Published : 06 Nov 2016 02:14 PM
Last Updated : 06 Nov 2016 02:14 PM
“வீட்டில் இருக்கிற பெண்களுக்கு ஒருவித கஷ்டம் என்றால், வேலைக்குப் போகும் பெண்களுக்கு இன்னொரு விதமான கஷ்டம்” என்று கீரையைக் கிள்ளிக்கொண்டே பேசினார் கமலா பாட்டி.
“யாருக்கு, என்ன பிரச்சினைன்னு கொஞ்சம் தெளிவா சொல்லுங்க பாட்டி” என்றார் கல்பனா.
“என்ன ஆன்ட்டி, போன வாரம் சமூக வலைத்தளங்களில் இந்தப் பிரச்சினைதானே ஓடிக்கிட்டு இருந்தது… உங்களுக்குத் தெரியாதா?” என்று ஆச்சரியப்பட்டாள் கனிஷ்கா.
“வங்கியில் ஒரு பெண் வேலை செய்யும் விதத்தை யாரோ வீடியோவா எடுத்து வெளியிட்டிருக்காங்க. அதுக்குப் பிரபல எழுத்தாளர் ஒருவர், அந்தப் பெண் கீரை ஆய்வதற்குக்கூடத் தகுதியில்லாதவர் என்று மிக மோசமான கருத்துகளைத் தெரிவித்திருந்தார். பலரது விமர்சனத்துக்கும் ஆளான அந்தப் பெண், பிரேமலதா ஷிண்டே. மகாராஷ்டிர வங்கியின் புனே கிளையில் வேலை செய்யறாங்க.
வரும் பிப்ரவரியோட அவங்க பணிக் காலம் நிறைவடையுது. அவங்களுக்கு இரண்டு முறை மாரடைப்பும் ஒருமுறை பக்கவாதமும் ஏற்பட்டிருக்கு. அப்படியும் அவங்க வேலை பார்க்க விரும்பியிருக்காங்க. அவங்க ஆர்வத்தைப் புரிந்துகொண்ட வங்கி, தனி கவுன்ட்டர் ஒதுக்கிக் கொடுத்திருக்கு. அவங்க மிகக் கவனமா வேலை செய்றதை அந்த வீடியோவில் பார்க்கலாம். இந்த உண்மைகளை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்தவர் குந்தன் ஸ்ரீவாஸ்தவா” என்று படபடவென்று பொரிந்து தள்ளினார் கமலா பாட்டி.
“ஒரு பெண் வேலை செய்வதை, அவருக்குத் தெரியாமல் வீடியோ எடுத்ததும் அதைச் சமூக வலைத்தளங்களில் பரப்பியதும் அநாகரிகம். அதை ஒரு எழுத்தாளர் கீழ்த்தரமான கருத்துகளோடு வெளியிட்டது அநாகரிகத்தின் உச்சம். அதோடு கீரை ஆய்வது மட்டமான வேலையும் இல்லை” என்றார் கல்பனா.
“ஆன்ட்டி, உலக விஷயங்களை எல்லாம் கரைத்துக் குடித்தவர் என்று சொல்லிக்கொள்ளும் ஒருவரே பெண்களைப் பற்றி இவ்வளவு மோசமாகக் கருத்துகளை வைத்திருக்கும்போது, சாதாரண மனிதர்களைப் பற்றி என்ன சொல்ல முடியும்? இவ்வளவுக்கும் பிரேமலதா இரண்டு நிமிடங்களுக்கும் குறைவான நேரத்தில் வேலையை முடித்திருக்கிறார். அவரைக் குறைசொல்ல ஒன்றும் இல்லை” என்றாள் கனிஷ்கா.
“பெண்கள் இப்போதான் வேலைக்கு வர ஆரம்பித்திருக்கிறார்கள். ஒரு பெண் வேலைக்குப் போவதற்கும் ஒரு ஆண் வேலைக்குப் போவதற்கும் இங்கே நிறைய வித்தியாசம் இருக்கு. ஜப்பான், தைவான், தென்கொரியா, சீனா, இந்தோனேசியா போன்ற நாடுகளில் மாதவிடாய் விடுப்புத் திட்டம் (Menstrual Leave Policy) அமலில் இருக்கு. இதே திட்டத்தை நம்ம நாட்டிலும் அமல்படுத்தணும்னு நிறைய பேர் கேட்க ஆரம்பிச்சிருக்காங்க. இப்போதைக்கு விவாதத்துக்கு உரிய விஷயமாகவே இருந்தாலும் எதிர்காலத்துல இது நடைமுறைக்கு வரணும்” என்ற கல்பனா, கமலா பாட்டி கொடுத்த அதிரசத்தை எடுத்துச் சுவைத்தார்.
“ஆணும் பெண்ணும் சமமாக ஒரே வேலையைச் செய்யும்போது, ஆணுக்கு அதிகமாகவும் பெண்ணுக்குக் குறைவாகவும் சம்பளம் கொடுக்கப்படுது. சம வேலைக்குச் சம ஊதியம் என்ற சட்டம் இருந்தாலும் பெரும்பாலும் கடைபிடிக்கப்படுவதில்லை. அதிலும் கட்டிட வேலைகள், விவசாய வேலைகள் போன்ற அமைப்புசாரா பணிகளில் இருப்பவர்களுக்குச் சம ஊதியம் கிடைப்பதில்லை. பாலினப் பாகுபாடு காட்டுவதோடு பெண்களின் உழைப்பையும் சுரண்டுறாங்க” என்று சொன்னார் கமலா பாட்டி.
மைசூர்பாவை வாயில் போட்டுக்கொண்ட கனிஷ்கா, “குஷ்பு சொன்னதைக் கேட்டீங்களா பாட்டி? தமிழ் சினிமாவுல பெண்களை ஹீரோக்கள் பின்தொடர்கிறார்கள். ஆனால் அந்தப் பெண் பிடிக்கவில்லை என்று சொன்னால் வெட்டிக் கொல்வதோ, ஆசிட் ஊற்றுவதோ இல்லையேன்னு சினிமாக்காரர்களுக்கு சப்போர்ட் செய்யறாங்க. ஹீரோ எவ்வளவு மோசமான ரவுடியா இருந்தாலும் அழகான பெண்ணைப் பார்த்ததும் காதலிக்கலாம், பின்தொடரலாம், கட்டாயப்படுத்தலாம் என்று காட்டுவதே மிகப் பெரிய வன்முறை இல்லையா? ரவுடிக்கு அழகான பெண் மீது காதல் வரலாம், ஆனால் அந்தப் பெண்ணுக்கு எந்த விதத்தில் இந்த ரவுடி மீது காதல் வரும்? லாஜிக்கே இல்லாத சினிமா ஹீரோக்களுக்கு கண்மூடித்தனமா சப்போர்ட் செய்யக் கூடாது” என்றாள்.
“எனி குட் நியூஸ் (Any Good News) என்ற வீடியோவை வெளியிட்டிருக்கிறார் சோபியா அஷ்ரப். மூன்று நிமிடத்தில் சமூகத்துக்கு மிக முக்கியமான விஷயத்தைச் சொல்லியிருக்கார். திருமணமான ஒரு பெண்ணிடம் அவளது தாய், ‘ஏதாவது நல்ல செய்தி இருக்கிறதா?’ என்று கேட்பதில் தொடங்குகிறது காட்சி. அவர் கேட்கும் நல்ல செய்தி மகள் கர்ப்பமாக இருக்கிறாளா என்பதைத் தெரிந்துகொள்வதற்கானது.
ஒரு பெண்ணின் சாதனை அவளது தாய்மை என்றே இந்தச் சமூகம் வரையறுத்து வைத்திருக்கிறது. திருமணத்துக்குப் பின் அவள் விரும்பும்போது குழந்தை பெற்றுக்கொள்ளட்டுமே, அதனால் சமூகத்துக்கு என்ன கஷ்டம் என்று பல கேள்விகளை முன்வைத்துள்ளது இந்த வீடியோ.”
கமலா பாட்டியும் கனிஷ்காவும் வேகமாகக் கைதட்டினார்கள்.
தொலைக்காட்சியில் கமல், கவுதமி பிரிவு பற்றிய செய்திகள் திரும்பத் திரும்ப வந்துகொண்டிருந்தன.
“பிரபலம் என்பதாலேயே பிரிவு இவ்வளவு பெரிய செய்தியாகிடுது. சேர்ந்து வாழ்ந்தவங்க ஏதோ ஒத்துவராமல்தான் பிரிய முடிவு செய்யறாங்க. அந்தப் பிரிவை நாம் மதிக்கணும். அவங்க தனிப்பட்ட விஷயங்களுக்கு எல்லாம் கருத்துச் சொல்லிட்டிருக்கக் கூடாது. கவுதமி ரொம்ப நாகரிகமாக விலகல் முடிவை அறிவிச்சிருக்காங்க. இருவரும் அவரவர் வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் வாழ வாழ்த்துகளைத் தெரிவிப்போம்” என்ற கமலா பாட்டி, தொலைக்காட்சிப் பெட்டியை அணைத்தார்.
“பாட்டி, மழை வர்ற மாதிரி இருக்கு. நாங்க கிளம்பறோம்” என்று சொன்ன கனிஷ்கா, கல்பனா ஆன்ட்டியுடன் கிளம்பினாள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT