Published : 27 Nov 2016 01:06 PM
Last Updated : 27 Nov 2016 01:06 PM
இன்னும் முப்பது நாட்களில் கறுப்புப் பணக் கறையில்லாமல் புத்தம் புதிதாகப் பிறக்கப்போகும் இந்தியாவைப் பார்ப்பதற்காகப் பலரும் ஆவலோடு காத்திருக்கிறார்கள். இன்னும் சில வாரங்களில் கறுப்புப் பணம் முற்றாக ஒழிந்து, அதன் காரணமாகத் தங்கள் வங்கிக் கணக்கில் வந்து குவியப்போகிற லட்சங்கள் பற்றிய கனவிலும் சிலர் மிதந்துகொண்டிருக்கிறார்கள்.
“கால் கடுக்க ஏடிஎம் வாசலில் நின்றால் என்ன, நம் நாட்டு எல்லையைக் காக்கும் வீரர்களை நினைத்துப் பார்த்தால், இது ஒன்றும் பெரிய விஷயமில்லை” என்று பலர் தேசப்பற்றுடன் உரையாற்றுவதையும் பார்க்க முடிகிறது. இவை அனைத்தையும் தூக்கிச் சாப்பிட்டுவிடுகின்றன சமூக வலைதளங்களில் உலாவரும் அவல நகைச்சுவையும் ‘மீம்’ சித்தரிப்புகளும். அதுவும் நகைச்சுவை என்ற பெயரில் இல்லத்தரசிகளை மையமாக வைத்து வெளியாகிற ஒவ்வொன்றும் அபத்தத்தின் உச்சம்.
பெண்கள் இந்தியர்கள் இல்லையா?
“எங்கள் வீட்டு கடுகு டப்பாவில் ஒளித்துவைத்திருந்த கறுப்புப் பணம் வெளிவந்துவிட்டது” என்று சொல்கிற ஆண்கள், அவைதான் குடும்பத்தைத் தொய்வில்லாமல் நடத்த உதவிய அச்சாணி என்று உணர்ந்திருக்க நியாயமில்லை. “கறுப்புப் பண ஒழிப்பு விவகாரத்தில் கார்ப்பரேட் ஆட்கள் சிக்குகிறார்களோ இல்லையோ, எங்கள் வீட்டம்மா பெரும்தொகையுடன் கையும் களவுமாகச் சிக்கிவிட்டார்” என்று பெருமிதத்துடன் நிலைத்தகவல் பதியும் அல்லது அதை நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளும் ஆண்கள், தங்கள் வீட்டுப் பெண்களிடம் பணம் இருப்பதே மாபெரும் குற்றம் என்று சொல்லவருகிறார்களா?
நாட்டைச் சுத்தப்படுத்துவதாகச் சொல்லிக்கொண்டு, ஐநூறு, ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மதிப்பு இல்லாத நோட்டுகளாக அறிவித்ததெல்லாம் சரிதான். அதன் ஒரு அங்கமாக நாடு முழுவதும் பணத்தைக் கையாளுவது குறைந்து, பணஅட்டைகள் மூலமே பணப் பரிமாற்றம் நடக்க வேண்டும் என்று தொலைநோக்குடன் பேசுவதும்கூடப் பரவாயில்லை. ஆனால் வங்கிக் கணக்கு, கடன் அட்டை, ஏடிஎம் மையம் என்று நவீன இந்தியாவின் எந்தவொரு அம்சத்தைப் பற்றியும் தெரியாமல், அப்படியே தெரிந்திருந்தாலும் அவற்றைக் கையாளும் சுதந்திரம் இல்லாமல் இருக்கும் லட்சக்கணக்கான பெண்களை இந்த அறிவிப்பு பாதிக்கக்கூடும் என்று அதிகாரத்தில் இருக்கும் எந்த ஆணுக்கும் தெரியாதா? பணம் என்பது ஆண்கள் மட்டுமே கையாளக்கூடிய பொருள் என்ற நினைப்பின் வெளிப்பாடுதானே, பெண்கள் குறித்த எந்தச் சிந்தனையும் இல்லாமல் தற்போது வெளியாகியிருக்கும் இந்த அறிவிப்பு?
எது கறுப்புப் பணம்?
ஒவ்வொரு வீட்டிலும் அம்மாவோ, மனைவியோ, மகளோ மற்றவர்களுக்குத் தெரியாமல் வைத்திருக்கும் பணம், குடும்ப நலனுக்கான சேமிப்பு என்பதைப் பலரும் ஏற்க மறுக்கின்றனர். “அப்படியென்ன புருஷனுக்கும் புள்ளைக்கும் தெரியாம சேர்த்துவைக்க வேண்டியிருக்கு?” என்று கொதித்தெழும் பெண்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். உண்மையில் ஒவ்வொரு பெண்ணும் இப்படிச் சேர்த்துவைக்கும் பணம், அவர்களுடைய தனிப்பட்ட செலவுகளுக்கல்ல. குழந்தைகளின் கல்வி, திருமணம், நகை, அத்தியாவசியப் பொருள் என்று ஏதோவொரு முக்கியமான செலவுக்குப் பணம் இல்லாமல் கணவன் கையைப் பிசைந்துகொண்டு நிற்கும்போது கைகொடுத்து உதவும் பணம். அந்தப் பணம், வீட்டுக் கணக்கில்
இருந்து திருடப்பட்டதல்ல. வீட்டுச் செலவுக்காகக் கணவன் கொடுக்கும் பணத்தில், செலவைக் குறைத்து மிச்சப்படுத்தியது. அப்படி மிச்சப்படுத்திய பணத்தைச் சிறுகச் சிறுக சீட்டு கட்டிப் பெரிதாக்கியது. தன்னுடைய தனிப்பட்ட செலவுகளைக் குறைத்துக்கொண்டு குடும்பத்துக்கென ஒதுக்கிவைத்தது. இப்படிச் சேமித்த பணத்தைத்தான் ‘கறுப்புப் பணம்’ என்று சொல்லி நகைக்கிறார்கள் பெரும்பாலான ஆண்கள்.
பெண்கள் ஏன் சேமிக்கிறார்கள்?
பெண்கள் தங்கள் வீட்டுக்குத் தெரியாமல் பணத்தை ஏன் பதுக்கி (அப்படிச் சொல்ல வேண்டும் என்றுதானே பலரும் விரும்புகிறார்கள்) வைக்கிறார்கள்? அதற்குக் காரணமும் ஆண்கள்தான். வாங்குகிற சம்பளத்தை முழுதாக வீட்டில் ஒப்படைக்காத கணவர்களால் நிறைந்தது நம் நாடு. சம்பளப் பணத்தை மனைவியிடம் கொடுக்கிற கனவான்களும் பாதியை எடுத்துக்கொண்டு, வீட்டுச் செலவுக்கெனக் கொஞ்சமாகக் கிள்ளித்தான் தருவார்கள். சில ஆண்கள் தங்கள் வருமானத்தின் பெரும்பகுதியை அரசாங்கத்தின் வருமானத்தைப் பெருக்கும் உயரிய சிந்தனையோடு டாஸ்மாக் கடைகளில் செலவழித்துவிடுவார்கள். அரசாங்கத்துக்குப் போக மீதமிருக்கும் பணம்தான் வீடு வந்து சேரும். அந்தப் பணத்தை வைத்துக்கொண்டுதான் அந்த வீட்டுக் குழந்தைகள் பிழைத்திருப்பதும், படித்து முன்னேறுவதும்.
பறிபோன பணம்
நகரங்களில் ஆண், பெண் இருவரும் வேலைக்குப் போகிற வீடுகளில் பெண்களின் சம்பளப் பணத்தைக் கையாள்வது பெரும்பாலும் அந்த வீட்டு ஆண்தான். பெண்ணின் கையில் பணத்தையும் குடும்ப நிர்வாகத்தையும் ஒப்படைப்பது, தங்கள் ஆண்மைக்கு இழுக்கு என்றே பலரும் நினைக்கிறார்கள். சம்பளப் பணம் முழுவதையும் மனைவியிடம் ஒப்படைக்கும் ஆண்களும் இருக்கிறார்கள். ஆனால், அங்கே தலைக்கு மேல் வெள்ளமாகக் கடன் தொகை ஓடும். அந்தக் கடனைச் சமாளிக்க வேண்டிய பொறுப்பும் மனைவியின் தலையில்தான் விழும். இத்தனை சிக்கல்களுக்கு நடுவேதான் ஒரு பெண் பணத்தைச் சேமிக்க வேண்டியிருக்கிறது.
அப்படிச் சேமித்த பணத்துக்கும், பணமதிப்பு நீக்கம் மூலம் கேடு வந்துவிட்டது. எல்லாப் பெண்களுக்கும் வங்கிக் கணக்கு இல்லை. அப்படியே இருந்தாலும் அதைக் கையாளுவது கணவன் என்கிற நிலையில், தாங்கள் சேமித்துவைத்திருந்த பணத்தைக் கணவனிடமோ, மகனிடமோ கொடுக்க வேண்டிய நிலை. அப்படிக் கொடுக்கப்பட்டு வங்கிக் கணக்கில் ஏறும் பணம், முழுதாக இவர்கள் கையை வந்து சேரும் சாத்தியம் குறைவு. அதுவும் பணத் தட்டுப்பாடு நிலவும் இந்த நேரத்தில், பெண்களின் சேமிப்பு வாராக் கடனாகித்தான் போகும்.
அல்லல்படும் பெண்கள்
பெண்களின் இந்தச் சேமிப்பு பல குடும்பங்களில் சிக்கல்களையும் மனத்தாங்கலையும் ஏற்படுத்திவிட்டது. “நான் வீட்டில் இருந்தபடியே துணிகளை விற்கிறேன். கடந்த மூன்று மாதங்களில் எட்டாயிரம் ரூபாயைச் சேர்த்துவைத்திருந்தேன். அதை என் கணவரிடம் கொடுத்து மாற்றித் தரச் சொன்னேன். எனக்கே தெரியாமல் இவ்வளவு பணம் வைத்திருந்தாயா என்று கோபித்துக்கொண்டார். என் மீது அவருக்கிருந்த நம்பிக்கை குறைந்துவிட்டதாம்.
என்கிட்டே சரியா பேசறதுகூட இல்லை” என்கிறார் சென்னையைச் சேர்ந்த இல்லத்தரசி கனி. இல்லத்தரசிகளின் நிலை இப்படியென்றால், முதியவர்கள் படும் பாடு இன்னும் மோசம். மகனுக்கும் மருமகளுக்கும் தெரியாமல் சேர்த்துவைந்திருந்த சொற்பப் பணத்தை மீண்டும் அவர்களிடமே கொடுக்க வேண்டிய நிர்பந்தம். “வயசான காலத்துல எல்லாத்துக்கும் அவங்க கைய எதிர்பார்த்துக்கிட்டு இருக்க முடியுமா? ஆத்திர அவசரத்துக்கு என் கையில கொஞ்சம் பணம் வேணாமா? இப்ப அதையும் பறிகொடுத்துட்டேன்” என்று சொல்லும் செந்தாமரையின் வார்த்தைகளில் இருக்கும் நிதர்சனம் பலருக்கும் புரிவதில்லை.
பிரதமர் மோடியின் திடீர் அறிவிப்பு, முறைசாராத் தொழில்களில் ஈடுபட்டுவரும் பெண்களை மிகக் கடுமையாக பாதித்திருக்கிறது. தினசரி கூலி, வாரக் கூலியை நம்பிக் குடும்பம் நடத்தும் அவர்கள், வங்கிக் கணக்குக்கும் கடன் அட்டைக்கும் எங்கே போவார்கள்? மக்களிடம் பணப்புழக்கம் குறைந்ததால் காய்கறி, பழம், பூ, பால், மீன் போன்றவற்றை விற்கும் பெண்களின் வருமானம் குறைந்துவிட்டது.
சிலர் வருமானமே இல்லாமல் அல்லல்படுகிறார்கள். “ஒரு நாளுக்கு ஐநூறு ரூபாய்க்கு பூ வித்துடு வேன். பூ வாங்கவே காசில்லை. மார்கெட்ல கடன் சொல்லி வாங்கிட்டு வந்தேன். என்கிட்ட ரெகுலரா வாங்குறவங்க எல்லாம் சில்லறை இல்லைன்னு சொல்லிட்டுப் போறாங்க. இன்னைக்கு பொழுதை எப்படி ஓட்டுறதோ” என்று புலம்பும் சாந்தி அக்காவைப் பற்றி நமக்கென்ன கவலை? இவர்களை எல்லாம் ஒழித்துக்கட்டிவிட்டுப் பிறக்கப் போகும் புதிய இந்தியாவை வரவேற்க இப்போதே தயாராவோம்.
மத்திய அரசுக்கு,
மத்திய வர்க்கத்து இல்லத்தரசியின் மடல். கடந்த நவம்பர் 8-ம் தேதி இரவு எட்டு மணியளவில் தாங்கள் ஆடிய செல்லும் நோட்டு, செல்லாத நோட்டு மங்காத்தாவால் ஸ்தம்பித்துப்போன கூட்டத்தில் நானும் ஒருத்தி. காரணம் அப்போது என்னிடம் இருந்த கறுப்புப் பணம் 35 ஆயிரம் ரூபாய். “எவ்வளவு வச்சிருக்க? எல்லாத்தையும் எடு. இல்லைன்னா அது வெறும் பேப்பர்தான்” என்று என் கணவர் பயமுறுத்தினார். அவரிடம் கொடுத்தாலும் திரும்ப கைக்கு வராது என்பதால், அது எனக்கு வெறும் பேப்பர்தான்.
“இனிமேல் வங்கி அட்டை மூலமாகத்தான் பணப் பரிமாற்றம் நடக்கப் போகுது. இனி என்னை ஏமாத்தி எதுவும் சுருட்ட முடியாது. நாட்ல மட்டுமில்லை, வீட்லயும் பதுக்க முடியாது தெரியும்ல” என்று அகமகிழ்ந்தவரைப் பரிதாபமாகப் பார்த்தேன். நவம்பர் 6-ம் தேதிதான், “மகனுக்கு ஸ்கூல் பீஸ் கட்டணும். உங்கிட்டே எவ்ளோ இருக்கோ குடு. அப்புறமா தர்றேன்” என்று ஒப்பந்தம் போட்டார்.
இல்லத்தரசிகளின் கறுப்புப் பணத்தில்தான் முக்கால்வாசி இந்தியா இயங்குகிறது என்ற உண்மை உங்களுக்குத் தெரியுமா? பிள்ளைகளின் படிப்பு, கல்யாணம், வீடு, நிலம் வாங்க, நல்லது கெட்டதுக்கு செய்முறை செய்ய என கணவன்மார்களின் தேவை அனைத்துக்குமே பக்கத்து வீட்டு அக்காவிடம் வாங்கிய கைமாத்தாக, நகையை அடகுவைத்த பணமாக வலம்வருவது எல்லாமே கள்ளப் பணம்தான் பிரதமரே!
இந்தத் திட்டத்தினால் நாட்டுக்கு எவ்வளவோ நன்மைகள் கிடைக்கக்கூடும் என்றாலும், நாட்டைக் காக்கும் இந்தப் போரில் நாங்கள் பங்குபெற முடியாமல் போனதற்கு வருந்துகிறோம். ரூபாய் நோட்டு பற்றாக்குறையைச் சமாளிக்க நோட்டு அடிக்கும்போது எங்களையும் கவனத்தில் கொண்டு சற்று கூடுதலாகவே அடிக்கும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
ரூபாய் நோட்டுக்குள் ஜிபிஎஸ் பொருத்துவது தொடர்பாகப் பலரும் ஆலோசனைகளை வழங்கிவரும் வேளையில், இல்லத்தரசிகள் சங்கத்தின் சார்பாக நாங்களும் சில யோசனைகளை முன்வைக்கிறோம். டாஸ்மாக் கடைகளுக்குச் செல்லும் நோட்டுகளை செல்லாத நோட்டுகளாக அறிவிப்பது, காலில் செருப்பை மாட்டிக்கொண்டு, ‘300 ரூபாய் கொடு, வந்து தர்றேன்’ என்று கேட்கும் கணவன்களைத் திருத்துவது இப்படி ஏதாவது திட்டம் இயற்றினால் கறுப்புப் பண ஒழிப்பில் நீங்கள் எதிர்பார்க்கும் பலனைப் பெறலாம். நன்றி!
- சஞ்சலா ராஜன், கோயம்புத்தூர்.
வாசகர் வாசல்: பதுக்கல் நல்லது! |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT