Published : 06 Nov 2016 02:14 PM
Last Updated : 06 Nov 2016 02:14 PM
திருமண உறவோ சேர்ந்து வாழும் பந்தமோ, எதுவாக இருந்தாலும் பிரிவு என்பதும் சாத்தியமே. ஆனால், இத்தகைய பிரிவுகள் பற்றி நாம் கருத்து சொல்லிக்கொண்டேதான் இருக்கிறோம். பிரிவுகள் சில சமயம் மோசமாக விமர்சிக்கப்படுவதும் உண்டு. இப்படியான சமூக அழுத்தங்களை மீறிப் பலர் விவாகரத்தை நோக்கி நகர்கிறார்கள். முறிந்துபோகிற திருமண உறவுகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தபடியே இருக்கிறது. இது ஆரோக்கியமானதா?
புனித பந்தம்?
நம் இந்தியச் சமூகத்தைப் பொறுத்தவரை திருமண பந்தம் என்பது கேள்விகளுக்கு அப்பாற்பட்ட புனிதத்தன்மை கொண்டதாகவே பார்க்கப்படுகிறது. வேறெந்த நாட்டுடனும் ஒப்பிட முடியாத அளவுக்கு உயர்வானதாக இந்தியக் குடும்ப அமைப்பு நம்பப்படுகிறது. ஆனால், அதற்குள் மலிந்திருக்கும் சிக்கல்களையும் சுரண்டலையும் பற்றி யோசிப்பதற்கோ, சீர்தூக்கிப் பார்ப்பதற்கோ, மறுவரையறை செய்வதற்கோ பலரும் விரும்புவதில்லை. அப்படியே விரும்பினாலும் இந்தச் சமூகம் கட்டமைத்துவைத்திருக்கும் பல்வேறு கற்பிதங்கள், அவர்களின் சிந்தனையை மழுங்கடித்துவிடுகின்றன.
போராட்டமே வாழ்க்கை
அரசுப் பணியில் இருக்கும் சுவேதாவுக்கு (பெயர் மாற்றப்பட்டுள்ளது) கணவர், இரண்டு மகள்கள் என்று கண்ணுக்கு நிறைவான குடும்பம். எப்போதும் சிரித்த முகமாக இருப்பார் சுவேதாவின் கணவர். இருவரும் சண்டைபோட்டு யாருமே பார்த்ததில்லை. விவாகரத்து வேண்டும் என்று சுவேதா கோர்ட் படியேறியபோது, அவருடைய பிறந்த வீட்டாருக்கே அதிர்ச்சி. தன் கணவரைப் பற்றி சுவேதா அடுக்கிய குற்றச்சாட்டுகள் ஒவ்வொன்றும் நினைத்துகூடப் பார்க்க முடியாதவை.
வெளித்தோற்றத்துக்கு நல்லவராகக் காட்டிக்கொண்டாலும் அந்தரங்க வாழ்வில் மிக மோசமானவராக அவர் இருந்திருக்கிறார் என்பது சுவேதாவின் வார்த்தைகளில் பிரதிபலித்தது. சிரித்தபடியே நெஞ்சில் கத்தியிறக்குவது சுவேதாவின் கணவருக்கு வழக்கம். உடன் பணிபுரிகிறவர்களோடு சுவேதாவை இணைத்துப் பேசுவதில் தொடங்கி, சொல்லாலும் செயலாலும் அவரை தினம் தினம் வதைத்திருக்கிறார். ஒவ்வொரு நாள் இரவும் நரகமாகக் கழிய, மகள்களுக்காக அனைத்தையும் பொறுத்துப் போயிருக்கிறார் சுவேதா. கணவரது கொடுமைகள் எல்லை மீறிய நாளொன்றில்தான் அவர் விவாகரத்துக்குத் தயாரானார்.
முடிவில் ஒரு தொடக்கம்
சுவேதாவின் வார்த்தைகளை முதலில் யாருமே நம்பவில்லை. ஆனால் அடுத்தவருக்காகத் தன் வாழ்க்கையைத் தொலைத்துச் சுயமழிந்து போவதில் சுவேதாவுக்கு விருப்பமில்லை. யார் என்ன சொன்னாலும் பரவாயில்லை என்று துணிந்து, அந்த முடிவை எடுத்தார். மகள்களும் அம்மாவுக்குத் துணை நிற்க, இன்று மனநிம்மதியோடு வாழ்கிறார் சுவேதா. “ஹஸ்பெண்ட் என்ன செய்யறார்?” என்ற கேள்விக்கு எந்தத் தயக்கமும் கழிவிரக்கமும் இல்லாமல் புன்னகையைப் பதிலாகத் தர அவரால் முடிகிறது.
சுவேதாவின் செயலில் ஏதாவது குற்றம் உண்டா? திருமண பந்தம் சிதையக் கூடாது என்பதற்காகத் தன்னையே மாய்த்துக்கொள்ள வேண்டுமா அவர்? ஊரார் என்ன பேசுவார்களோ என்று பயந்து ஒவ்வொரு நாளும் செத்துப் பிழைக்கிற வாழ்வு தேவையா? தன்னைச் சிறிதும் புரிந்துகொள்ளாத ஒருவனிடம் தான் தூய்மையானவள் என்று நிரூபித்துக்கொண்டே வாழும் வாழ்க்கைக்கு ஏதேனும் அர்த்தம் இருக்கிறதா? அனைத்தையும் சகித்துக்கொண்டு உள்ளுக்குள் புழுங்கியபடி வாழ்ந்து, திருமண உறவைக் காப்பாற்றியாக வேண்டிய கட்டாயம் என்ன?
அவசரக் கோலம்
சுவேதாவைப் போல அல்ல தேவியின் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) வாழ்க்கை. வசதியான குடும்பத்தில் பிறந்தவர். மனதில் நினைத்தாலே போதும், எல்லாமே கிடைத்துவிடும். காதல் கணவரும் அப்படிக் கிடைத்தவர்தான். கணவரைப் பிடித்த அளவுக்கு தேவிக்குப் புகுந்த வீட்டில் யாரையுமே பிடிக்கவில்லை. சின்னச் சின்ன பிரச்சினைகளை பூதக்கண்ணாடி கொண்டு பார்த்தார். யாரைப் பார்த்தாலும் குறை சொல்லிக்கொண்டே இருந்தார். அந்த வீட்டில் தேவிக்காக அனைவரும் விட்டுக்கொடுக்க, தேவி எதற்கும் இணங்கிப் போகவில்லை. எவ்வளவோ சமாதானப்படுத்தியும் கேட்காமல், “சொந்தக் காலில் நிற்கிற அளவுக்கு எனக்கு வருமானம் இருக்கிறது. யாரை நம்பியும் நான் இல்லை” என்று சொல்லி விவாகரத்துக்கு விண்ணப்பித்தார். விரும்பியடியே அதுவும் அவருக்குக் கிடைத்தது.
தேவியின் முடிவு தவறு என்று மற்றவர்கள் சொன்னார்கள். தேவியே பின்னாளில் அதை ஒப்புக்கொண்டார். பிரிந்த பிறகுதான் உறவுகளின் தேவை அவருக்குப் புரிந்தது. அவசரப்பட்டு முடிவெடுத்துவிட்டதற்காக வருந்திக்கொண்டிருக்கிறார்.
எத்தகைய பிரிவு என்பதைப் பொறுத்துத்தான் பிரிவு நல்லதா, இல்லையா என்று சொல்ல முடியும். அதாவது சுவேதாவைப் போலவா, தேவியைப் போலவா என்பதுதான் கேள்வி. பல பெண்களின் அனுபவங்களை வைத்துப் பார்க்கும்போது சுவேதாவைப் போன்றவர்கள்தான் அதிகம் என்றே தோன்றுகிறது.
சமூகக் கோளாறு
குற்றம் செய்வதற்கு வேண்டுமானால் நொடிப் பொழுது அறியாமை போதுமானதாக இருக்கலாம். ஆனால், பிரிவு என்பது அப்படி நொடிப் பொழுதில் நிகழ்ந்துவிடுவதில்லை. பல நாட்கள், மாதங்கள் மறுபரிசீலனைக்குப் பிறகுதான் ஒவ்வொருவரும் முடிவெடுக்கிறார்கள். நம் குடும்ப அமைப்பைச் சிதைய விடாமல் காக்கும் மந்திரம் கைவரப் பெற்றவர்கள் குழந்தைகள். குழந்தைகளை மையமாக வைத்துத்தான், இன்று பலரது குடும்ப வாழ்க்கையும் ஓடிக்கொண்டிருக்கிறது.
எத்தனையோ கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அனைத்தையும் அன்பின் பெயரால் கடந்துவிடுகிறவர்கள் ஆதர்ச தம்பதிகளாக வாழ்கிறார்கள். குழந்தைகளின் பெயரால் அனுசரித்துப் போகிறவர்கள் உதாரணத் தம்பதிகளாகப் பரிமளிக்கிறார்கள். எதனாலும் சீரமைக்க முடியாத சிக்கலுக்குள் சுழல்கிறவர்களே பிரிந்து செல்லப் பிரியப்படுகிறார்கள். பிரியப்படுகிற அனைவருக்குமே பிரிவு வாய்ப்பதில்லை என்பது நம் சமூக அமைப்பின் மற்றுமொரு கோளாறு. வாய்ப்பு இருக்கிறதே என்று எடுத்ததற்கெல்லாம் பிரிவதும் நல்லதல்ல.
சுயமரியாதைப் பெண்கள்
இன்று உலகம் எவ்வளவோ மாறிவிட்டது. காலத்துக்கு ஏற்பக் குடும்ப வன்முறையும் நூதனமாகிக்கொண்டே போகிறது. ஒவ்வொரு நாளும் புதுப்புது வடிவங்களில் வெளிப்படுகிற குடும்ப வன்முறையைக் கையாளுகிற லாகவம் அனைத்துப் பெண்களுக்கும் வாய்ப்பதில்லை. அப்படிக் கையாள வேண்டிய அவசியமும் அவர்களுக்கு இல்லை. திருமணம் முடிந்த பிறகும் கணவருடைய முகத்தை ஏறெடுத்துப் பார்க்காத காலத்தை நாம் கடந்துவிட்டோம். தொழில்நுட்பங்களின் துணையோடு ஆணும் பெண்ணும் மனம் விட்டுப் பேசிப் பழகுவதற்கான சூழல் இப்போது வாய்த்திருக்கிறது.
பெண்கள் வேலைக்குப் போகிறார்கள், நிறைய வாசிக்கிறார்கள், உலகத்தைப் புரிந்துகொள்கிறார்கள். ஆனால் பெரும்பாலான ஆண்கள் இதைப் புரிந்துகொள்ள முடியாமல் இரண்டு தலைமுறைக்கு முந்தைய மனநிலையோடு இருக்கிறார்கள். தனக்குச் சமமாக நடந்துவருகிற பெண்களை ஆண்களுக்குப் பிடிப்பதில்லை. அது வெவ்வேறு வகைகளில் வெளிப்படுகிறது.
நிரந்தர வேலையில்லாதவர்களும், முறைசாராத் தொழில்களில் ஈடுபட்டிருக்கும் பெண்களும்கூட மனதுக்குப் பிடிக்காத மண வாழ்க்கையி லிருந்து விலகி நடக்கிறார்கள். இப்படி நடக்கிற பெண்கள் சுயநல வாதிகளாக இருக்க வேண்டிய அவசியமில்லை. அவர்கள் சுயமரியாதை கொண்டவர்கள். அதை எதிர்பாலினர் மட்டுமல்ல, இதர பெண்களும் புரிந்துகொள்ள வேண்டும்.
வாழ்வின் பொருள்
விட்டுக் கொடுப்பதும் அகந்தையற்று வாழ்வதும்தான் குடும்ப வாழ்வின் அடித்தளம். இவை இரண்டுமே ஒரு வழிப் பாதையாக இருப்பதும் நல்லதல்ல. ஒருவரை மற்றவர் சுரண்டிக்கொண்டே வாழ்வதும் ஏற்கமுடியாததே. குடும்பத் தராசில் கணவனும் மனைவியும் ஒரே நேர்க்கோட்டில் நிற்க வேண்டும். கணவனின் முன்னேற்றத்தை மனைவி பெருமிதத்துடன் ஏற்றுக்கொள்வது போல, மனைவியின் திறமைகளை கணவனும் மதிக்க வேண்டும்.
அதை விட்டுவிட்டு ஆண் என்ற அகந்தையால் மனைவியை அடக்கியாள நினைக்கும்போதுதான், உறவில் விரிசல் ஏற்பட ஆரம்பிக்கிறது. “கணவர் எதைச் செய்தாலும் பொறுத்துப்போ” என்று அறிவுரை சொல்வது எவ்வளவு அபத்தமோ, “குடும்பமாவது குழந்தையாவது… உன் சந்தோஷம்தான் முக்கியம்” என்று ஆலோசனை வழங்குவதும் தவறே. பிரிவு என்பது கத்தி மேல் நடக்கும் கயிறாட்டத்துக்குச் சமம். பிரிவுக்குப் பிறகான வாழ்க்கை பிரிவுக்கு முந்தைய வாழ்க்கையைவிட கொடுமையானதாக மாறக்கூடிய சாத்தியங்களும் அதிகம். அதேநேரம், பொறுமையின் எல்லை எது என்பதை கணவன், மனைவி இருவருமே அறிந்திருக்க வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT