Published : 13 Nov 2016 02:34 PM
Last Updated : 13 Nov 2016 02:34 PM
திறமையும் கவனமும் கைகோத்த புள்ளியில் ஜெயித்திருக்கிறார் துப்பாக்கி சுடும் வீராங்கனை வர்ஷா. பதினோரு வயதில் துப்பாக்கியைப் பிடித்த வர்ஷா, கடந்த எட்டு ஆண்டுகளில் தேசிய, தென்னிந்திய, தமிழக அளவிலான போட்டிகளில் 35 தங்கம், 25 வெள்ளி, 23 வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளார்.
கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வரும் வர்ஷா, சமீபத்தில் மதுரை ரைபிள் கிளப்பில் நடந்த தென்னிந்தியத் துப்பாக்கி சுடும் போட்டிகளில் ஒரு தங்கம், மூன்று வெள்ளிப் பதக்கங்களையும் சாம்பியன் ஆஃப் சாம்பியன் பட்டத்தையும் பெற்று சாதனை படைத்துள்ளார். அவருடன் ஓர் உரையாடல்...
துப்பாக்கி சுடுதலில் ஆர்வம் எப்படி வந்தது?
மதுரை ரைபிள் கிளப்பில் என் அப்பா உறுப்பினராக இருந்தார். ஆறாம் வகுப்பு படிக்கும்போது ஒருநாள் அவருடன் கிளப்புக்குச் சென்றேன். துப்பாக்கி என்னை மிகவும் ஈர்த்தது. என் ஆர்வத்தைப் பார்த்து, என்னை அங்கே உறுப்பினராகச் சேர்த்துவிட்டார் அப்பா. ஒரு மாதப் பயிற்சியிலேயே சென்னையில் நடைபெற்ற போட்டியில் கலந்துகொண்டு வெள்ளிப் பதக்கம் வென்றேன். உடனே என் அப்பா, தன் ஆர்வத்தை நிறுத்திக்கொண்டு, என்னைத் தீவிரமாகப் பயிற்சியில் ஈடுபட வைத்தார்.
அன்று முதல் இன்றுவரை இந்தியா முழுவதும் நடக்கும் துப்பாக்கி சுடும் போட்டிகளுக்கு என்னை அழைத்துச் செல்கிறார். ஏராளமான பதக்கங்களைக் வாங்கிக் குவித்ததால், ஆறு பேர் கொண்ட இந்திய ஜூனியர் அணியில் இடம்பிடித்துவிட்டேன். விரைவில் இந்தியா சார்பில் சர்வதேச துப்பாக்கி சுடும் போட்டிகளில் களம் இறங்கவிருக்கிறேன்.
சாம்பியன் ஆஃப் சாம்பியன் வென்றபோது எப்படி இருந்தது?
துப்பாக்கி சுடும் போட்டியில், சாம்பியன் ஆஃப் சாம்பியன் பட்டம் பெறுவது மிகவும் கடினம். ஆண்களும் பெண்களும் கலந்துகொள்வார்கள். இந்தப் போட்டியில் துப்பாக்கி சுடுவோர் கவனத்தைச் சிதறடிக்கப் பார்வையாளர்கள், சத்தம் போட்டுத் தொந்தரவு செய்வார்கள். எது நடந்தாலும் கவனம் சிதறாமல் இலக்கை நோக்கிச் சுட வேண்டும். நான் பங்கேற்றதில் சிறந்த போட்டியாக இதை நினைக்கிறேன்.
துப்பாக்கி சுடுதலில் ஏன் நிறையப் பேர் பங்கேற்பதில்லை?
இங்கே சர்வதேச தரத்தில் மைதானம் இல்லாதது பெரிய குறை. வெளிநாடுகளில் இருக்கும் எலெக்ட்ரானிக் மைதானங்களில் ஸ்கோர் போர்டு மானிட்டர்கள் அருகிலேயே இருக்கும். தமிழக மைதானங்களில் ஸ்கோரைப் பார்க்கச் சில நிமிடங்கள் ஆகின்றன. அதனால் இலக்கைச் சுடுவதில் கவனச் சிதறல் ஏற்படுகிறது. இதுதான் இந்தப் போட்டியில் அடிப்படை பிரச்சினை. சர்வதேசத் தரத்தில் பயிற்சியாளர்களும் இல்லை.
எவ்வளவு செலவாகும்?
சர்வதேசத் தரத்தில் ஒரு துப்பாக்கி வாங்க இரண்டு லட்சம் முதல் மூன்றரை லட்சம்வரை ஆகும். தோட்டா தரத்தைப் பொறுத்து 20, 35 ரூபாய் இருக்கும். ஒரு நாளைக்குப் பயிற்சி செய்ய 60 தோட்டாக்கள் தேவைப்படும். சர்வதேச அளவில் சாதிப்பவர்களுக்கு மட்டுமே ஸ்பான்ஸர் கிடைக்கும். அதுவரை நாம் சொந்த செலவிலேயே போட்டிகளில் பங்கேற்க வேண்டும். எனக்காகச் சொத்துகளை விற்று செலவு செய்கிறார் அப்பா.
அடுத்த லட்சியம்?
ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்று, தங்கம் வெல்வதே என் லட்சியம். அந்த இலக்கை நோக்கிப் பயிற்சி செய்கிறேன்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT