Published : 04 Dec 2016 01:51 PM
Last Updated : 04 Dec 2016 01:51 PM
ஒரு சின்ன பிரேக்
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘வாணி ராணி’ தொடரில் நடித்ததைத் தொடர்ந்து தற்போது ‘சந்திரலேகா’ தொடரில் ஒப்பந்தமாகி நடித்துவருகிறார், கிருத்திகா.
“என்னோட நிஜ கேரக்டர் எப்படியோ அதே மாதிரிதான் ‘சந்திரலேகா’ சீரியலில் நான் நடிக்கும் பாத்திரமும். நான் நடித்த காட்சிகளைப் பார்க்கும்போது சந்தோஷமா இருக்கும். சின்னத்திரை வேலைக்கு நடுவே அப்பப்போ சின்னதா ஒரு பிரேக் எடுத்துப்பேன். அதுதான் என் பயணத்தை அடுத்தடுத்த கட்டத்துக்குக் கொண்டுபோகுது. ‘வாணி ராணி’ சீரியல் நடிப்பை முடிச்சுட்டு வெள்ளித்திரையில் ‘சென்னை 28 பார்ட் 2’ படத்தில் நடிச்சேன். இப்போ மீண்டும் சின்னத்திரைக்கு வந்தாச்சு. மனதுக்குப் பிடித்ததை செய்றதால வாழ்க்கை அழகா போகுது’’ என்கிறார் கிருத்திகா.
நூறு நாள் சேலை திட்டம்
சின்னத்திரையில் செய்தி வாசிப்பு, தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரிப்பு, விளம்பரம் மற்றும் திரைப்பட நடிப்பு என்று பிஸியாக இருக்கும் ஐஸ்வர்யா ராகவ், நண்பர்களிடமிருந்து லைக்குகளைக் குவிக்கப் புடவையைக் கையில் எடுத்திருக்கிறார். கைத்தறி புடவை அணிந்துகொண்டு அந்த ஒளிப்படங்களை ‘100 சாரீஸ் டேஸ்’ என்ற பெயரில் ட்விட்டர், ஃபேஸ்புக் பக்கங்களில் பதிவிட்டு பாராட்டை அள்ளிவருகிறார்.
“நம் பாரம்பரிய உடையான சேலை அணியும் பழக்கத்தை நம் பெண்களிடம் கொண்டுவர வேண்டும் என்பதற்காகத்தான் இப்படியொரு திட்டத்தைத் தொடங்கினேன். 80 நாட்களைக் கடந்துவிட்டேன். ஃபேஸ்புக்கில் சிலர் தனியாக ஒரு பக்கத்தை உருவாக்கி வருடத்தில் 100 நாட்கள் சேலை அணிந்துகொள்ள வேண்டும் என்று சொல்வதோடு, அதைக் கடைப்பிடிச்சிக்கிட்டும் வர்றாங்க. இதுக்காக புதுசா நூறு புடவை வாங்கணுமான்னு கவலைப்படத் தேவையில்லை. நம்மகிட்ட இருக்கிற கைத்தறி புடவைகளையே மாத்தி மாத்தி அணியலாம்” என்று சொல்லும் ஐஸ்வர்யா ராகவ், ஒரு சேலையை அணியும்போது அது எப்போது எந்தச் சூழ்நிலையில் வாங்கியது என்பதையும் பதிவிடுவதால் ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரித்தபடி இருக்கிறது!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT