உங்கள் பதிவுகளுக்காகவே உங்கள் பிளாகுக்கு வருகை தரும் பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

நீங்கள் தேர்ந்தெடுத்துள்ள தொழில்துறை சார்ந்த நிபுணர்களைத் தொடர்புகொண்டு, அவர்களின் கருத்துகளையும் உங்கள் பிளாகில் பதிவிடலாம். மேலும் சிறப்பு விருந்தினர் என்ற வெப் பக்கத்தை உருவாக்கி, அவர்களையே உங்கள் பதிவில் தொடர்ச்சியாக எழுதவும் வைக்கலாம்.

உங்கள் துறைசார்ந்த புத்தகங்கள், வெப்சைட்டுகளைத் தொடர்ச்சியாகப் பார்வையிட்டுவர வேண்டும். நிறைய படிக்க வேண்டும். அந்தத் துறையில் வெற்றிபெற்ற மனிதர்களின் பின்புலத்தை ஆராய வேண்டும். முடிந்தால் நேரில் சந்தித்துப் பேசலாம். ஆங்காங்கு நடக்கும் பயிலரங்கு, கருத்தரங்கு போன்றவற்றில் கலந்துகொண்டு உங்கள் துறை சார்ந்த அறிவை மேம்படுத்திக்கொண்டால், அவை குறித்து பிளாகில் எழுதும் ஆர்வமும் அதிகமாகும்.

பார்வையிட்டாலே பணம்

துறை சார்ந்த நிபுணர்களை நேர்காணல் செய்து வீடியோவையும் வெளியிடலாம். வாரம் ஒரு கட்டுரையைப் பதிவிட வேண்டும் என்ற உத்வேகத்தை வளர்த்துக்கொண்டு பதிவிட்டு வந்தால், பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். அப்போதுதான் ஆட்சென்ஸ், ஆட்வேர்ட் மூலம் வருமானத்தையும் ஈட்ட முடியும். அதாவது, உங்கள் பிளாகின் சில பகுதிகளை அப்படியே கூகுளுக்கு வாடகைக்கு விட்டுவிட்டால், அவர்கள் அந்த இடங்களில் விளம்பரங்களை வெளியிடுவார்கள். அவற்றை க்ளிக் செய்யும் பார்வையாளர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப உங்களுக்குக் கட்டணத்தையும் கொடுப்பார்கள். இதற்கு, பிளாகை உருவாக்கிய பிறகு அதில் ஆட்சென்ஸை இணைத்துக்கொள்ள வேண்டும்.

பிளாகில் ஆட்சென்ஸ், ஆட்வேர்ட் மூலம் பணம் சம்பாதிக்க வேண்டுமானால் அதிலுள்ள தகவல்கள் அனைத்தும் உங்கள் முயற்சியில் உருவானதாக இருக்க வேண்டும். மற்றவர்கள் படைப்பைப் பயன்படுத்தக் கூடாது, 18 வயது நிறைவடைந்தவராக இருக்க வேண்டும் என அவர்கள் கொடுக்கும் விதிமுறைகளைப் பின்பற்றினால் ஆறு மாதம் முதல் ஒரு வருடம் வரையிலான கண்காணிப்புக்குப் பிறகு, ஆட்சென்ஸ் மூலம் வருமானம் கிடைக்க வாய்ப்புண்டு.

உங்கள் பிளாகில் உள்ள ஆட்சென்ஸ் விளம்பரங்களை நீங்களே க்ளிக் செய்து, எண்ணிக்கையை அதிகரிகரிக்கக் கூடாது. ஐபி முகவரி மூலம் கூகுள் அந்த க்ளிக்குகளைக் கண்டுபிடித்தால், உங்கள் பிளாகில் நிரந்தரமாக ஆட்சென்ஸ் விளம்பரங்களை இணைக்கவே முடியாதபடி அவர்கள் Block செய்து விடுவார்கள்.

மேலும் பிளாகை ஃபேஸ்புக், டிவிட்டர் போன்ற சமூக வலைதளங்கள் மூலம் பிரபலமாக்கினால் பார்வையாளர்கள் அதிகரிப்பார்கள். கூகுள் ஆட்சென்ஸ் மூலம் வருமானமும் பெருகும்.

(சம்பாதிப்போம்)
கட்டுரையாளர், மென்பொருள் நிறுவன நிர்வாக அதிகாரி
தொடர்புக்கு: compcare@hotmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x