Published : 06 Jul 2014 11:10 AM
Last Updated : 06 Jul 2014 11:10 AM
எழுத்தாளர் ஞாநியின் வீட்டில் நடந்துவரும் மாதாந்தர ‘கேணி’ கூட்டத்தில் ஜூன் மாதம் நடிகை ரோஹிணி கலந்து கொண்டார். அவருடைய பேச்சு, அவருடைய பன்முகத்தைப் பிரதிபலிப்பதாக இருந்தது.
‘ ‘ஒரு முறை என்னை ஒரு லேடீஸ் காலேஜில் பேச அழைத்திருந்தார்கள். நன்றாகத் தயார் செய்துகொண்டு பேசினேன். கேள்வி நேரம் வந்ததும், ‘சீக்கிரம் முடியுங்கள். நாங்கள் பஸ்ஸைப் பிடிக்க வேண்டும்’ என்று அங்குள்ள மாணவியர் கூறியது எனக்குப் பெருத்த ஏமாற்றத்தைத்தான் கொடுத்தது. மற்றொரு முறை என்னை டான்ஸ் ஆடச் சொல்லிக் கேட்டார்கள். நான் அவர்களை இந்த விதத்தில் மட்டுமே பாதித்திருந்தேன் என்று சொன்னவர், தன் வாழ்க்கையில் தற்செயலாக நிகழ்ந்தவை என்று இரண்டு சம்பவங்களைப் பகிர்ந்து கொண்டார்.
“நான் ஒரு பெண்ணாகப் பிறந்ததும் அடுத்து ஒரு நடிகையானதும்தான். இதற்காக நான் பல நேரங்களில் வருத்தப்பட்டதுண்டு. சீராட்டி பாராட்டி வளர்க்கப்பட்ட என்னை ஒரு நாள் ஹீரோயினாக்க முற்பட்டனர். ஆம்ரபாலி ட்ரெஸ் என்பார்களே, அதையணிவித்து என்னைவிட 20 வருடங்கள் மூத்தவருடன் காதல் காட்சியில் நடிக்கச் சொன்னார்கள். குழந்தை நட்சத்திரமாக சந்தோஷமாக நடித்துக் கொண்டிருந்த என்னால், ஒரு ஆண் தன்னைத் தொட்டால் உன்னை உடனே தற்காத்துக் கொள் என்று சொல்லிக்கொடுத்து வளர்க்கப்பட்ட என்னால், இந்தக் ‘காதல்’ சீனில் நடிக்க இயலவில்லை. இங்கு கவர்ச்சித் தன்மையுடன் நடிப்பது எப்படி, ரோஹிணி மோகினியாகத் தெரிவது எப்படி, என்பதெல்லாம் எனக்குப் புலப்படக் காணோம்.
எனது வாழ்க்கையில் நான் கவனித்துள்ளது இதுவே. பொதுவாகப் பெண்ணை, அதுவும் நடிகையை, இரண்டாம் பட்சமாகத்தான் (செகண்டரி ட்ரீட்மெண்ட்) எப்பொழுதும் நடத்துகிறார்கள்! இது என்னை நோக வைத்துள்ளது” என்று சொன்னவர், ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் தனக்கு நேர்ந்த அனுபவத்தையும் பகிர்ந்து கொண்டார்.
“பிரபல எழுத்தாளர் ஒருவர் புத்தக வெளியீட்டு விழாவில், வெளியிட்ட புத்தகத்தை என்னிடம் கொடுக்கும் போது, “தமிழ் படிக்கத் தெரியுமா?” என்று கேட்டார், அறிவார்ந்த சமூகத்தினரிடையேயும், பெண் எனப்படுபவள் பற்றி ஏற்கனவே தீர்மானமான ஒரு பிம்பம் (Prototype) இருக்கிறது. அதன்படியே அவளை அணுகிறார்கள் என்ற ஒரு உணர்வை எனக்குள் இது ஏற்படுத்தியது. இப்பொழுதும்
ஒரு நடிகையைப் பற்றி எழுதினால் அதில் பெரும்பாலும் ஒரு தரக்குறைவான தொனியே தென்படுகிறது. நான் இந்த ப்ரோடோடைப்பிற்கு மாறாகத் திகழ்வது என்ற முடிவை எடுத்தேன்” என்றார்.
நீங்க என்ன சொல்றீங்க
பெண் என்பவள் எல்லா இடத்திலும் இரண்டாம் பட்சமாகவே நடத்தப்படுகிறாள் என்றும் பெண் மீது இந்தச் சமூகம் எல்லா விஷயங்களையும் முன்தீர்மானம் வைத்து அந்தப் பிம்பத்தின்படியே நடத்துகிறது என்றும் ரோஹிணி சொல்கிறார். இது குறித்து உங்கள் கருத்து என்ன? பெண்களுக்கு எல்லா இடத்திலும் சம உரிமையும், சமத்துவமும் கிடைக்கிறதா? எங்களுக்கு எழுதி அனுப்புங்கள், விவாதிக்கலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT