Published : 27 Nov 2016 12:55 PM
Last Updated : 27 Nov 2016 12:55 PM
எஸ்தர் மலாங்கூவின் (Esther Mahlangu) ஓவியங்கள் உலகப் புகழ்பெற்றவை. பிஎம்டபிள்யூ காரிலும் பிரிட்டிஷ் போயிங் விமானத்தின் வாலிலும் ஓவியங்கள் தீட்டிய முதல் பெண்.
தலையிலும் நெற்றியிலும் மணியால் செய்யப்பட்ட பட்டைகள், நீண்ட கழுத்தில் அடுக்கடுக்காகச் செம்பு வளையங்கள், துணியால் செய்யப்பட்ட மாலைகள், கைகளிலும் கால்களிலும் வளையங்கள், உடலைச் சுற்றிக் கண்கவர் துணி என்று தனது ஓவியங்களைப் போலவே வசீகரிக்கிறார் எஸ்தர்.
தென் ஆப்பிரிக்காவில் வசிக்கும் 82 வயது எஸ்தர், 10 வயதிலேயே பாரம்பரிய சுவர் ஓவியங்களைக் கற்றுக்கொள்ள ஆரம்பித்து விட்டார். பாட்டியும் அம்மாவும் இவருடைய ஆசிரியர்கள். மண் வீடுகளின் சுவர்களில் சாணத்தால் மெழுகி, ஓவியங்களைத் தீட்டுவது தெபெலே (Ndebele) பழங்குடி மக்களின் வழக்கம். பிறப்பு, இறப்பு, திருமணம், ஆண்களுக்காக நடத்தப்படும் மதச் சடங்கு போன்ற நிகழ்ச்சிகளின்போது வீடுகள் ஓவியங்களால் அலங்கரிக்கப்படுகின்றன.
பார்ப்பதற்கு எளிமையாகத் தோன்றினாலும் இந்த ஓவியங்களை வரைவது அவ்வளவு எளிதல்ல. வட்டம், சதுரம், செவ்வகம், முக்கோணம் என்று வடிவியல் (Geometric) சார்ந்தவை இவர்களது ஓவியங்கள். கோழி இறகுகளும் குச்சிகளும் தூரிகைகள். மஞ்சள், பச்சை, சிவப்பு, நீலம் போன்ற அடர் நிறங்களைச் சுற்றி வரையப்படும் கறுப்புக் கோடுகள் கண்களைக் கவர்கின்றன.
“எங்கள் இனத்தில் பெண்கள் இந்த ஓவியங்களை வழிவழியாகக் கற்றுக்கொள்வார்கள். அப்படித்தான் நானும் கற்றுக்கொண்டேன். இயற்கையாகக் கிடைக்கும் வண்ணங்களைக் கொண்டுதான் ஓவியம் தீட்டுவோம். அதனால் சில வண்ணங்களை மட்டுமே பயன்படுத்த முடிந்தது. இன்று பெயிண்ட்களைப் பயன்படுத்துவதால் அடர், வெளிர் நிறங்களை விரும்பம்போலப் பயன்படுத்திவருகிறேன்” என்கிறார் எஸ்தர்.
கலை, வரலாற்று ஆசிரியரான தாமஸ் கிறிஸ்ட், ஐரோப்பியர் ஒருவர் மூலம் எஸ்தரைப் பற்றி அறிந்துகொண்டார். ஒரு கலாச்சார நிகழ்ச்சிக்காக பிஎம்டபிள்யூ காரில் எஸ்தர் வரைவதற்கு ஏற்பாடு செய்தார். 1991-ம் ஆண்டு, பிஎம்டபிள்யூ காரில் வரைந்ததன் மூலம், இந்த அங்கீகாரம் பெற்ற முதல் பெண் என்ற சிறப்பைப் பெற்றார் எஸ்தர். இந்தக் கார் பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தில் இடம்பெற்றுள்ளது. பிறகு பிரிட்டிஷ் போயிங் விமானத்தின் வால் பகுதியில் வரைந்தார். 25 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பிஎம்டபிள்யூ காரில் ஓவியம் தீட்டியிருக்கிறார் எஸ்தர்.
அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்தி ரேலியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் தொடர்ந்து எஸ்தரின் ஓவியங்கள் கண்காட்சிக்கு வைக்கப் பட்டுவருகின்றன. பாரம்பரிய ஓவியங்களை, நவீன வடிவத்துக்கு மாற்றிக்கொண்டதால் எஸ்தர் தன்னையும் தன் கலையையும் நிலை நிறுத்திக்கொண்டார். சுவர், கேன்வாஸ், காகிதம், வாகனம், துணி, மண் பாண்டம், மரச் சாமான்கள், அலங்கார முட்டைகள், கண்ணாடி பாட்டில்கள் என்று பலவற்றிலும் ஓவியங்களைத் தீட்டிவருகிறார்.
கிராமங்களில் இருந்து நகரங் களுக்குப் பெரும்பான்மையான மக்கள் குடிபெயர்ந்ததாலும் செங்கற்களை வைத்து வீடுகளைக் கட்டுவதாலும் பழங்குடி மக்களிடம் இந்தக் கலை மறைந்துவருகிறது. கலையைக் காப்பாற்றுவதற்காக இளைய தலைமுறையினருக்கு வகுப்புகள் எடுத்து வருகிறார் எஸ்தர்.
“என் கைகளில் நடுக்கம் இல்லாமல் இந்த வயதிலும் வரைய முடிகிறது என்பதால், கோடுகள் போட அளவுகோலைப் பயன்படுத்து வதில்லை. எங்கள் பழங்குடிப் பெண்களில் அயல் நாடுகளுக்குச் சென்ற ஒரே பெண் நான்தான். எனக்குப் பயணங்கள் பிடிக்கின்றன. ஆனால் உணவுதான் பிடிப்பதில்லை. எங்கே சென்றாலும் எங்கள் கிராமத்துக்கு எப்போது திரும்புவோம் என்றுதான் தோன்றும். எய்ட்ஸ், மலேரியா, காச நோய் போன்றவற்றைத் தடுப்பதற்கும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் சர்வதேச மதுபான நிறு வனத்துடன் ஒப்பந்தம் செய்திருக்கிறேன். அவர்கள் மூலம் என் ஓவியங்களுக்குக் கிடைக்கும் பாதி வருமானத்தை நோய்களுக்கு எதிரான போருக்குக் கொடுத்துவிடுகிறேன். என் ஓவியங்களால் மக்களுக்கு உதவ முடிவதையும் பல நாட்டு மக்கள் ஓவியங்களைப் பாராட்டு வதையும் நினைக்கும்போது என் இதயம் மகிழ்ச்சியால் நிரம்பி வழிகிறது” என்கிறார் எஸ்தர் மலாங்கூ.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT