Published : 27 Nov 2016 01:04 PM
Last Updated : 27 Nov 2016 01:04 PM

திரைக்குப் பின்னால்: பிடித்த வேலையில் வலியும் சுகமே

2டி அனிமேட்டராகத் தனது பணியைத் தொடங்கி, தற்போது மலையாளப் படங்களுக்கு சப்-டைட்டில் அமைக்கும் கடினமான பணியைச் செய்துவருகிறார் துர்கா.

2டி அனிமேட்டர் ஆர்வம் எப்படி வந்தது?

பிடித்த காரியத்தைத் தொழில்முறையாக மாற்ற முடிந்த ஒரு சிலரில் நானும் ஒருத்தி. கலையின் மீதான ஆர்வம், என் அப்பாவால் உந்தப்பட்டது. முதலில் சார்டட் அக்கவுண்டண்ட் ஆக வேண்டும் என்று நினைத்தாலும் ஏதோ ஒன்று என்னைத் தடுத்தது. ஓவியம் வரைவதிலும் வண்ணம் தீட்டுவதிலும் ஆர்வம் அதிகமாக இருந்தது.

1996-ம் ஆண்டு பெண்டாமீடியா நிறுவனத்தில் 2டி அனிமேட்டராக வேலைக்குச் சேர்ந்தேன். பிறகு என் வாழ்க்கையைத் திரும்பிப் பார்க்கக்கூட நேரமில்லை. என் மனதுக்கு நெருக்கமான விஷயமே தொழிலானது. ஒவ்வொரு நாளும் புதிதாக எதையாவது கற்றுக்கொண்டேன். செய்யும் வேலை உங்களுக்குப் பிடிக்கும்போது, அதனால் ஏற்படும் வலிகள்கூட சுகமாக மாறிவிடும்.

2டி அனிமேஷனில் நீங்கள் எதிர்கொண்ட சவால்கள்?

2டி அனிமேஷன் மிகவும் சுவாரசியமானது. அதே நேரத்தில் மிகச் சிக்கலானது. அதைக் கையாளப் பொறுமை தேவை. ஒவ்வொரு ஃபிரேமையும் வரைய வேண்டும். சிறிய அசைவு இருந்தால்கூட தரம் போய்விடும். 2டி அனிமேஷனில் நேரத்தைப் பேணுவது மிக முக்கியம். நேரம் குறித்துச் சரியாகப் புரிந்துகொள்ள பறவைகள், விலங்குகளின் அசைவுகளைப் பார்க்கச் சொன்னார்கள். மனிதர்களின் அசைவுகளையும் ஒரு அனிமேட்டரின் பார்வையிலிருந்து கண்காணித்தேன். இது, வரையும் பொருட்களின் அசைவுகளைச் சரியான நேரத்துக்குப் பொருத்த உதவியது. இதற்கு முன் எப்போதும் இப்படி நுண்விவரங்களைப் பார்த்ததில்லை. இயற்கையை வேறொரு கோணத்திலிருந்து கொண்டாட ஆரம்பித்தேன்.

நீங்கள் 2டி அனிமேட்டராக எந்தெந்த படங்களில் பணியாற்றினீர்கள்?

‘மிஸ்டர் டூன்ஸ்’, ‘யூ சீக்கி மன்க்கி’, ‘தி ஹவுஸ் ஆஃப் விண்ட்’, ‘தி வைட் எலிஃபண்ட்’, ‘பைபிள் ஸ்டோரீஸ்’ போன்ற பல காணொலிகளில் வேலை செய்திருக்கிறேன். பெண்டாமீடியாவில் இருக்கும்போதே வார்னர் பிரதர்ஸின் ரிச் அனிமேஷன் ஸ்டூடியோவுக்காக வேலை செய்யும் வாய்ப்பு கிடைத்தது. ‘தி கிங் அண்ட் ஐ’ என்ற 2டி அனிமேஷன் படத்தில் இங்க் அண்ட் பெயிண்ட், கம்போஸிட்டிங், ரெண்டரிங் ஆகிய வேலைகளைக் கவனித்தேன். அது புதுவிதமான அனுபவமாக இருந்தது. ‘ராஜு சாச்சா’ என்ற இந்தி படத்தின் ஒரு பாடலில் அனிமேஷன், கம்போஸிட்டிங் செய்த அணியில் நானும் பங்கு வகித்தேன்.

வேலையையும் குடும்பத்தையும் எப்படிச் சமாளிக்கிறீர்கள்?

பெண்டாமீடியாவில் இரவு நேர ஷிஃப்டில் வேலை செய்வதும் பாதுகாப்பாகவே இருந்தது. அலுவலக பேருந்தில் வீட்டில் விட்டுவிடுவார்கள். வீட்டிலும் எனக்கு முழு ஆதரவு. 2012-லிருந்து, அலுவலகம் சென்ற நேரம் போக, வீட்டிலிருந்தபடியே மலையாளத் திரைப்படங்களுக்கு சப்-டைட்டில் எழுதும் வேலையைச் செய்ய ஆரம்பித்தேன். இந்த சப்-டைட்டில் வேலையில், வாடிக்கையாளர் கொடுக்கும் ஒலி/ஒளிக்கு ஏற்றவாறு ஆங்கில மொழிபெயர்ப்பு வார்த்தைக்கு வார்த்தை பொருந்துகிறதா என்று சரிபார்க்க வேண்டும். பாடல்களை மட்டுமே முழுதாக மொழிபெயர்க்க வேண்டியிருந்தது. அவற்றுக்கு சகோதரி, அம்மாவின் உதவியைப் பெற்றுக்கொண்டேன்.

தற்போது என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள்?

2016-ல், கலை ஆலோசகராக வேலை பார்த்துக்கொண்டிருந்தேன். ஒரே நேரத்தில் இரண்டையும் சமாளிக்க முடியவில்லை. அதனால் வேலையை விட்டுவிட்டேன். தற்போது வீட்டிலிருந்துகொண்டே சப்-டைட்டில் வேலைகளைப் பார்த்துவருகிறேன். ‘த்ரிஷ்யம்’, ‘பாஸ்கர் தி ராஸ்கல்’ உள்ளிட்ட பல மலையாளப் படங்களுக்கு சப்-டைட்டில் அமைத்துக் கொடுத்திருக்கிறேன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x