Published : 13 Nov 2016 02:36 PM
Last Updated : 13 Nov 2016 02:36 PM
“புயலும் மழையும் அடித்துக் கொண்டிருந்த கடந்த ஆண்டின் டிசம்பர் 2. எனக்கு வீடு கொளத்தூர். அங்கிருந்து பொது மருத்துவமனைக்கு பஸ் போகவில்லை. அதனால் கோயம்பேடுக்குப் போய், மருத்துவமனையில் மருந்து வாங்கிக்கொண்டு வீட்டுக்கு திரும்பும்போது, மாலை நான்கு மணியாகிவிட்டது” என்றார் புவனா (பெயர் மாற்றப்பட்டுள்ளது).
புவனா ஏன் இவ்வளவு கஷ்டப்பட்டு மருந்து வாங்குவதற்குப் பொது மருத்துவமனைக்கு வர வேண்டும்? அவசரத்துக்கு அருகிலிருக்கும் மருந்துக் கடையில் வாங்கிக்கொள்ளக் கூடாதா? இப்படி நிறையக் கேள்விகள் நம் மனதில் தோன்றலாம்.
சாதாரண தலைவலி, காய்ச்சலுக்காக புவனா மருந்து வாங்க இவ்வளவு தூரம் வரவில்லை. அவர் எச்.ஐ.வி. பாதிப்புக்கு உள்ளானவர். எச்.ஐ.வி. பாதிக்கப்பட்ட ஒருவரை சகஜமாக நடத்தாத சமூகத்தில் வாழ்வதே பெரும் சவால் நிறைந்தது. இதில் யாரிடம் போய் அவர் உதவி கேட்க முடியும்? “அன்னைக்கு என் உயிரைப் பணயம் வச்சிதான் மருந்து வாங்கிட்டு வந்தேன்” என்கிறார் புவனா.
“எச்.ஐ.வி. பாதிப்புக்கு உள்ளானவர்கள், காச நோயாளிகள் போன்றோர் தங்களுக்கான மருந்தை நிறுத்தக் கூடாது. நிறுத்தினால் நோயின் வீரியம் அதிகரித்துவிடும் என்பதுதான் இந்த அவஸ்தைகளுக்குப் பின்னால் இருக்கும் உண்மை” என்கிறார் பாசிட்டிவ் வுமன் நெட்வொர்க் அமைப்பின் தலைவர் கௌசல்யா.
கடந்த ஆண்டு மழையில் இப்படி அவதிப்பட்டு ஏ.ஆர்.டி. மருந்துகளை வாங்கியவர்கள் சிலர்தான். பலர் அவர்களின் அடையாள அட்டைகளை, எண்களை வெள்ளத்தில் பறிகொடுத்தனர். “இந்த அடையாள எண்கள் இருந்தால்தான் அவர்களுக்கான சரியான ஏ.ஆர்.டி. மருந்துகளைக் கொடுக்க முடியும்” என்று சொல்கிறார் கௌசல்யா.
வாழ்நாள் முழுவதும் தொடர் சிகிச்சை எடுத்துக்கொள்ளும் நிலையில் இருக்கும் மக்கள், பேரிடர் காலங்களில் சந்திக்கிற சவால்கள் அதிகம். ‘அவற்றை எதிர்கொள்வது மற்றும் அதற்காக அவர்களைத் தயார்ப் படுத்துவது’ என்னும் தலைப்பில் அக்டோபர் 26-ம் தேதி சென்னை, எழிலகத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு திட்ட ஆணையத்தில், அனில் மெஷ்ரம் ஐ.ஏ.எஸ் தலைமையில் ஒரு கூட்டம் நடத்தப்பட்டது. “தேசியப் பேரிடர் வழிகாட்டல் அட்டவணையில் எச்.ஐ.வி. பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு அளிக்க வேண்டிய தொடர் சிகிச்சையையும் பராமரிப்பையும் உறுதி செய்ய வேண்டும் என்னும் கோரிக்கையும் அந்தக் கூட்டத்தில் வைக்கப்பட்டது.
பாசிட்டிவ் வுமன் நெட்வொர்க், சி ஃபார் உள்ளிட்ட பல தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இதில் பங்கேற்றன. அரசுத் துறை அதிகாரிகள் பலரும் பங்கேற்ற இந்தக் கூட்டத்தில் அரசு மருத்துவமனை ஊழியர்கள், ஆலோசகர்கள், எச்.ஐ.வி. பாதிப்புக்கு உள்ளானவர்கள் அனைவரும் இணைந்து செய்ய வேண்டிய யோசனைகள் முன்வைக்கப்பட்டன.
எங்கே பிரச்சினை?
எச்.ஐ.வி.பாதிப்புக்கு உள்ளானவர் களுக்குப் பல்வேறு கலவையான மருந்துகளைச் சேர்த்து, கூட்டு மருந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. இப்படி அளிக்கப்படும் மருந்துகள் ஒவ்வொரு நோயாளிக்கும் வேறுபடும். உதாரணத்துக்கு ZLN என்பது மூன்று வெவ்வேறு மருந்துகளின் முதல் எழுத்து. பாதிப்புக்கு உள்ளானவர்கள் தங்களுக்கு வழங்கப்படும் மருந்துகளின் முதல் எழுத்தையாவது மறக்காமல் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. பாதிப்புக்கு உள்ளானவர்கள் தங்களின் மருத்துவ விவரங்கள் இல்லாமல், மூன்று முறை ஏ.ஆர்.டி. மருந்துகளைப் போடாமல் இருந்தாலும், உடலில் இருக்கும் கிருமிகள் ஏற்கெனவே சாப்பிடும் மருந்துக்குக் கட்டுப்படாது.
சில பரிந்துரைகள்
கூட்டத்தில் இந்தப் பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டன:
# பாதிப்புக்கு உள்ளானவர்கள் தங்களின் மருத்துவ அட்டை, எண், மருத்துவச் சான்றிதழ்களை ஸ்கேன் செய்து அவற்றைத் தங்களின் மின்னஞ்சல் முகவரியில் வைத்துக்கொள்ளலாம் என யோசனை வழங்கப்பட்டது. இதற்கான தகவல் வங்கியை (Data base) முறையாக அரசு பராமரிக்க வேண்டும்.
# பேரிடர் நடப்பதற்கு முன்பாகவும் நடந்த பின்பும் பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு ஆலோசனைகள் முக்கியம். மன ரீதியாக அவர்களைத் தயார்ப் படுத்த வேண்டும்.
# சமூகம் சார்ந்த அமைப்புகளில் பணிபுரிபவர் களுக்கும் மருத்துவ ஊழியர்களுக்கும் எச்.ஐ.வி. பாதித்தவர்களுக்கு ஏற்படும் பிரச்சினையின் தீவிரத்தைப் புரியவைக்க வேண்டும்.
# ஒவ்வொரு மருந்துக்கும் ஒரு பக்கவிளைவு உண்டு. பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்படும் பக்கவிளைவுகள் குறித்த பல்வேறு தகவல்களையும் எடுத்துக் கூறி, அவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் உதவும் தன்னார்வலர்களுக்கு உரிய போக்குவரத்துக்கான சலுகைகளை அரசு அளிக்க வேண்டும்.
# டி.பி., எச்.ஐ.வி. பாதிப்புக்கு உள்ளானவர் களுக்கு ஒரு மாதத்துக்குப் பதில், இரண்டு மாதங்களுக்கு வரும் வகையில் மருத்துவ மனைகளில் மாத்திரைகளைக் கொடுக்க வேண்டும். இப்படித் தரும் பட்சத்தில் பேரிடர் காலங்களில் பாதிக்கப்பட்டவர்கள் அலைக்கழிக்கப்படுவது தவிர்க்கப்படும்.
விவாதத்தின்போது பெறப்பட்ட பரிந்துரை களை திட்ட ஆணையம் அரசுக்கு சமர்ப்பிக்கும் என உறுப்பினர் செயலர் உறுதி அளித்தார்.
“இந்தப் பரிந்துரைகளை எல்லா மட்டங்களிலும் நடைமுறைப்படுத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் பயனடைவார்கள்.
கடந்த ஆண்டு மழைக்குப் பின், எச்.ஐ.வி. பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு (1,789 பேர்), டெல்லியில் செயல்படும் கூஞ்ச் என்னும் தனியார் தொண்டு நிறுவனம் வழங்கிய நிவாரணப் பொருட்களோடு மருத்துவமனையில் மருந்துகள் பெறுவதற்கு உறுதுணையாக இருந்தோம். அந்த நிலை வராமல் தடுக்கும் பொறுப்பு எல்லோருக்கும் இருக்க வேண்டும்” என்றார் சி ஃபார் அமைப்பின் திட்ட மேலாளர் டேனியல் விநோத் குமார்.
டேனியல் விநோத்குமார்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT