Published : 13 Nov 2016 02:32 PM
Last Updated : 13 Nov 2016 02:32 PM
“ரொம்ப துறு துறுன்னு இருக்கான். படிக்கிறதுல கொஞ்சம் பிரச்சினை. அவனைப் பிடிச்சி உட்கார வைக்கவே முடியலை” என்று அலுத்துக் கொள்ளாத பெற்றோர் இன்று குறைவு. சில குழந்தைகளின் அதீத உற்சாகத்துக்குக் காரணம் டிஸ்லெக்சியாவாகவும் (Dyslexia) இருக்கலாம். உலகளவில் 10 - 15 சதவீத குழந்தைகளுக்குக் கற்றலில் குறைபாடு இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
கற்றல் குறைபாடு என்றால்?
படிப்பதிலும் எழுதுவதிலும் ஆறு வயதுவரை சிரமப்படுவது, ஒரு வார்த்தையை வேறு வார்த்தையாகப் புரிந்துகொள்வது, எழுத்துகளை அவற்றின் வரிவடிவத்தைக் கொண்டு அடையாளம் காண்பதில் குழப்பம், படித்தவற்றை நினைவில் நிறுத்திக்கொள்ள இயலாமல் போவது என்று பல தடங்கல்களைச் சந்திக்கிறார்கள். எழுத்துகளை அடையாளம் காண முடியாமல் ஒரே பிழையைத் திரும்பத் திரும்பச் செய்வார்கள். தலைகீழாகவும் எழுத்து களின் இடத்தை மாற்றியும் எழுதுவார்கள். வலது கால் செருப்பை இடது காலிலும் இடது கால் செருப்பை வலது காலிலும் மாட்டுவார்கள்.
ஏன் ஏற்படுகிறது?
மூளையில் ஏற்படும் சில பிரச்சினைகளால் இந்தக் குறைபாடு உண்டாகலாம். குறிப்பாக மரபு ரீதியான பிரச்சினையாகவே டிஸ்லெக்சியா கருதப்படுகிறது.
எப்படிச் சரி செய்வது?
சரியான வழிகாட்டுதல் இருந்தால் டிஸ்லெக்சியாவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை, சாதாரண குழந்தைகளைப் போல் படிக்கவும் எழுதவும் வைக்க முடியும். அவர்களுக்குப் புரியும்படி சொல்லித்தரும் சிறப்பு ஆசிரியர்களிடம் சில நாட்கள் கற்றுக்கொண்டால், பிறகு அவர்களாகவே படிக்கத் தொடங்கிவிடுவார்கள்.
“இந்தியாவில் இதை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் ஏற்பட ‘தாரே ஜமீன் பர்’ திரைப்படம் ஒரு நல்ல காரணியாக அமைந்துவிட்டது. படிப்பை மட்டும் அளவுகோலாக வைத்துத் திறமையை முடிவு செய்யும் பெற்றோருக்குப் புரியவைக்க முடியாமல் தவிக்கும் குழந்தைகளுக்கும், படிப்பதைத் தவிரப் பிற விஷயங்களில் சூட்டிகையாக இருக்கும் குழந்தையின் நிலையைப் புரிந்துகொள்ள முடியாமல் சிரமப்படும் பெற்றோருக்கும் உள்ள இடைவெளி சரிசெய்யப்பட வேண்டியது மிக அவசியம்” என்கிறார் மெட்ராஸ் டிஸ்லெக்சியா அசோசியேஷியன் ஒருங்கிணைப்பாளர் ஹரிணி மோகன்.
சென்னையில் உள்ள 100 பள்ளிகளில் 3500 ஆசிரியர்களுக்கு டிஸ்லெக்சியா குறைபாடு டைய குழந்தைகளை எப்படிக் கண்டறிவது, அவர்களை எப்படிப் பயிற்றுவிப்பது என்று பயிற்சி அளித்திருக்கிறார் ஹரிணி. பிற மாவட்டங்களுக்கும் திட்டத்தை விரிவுபடுத்தத் தன் பயிற்றுநர்களுடன் தயாராகிவருகிறார்.
“எனக்கு ஆசிரியராக விருப்பம். டிஸ்லெக்சியா குழந்தைகளுக்கான ஆசிரியரானது எதிர்பாராமல் நிகழ்ந்தது. மெட்ராஸ் டிஸ்லெக்சியா அசோசியேஷ னுடன் இணைந்து 15 ஆண்டுகளாகப் பணியாற்றிவருகிறேன். கற்றலில் குறை பாடுடைய குழந்தைகளைக் கண்டறிந்து, அவர்களுக்குப் பயிற்சியளிப்பது, சிறப்புப் பயிற்சி பெற வேண்டிய குழந்தைகளை உரிய பயிற்சி மையங்களுக்கு அனுப்பிவைப்பது ஆகியவை குறித்து ஆசிரியர்களுக்குப் புரியவைக்கிறோம்” என்று தன்னை அறிமுகம் செய்துகொண்டார் ஹரிணி.
பெற்றோர் புரிந்துகொள்கிறார்களா என்று கேட்டால், “சில நேரங்களில் பெற்றோர், நாங்கள் இருவருமே சாதாரணமாகத்தான் இருக்கிறோம். எங்கள் குழந்தைக்கு அப்படி இருக்க வாய்ப்பில்லை; நான் பத்தாம் வகுப்பில் முதல் மதிப்பெண் வாங்கினேன் என்றெல்லாம் கூறி, உண்மையை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள். அவர்களுக்கு இது ஒரு குறைபாடுதான் என்று புரிய வைப்பது கொஞ்சம் சிரமமாகத்தான் இருக்கும். பல்வேறு பள்ளிகளில் சேர்த்துவிட்டு, மீண்டும் எங்களிடமே வருவார்கள். நன்றாகப் படிக்கக்கூடிய, படைப்பாற்றல் நிரம்பிய இந்தக் குழந்தைகளைத் தேவையின்றி கஷ்டப்படுத்திவிடுகிறார்கள். இதனால் சில குழந்தைகள் தாழ்வு மனப்பான்மைக்கு ஆளாகலாம். பதின்பருவத்தில் எதிர்த்துப் பேசுதல், கோபம், பிடிவாதம் போன்று எதிர்மறை எண்ணங்கள் வெளிப்படலாம். அதனால் பெற்றோர் தங்கள் குழந்தைகளிடம் இருக்கும் உள்ளார்ந்த திறன்களை அறிந்துகொள்ள முயற்சி செய்ய வேண்டும்” என்கிறார் ஹரிணி.
ஹாலிவுட் நடிகர் டாம் க்ரூஸ், இயக்குநர் ஸ்டீவன் ஸ்பீல்பர்க், ஓவியர் லியானார்டோ டாவின்சி, விஞ்ஞானி ஐன்ஸ்டைன், எழுத்தாளர் அகதா கிறிஸ்டி என்று உலகப் பிரபலங்கள் முதல் நடிகர் அபிஷேக் பச்சன், சமையல் கலைஞர் வெங்கடேஷ் பட், ஐஆர்எஸ் அதிகாரி நந்தகுமார் என்று இந்தியப் பிரபலங்கள்வரை பலரும் டிஸ்லெக்சியா குறைபாட்டால் பாதிக்கப்பட்டு, பிறகு சாதனையாளர்களாக மாறியவர்களே என்று உதாரணங்களோடு சொல்லி நம்பிக்கை ஏற்படுத்துகிறார் ஹரிணி.
ஹரிணி
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT