Published : 17 Dec 2016 03:57 PM
Last Updated : 17 Dec 2016 03:57 PM
ஜீதமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘ஜுனியர் சூப்பர் ஸ்டார்ஸ்’ நிகழ்ச்சியின் இறுதிச் சுற்றுப் போட்டியில் சென்னையைச் சேர்ந்த அஷ்வந்த் முதல் இடத்தைப் பிடித்து ஒரு வீட்டைப் பரிசாகப் பெற்றிருக்கிறார். யு.கே.ஜி படிக்கும் அஷ்வந்த், நிகழ்ச்சியின் இறுதிப் போட்டியில், சிவா நடித்த ‘தமிழ்ப்படம்’, சந்தானம் காமெடியை மையமாக வைத்து தனது நடிப்பை வெளிப்படுத்தி இந்தப் பரிசை வென்றுள்ளார்.
‘‘ பதிமூணு பக்கம், பதினாலு பக்கம் வசனம் இருந்தாலும் ஒரு நாள் டைம் கொடுத்தா போதும், அதை அப்படியே பேசி அசத்துவான். 12 பேர் கலந்துகிட்ட இறுதிச் சுற்றில் என் மகன் வெற்றி பெற்றிருப்பது ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு. இன்று (ஞாயிறு) மாலை ஒளிபரப்பாகிற இறுதிப் போட்டி நிகழ்ச்சியை பார்க்க நாங்களும் ஆவலா இருக்கோம். நானும், என் மனைவி அகிலாவும் அவனோட எதிர்கால கனவுக்குப் பக்க பலமாக இருப்போம். அவனது படிப்புக்கு இடையூறு இல்லாமல் வருகிற நடிப்பு வாய்ப்புகளையும் ஏற்றுக்கொள்வோம். இதுதான் எங்களோட ஆசை!’’ என்கிறார் அஷ்வந்த்தின் அப்பா அசோக்குமார்.
நகைச்சுவை கலந்த திகில் கதை
விஜய் தொலைக்காட்சியில் நாளை முதல் (டிசம்பர் 19) ஒளிபரப்பாகவிருக்கும் புதிய தொடர், ‘நீலி’. சிரிப்பும், திகிலும் கலந்த கதையாக இந்தத் தொடர் ஒளிபரப்பாக உள்ளது. “வீட்டில் உள்ள பெண்களையும் பெரியவர்களையும் கவரும் விதமாக பல நல்ல பொழுதுபோக்கு தொடர்கள் வந்துகொண்டிருக்கும் சூழலில் அவர்களோடு சேர்ந்து
குழந்தைகளும் விரும்பும் விதமாக ஒரு சீரியல் ஒளிபரப்பானால் நன்றாக இருக்குமே என்ற யோசனையில் உருவானதுதான் இந்த ‘நீலி’. கற்பனை, மாய உலகம், பேய்க் கதைகள் என்றால் நமக்கு ஆர்வம் அதிகமாகும். அந்தப் பின்னணியைக் களமாகக் கொண்ட தொடர்தான் இதுவும். நீலி என்பது ஒரு பொம்மையின் பெயர். அந்தப் பொம்மையோடு, ஒரு அம்மா, மகளின் அன்பைச் சொல்லும் நிகழ்வுகள்தான் களம்” என்று சொல்கிறார் இந்தத் தொடரின் இயக்குநர் ஜெரால்டு.
இதில் அபி என்ற முக்கிய கதாபாத்திரத்தில் குழந்தை நட்சத்திரம் சவி நடிக்கிறார். இவர், ‘புலி’, ‘தில்லுக்கு துட்டு’ உள்ளிட்ட சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT