Published : 20 Nov 2016 12:48 PM
Last Updated : 20 Nov 2016 12:48 PM

வானவில் பெண்கள்: சமூக அக்கறைக்குக் கிடைத்த விருது!

இருபது ஆண்டுகளுக்கு முன் ஊடகத் துறையில் பெண்களின் எண்ணிக்கையை விரல்விட்டு எண்ணிவிடலாம். ஊடகத் துறையில் பணியாற்றினாலும் குறிப்பிட்ட சில வேலைகள் மட்டுமே அவர்களுக்குத் தரப்படும். அரசியல், பொருளாதாரம் போன்ற பிரிவுகளில் செய்தி சேகரிக்கவோ, கட்டுரை எழுதவோ பெண்களை அனுமதிக்க மாட்டார்கள். இது பெண்ணுக்குப் பாதுகாப்பானது அல்ல என்று சொல்லிச் சொல்லியே பல கதவுகள் அடைக்கப்பட்டிருந்தன. ஆங்கில ஊடகத்தில் பணியாற்றிய பெண்களுக்கு ஓரளவு சுதந்திரம் வழங்கப்பட்டிருந்தது. அப்படி தனக்கு அனுமதிக்கப்பட்ட எல்லைக்குள் நேர்த்தியான செய்திக் கட்டுரைகளைக் கொடுப்பதை வழக்கமாக்கிக்கொண்டார் ஜோதி தத்தா.

சமூக அவலங்களைச் செய்தியாக மட்டுமே பதிவுசெய்யாமல், அதற்குப் பின்னால் இருக்கும் சமூகக் காரணிகளைப் பற்றியும் தீர்வுக்கான வழிமுறைகள் குறித்தும் இவரது கட்டுரைகள் அலசின. பொருளாதாரம், சுற்றுச்சூழல், காட்டுயிர்ப் பாதுகாப்பு, மருந்துத் துறை என இவர் தேர்ந்தெடுத்து எழுதிய துறைகள் ஒவ்வொன்றும் சமூக நோக்கு கொண்டவை. அந்தச் சமூகப் பார்வைதான் தேசிய அளவிலான ஊடக விருதை ஜோதிக்குப் பெற்றுத்தந்திருக்கிறது.

விசாலப் பார்வை

ஊடகத் துறையில் உயிரினங்கள் நலன் சார்ந்து செயல்பட்ட ஊடகவியலாளர்களுக்கு இந்திய விலங்குகள் பாதுகாப்பு அமைப்புகளின் கூட்டமைப்பு (FIAPO) சார்பில் சமீபத்தில் விருது வழங்கப்பட்டது. எட்டுப் பேர் விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். சமீபத்தில் மும்பையில் நடைபெற்ற விழாவில் பங்கேற்று விருது பெற்றுத் திரும்பியிருக்கும் ஜோதி தத்தா, தற்போது ‘பிசினஸ் லை’னில் துணை ஆசிரியராகப் பணியாற்றிவருகிறார்.

ஜோதி, இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் வசித்திருக்கிறார். அந்தப் பயணமும் அனுபவமுமே அவரது பார்வையை விசாலமாக்கின.

இலக்கிய அடித்தளம்

“என் பூர்விகம் கேரளா. பிறந்து, வளர்ந்தது டெல்லியில். பிறகு சென்னையில் கொஞ்ச காலம் இருந்தேன். வங்காளியை மணந்துகொண்டேன். சென்னை, கொல்கத்தா, டெல்லி ஆகிய நகரங்களில் பணியாற்றினேன். தற்போது மும்பையில் வசிக்கிறேன்” என்று சிரித்தபடி பேசும் ஜோதி தத்தா, பல ஊர்களில் வசித்ததால் பல மொழிகளையும் தெரிந்துவைத்திருக்கிறார்.

கல்லூரியில் படித்த ஆங்கில இலக்கியம்தான் பத்திரிகைத் துறை மீதான ஆர்வத்துக்கு அடித்தளம் அமைத்தது என்கிறார் ஜோதி. அந்த ஆர்வத்துக்குச் செயல் வடிவம் கொடுத்தார். சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் ஊடகவியல் பிரிவில் சேர்ந்து படித்தார். பிறகு ஒரு ஆங்கில நாளிதழில் பயிற்சி மாணவப் பத்திரிகையாளராகச் சேர்ந்தார். பயிற்சி முடிந்ததும் அங்கேயே பணியில் அமர்ந்தார்.

தொலைந்துபோன குழந்தைப் பருவம்

“இருபது ஆண்டுகளுக்கு முன் நான் வேலைக்குச் சேர்ந்தபோது, முதலில் எனக்குக் கொடுக்கப்பட்ட துறை மருத்துவம். வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களுடன் தொடர்புடையது மருத்துவத் துறை என்பதால், நான் விரும்பியே அதை ஏற்றுக்கொண்டேன். படிக்க வேண்டிய வயதில் கட்டாய வேலைகளில் ஈடுபடுத்தப்படும் குழந்தைத் தொழிலாளர்கள் என்னை வெகுவாகப் பாதித்தனர். சென்னை யில் இருக்கும் குழந்தைத் தொழிலாளர்கள் குறித்துத் தொடர்ந்து எழுதினேன். பிறகு அது ‘தொலைந்துபோன குழந்தைப் பருவம்’ என்ற தலைப்பில் புத்தகமாகவும் வெளியானது” என்கிறார் ஜோதி.

மருத்துவத் துறையில் அரசின் கொள்கை முடிவுகள், அறிவுசார் சொத்துரிமை, மருந்து தயாரிப்புத் துறை ஆகியவற்றைப் பற்றி இவர் தொடர்ச்சியாகக் கட்டுரைகள் எழுதிவருகிறார். சுற்றுச்சூழல் விழிப் புணர்வு அதிகரித்துவரும் இந்நாளில் தொடர்ச்சியாகச் சுற்றுச்சூழல் குறித்தும், காட்டுயிர்ப் பாதுகாப்பு குறித்தும் எழுதிவருகிறார்.

மும்பை தாக்குதலில் சிக்கி…

“குழந்தைத் தொழிலாளர்கள் குறித்து நான் எழுதிய தொடர் கட்டுரைகள் குறித்து எனக்கு எப்போதும் பெருமிதம் உண்டு. காரணம் அப்போது வாசகர்கள் மத்தியில் அவை நல்ல வரவேற்பைப் பெற்றன. வட கிழக்கு மாநிலங்களில் மரம் வெட்டத் தடை விதித்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பு குறித்து ‘பிசினஸ் லை’னில் நான் எழுதிய கட்டுரை குறிப்பிடத்தக்க வரவேற்பைப் பெற்றதில் எனக்கு ரொம்பவே மகிழ்ச்சி. 2008-ல் நடந்த மும்பை தாக்குதல் குறித்து எழுதியதையும் மறக்க முடியாது. நாம் எவ்வளவு எளிதாகத் தாக்குதலுக்கு உள்ளா கிறோம் என்பதை உணர்த்திய சம்பவம் அது. தனிப்பட்ட வகையிலும் அது என்னைப் பெரிதாகப் பாதித்தது” என்கிறார் ஜோதி.

விலங்குகள் பாதுகாப்பு குறித்து தொடர்ந்து எழுதிவருகிறவர்கள் விலங்குகள் பாதுகாப்புக் கூட்டமைப்பின் விருதுக்குப் பரிந்துரைக்கபட்டார்கள். அந்த வகையில் மருந்துகள், அழகு சாதனப் பொருட்களை விலங்குகள் மீது பரிசோதிப்பது, அது பற்றிய சட்ட நெறிமுறைகள், செல்லப் பிராணிகளின் முறையற்ற சந்தை பற்றிய சட்ட வரைவு ஆகியவை குறித்து எழுதியதற்காக ஜோதிக்கு இந்த விருது வழங்கப்பட்டது.

தானாக வந்த விருது

“நான் இந்த விருதுக்கு விண்ணப்பிக்கவே இல்லை. ‘பிசினஸ் லை’னில் தொடர்ந்து நான் எழுதிவந்த கட்டுரைகளைப் பார்த்து, சிலர் இந்த விருதுக்குப் பரிந்துரைக்க, நடுவர் குழுவே நேரடியாக என்னைத் தேர்ந்தெடுத்தது. நேர்த்தியான கருத்து நிச்சயம் தன் இலக்கை அடையும் என்பதற்கு இந்த விருதும் ஒரு சாட்சி” என்று புன்னகைக்கிறார் ஜோதி. கேரளக் கோயில்களில் திருவிழாக்களின்போது யானைகள் துன்புறுத்தப்படுவது குறித்து இவர் எழுதியது மிக முக்கியமான பதிவு.

“செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பதுதான் பத்திரிகையாளரின் முதன்மைப் பணி. ஒவ்வொரு செய்தியை எழுதும்போதும் சமூக அக்கறை சார்ந்த பார்வையும் அவசியம். அரசுத் திட்டங்கள் நமக்கும், நாம் வாழ்கிற சூழலுக்கும் எந்த வகையில் உதவுகின்றன என்பதைக் குறிப்பிட வேண்டியதும் பொறுப்பான பத்திரிகையாளரின் கடமை” என்று சொல்லும் ஜோதி, தன் வார்த்தைகளைக் கட்டுரைகள் மூலம் நிரூபித்தும்வருகிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x