Published : 06 Nov 2016 01:42 PM
Last Updated : 06 Nov 2016 01:42 PM
மகத்தான மாற்றங்களைச் சாத்தியப் படுத்தும் வல்லமை தாய்மைக்கு உண்டு. வேதனை கண்டு சோர்ந்து போகாமல், வாழ்க்கையோடு போராடிப் பார்க்கிற குணத்துக்குச் சொந்தக்காரர் தாராபுரத்தைச் சேர்ந்த மோகனாம்பாள்.
“என் கணவர் கூலித் தொழிலாளி. நிரந்தர வருமானம் கிடையாது. எனக்கும் ஒரு கண்ணில் பார்வை இல்லை. ரெண்டு மகன்கள். ரெண்டாவது மகன் திவாகருக்கு நான்கரை வயது. பீட்டா தாலசீமியா என்ற ரத்தசோகை நோயால் பாதிக்கப்பட்டான். நாங்க அணு அணுவா சித்ரவதை அனுபவிச்சோம். எங்க குடும்பமே நொடிச்சுப் போயிருச்சு” என்று மோகனாம்பாள் சொல்லும்போதே அவரது வார்த்தைகளில் உள்ள வலி, நம்மையும் தாக்குகிறது.
மோகனாம்பாள் பத்தாம் வகுப்பு வரையே படித்தவர். ஆனால் தன் மகனுக்காக நோயைப் பற்றி அனைத்து விவரங்களையும் அறிந்துகொண்டு போராடினார்.
“திவாகர் திடீர்னு சோர்ந்துடுவான். கண்ணும் வெள்ளையாகிடும். பிறந்ததிலிருந்து இப்படி இருந்ததால, அக்கம் பக்கத்துல வைத்தியம் பார்த்துட்டு வந்தோம். இன்னைக்கு சரியாயிடும், நாளைக்கு சரியாயிடும்னு நம்பிக்கையோட இருந்தோம். காலம்தான் ஓடுச்சே தவிர, நோயைக் கண்டுபிடிக்க முடியலை. அப்புறம்தான், பையனுக்கு பீட்டா தாலசீமியா நோய்னு சொன்னாங்க. அடிக்கடி ரத்தம் ஏத்தணும். லட்சக்கணக்கில் செலவு செய்யணும். அதுக்கெல்லாம் நாங்க எங்கே போவோம்? கூலி வேலை செஞ்சாதான் சாப்பிடவே முடியும்.
உலகமே இருண்டது போல இருந்தது. எவ்வளவு யோசிச்சும் வழி தெரியலை. ஆனால் எப்படியாவது என் பையனோட உசுரைக் காப்பாத்தணும்னு மட்டும் உறுதி இருந்தது. ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபினில் ஏற்படும் பிரச்சினை காரணமாக, தாலசீமியா நோய் ஏற்படுது. ரத்த உற்பத்தி குறைபாட்டால் உடல் தளர்ந்துடுவான். அடிக்கடி ரத்தம் ஏத்தணும். இப்படி நாலு வருஷம் அடிக்கடி ரத்தம் ஏத்திதான் மகனைப் பிழைக்க வச்சோம். அறுவை சிகிச்சை செஞ்சா, நோயிலிருந்து மீள வாய்ப்பிருக்குன்னு சொன்னாங்க. அதுக்காக நாங்கபட்ட அலைச்சல், அவதி, துயரங்கள் கொஞ்சம் நஞ்சமல்ல...” என்கிறார் மோகனாம்பாள்.
திவாகர்
கணவர் செல்வகுமார், “மோகனாம்பாள் இல்லைன்னா இன்னைக்குப் பையன் தேறியிருக்க மாட்டான். நானே பல நேரங்களில் மனம் சோர்ந்து போயிடுவேன். ஆனால், தாராபுரத்தைக்கூடத் தாண்டாத, ஒரு கண் பார்வை இல்லாத மோகனா எடுத்த முயற்சிகளுக்கு அளவே இல்லை. குடும்பத்தையும் பையனையும் மீட்டெடுத்த முழுப் பெருமையும் மோகனாவுக்கே” என்று நெகிழ்கிறார்.
செல்வகுமார் சுமை தூக்கும் தொழிலாளி என்பதால், அவர் சங்கத்தில் கொஞ்சம் உதவி கிடைத்தது. முதலமைச்சர் மருத்துவக் காப்பீடு, பெங்களூருவில் உள்ள மிலாப் ஃபவுண்டேஷன் மூலமாகப் பல முயற்சிகள் என்று திவாகருக்கு சென்னை மருத்துவமனையில் 35 லட்சம் ரூபாய் செலவில், அறுவை சிகிச்சை நடைபெற்றது. திவாகர் குணமாகிவருகிறான். வீட்டில் லேசான புன்னகை எட்டிப் பார்க்கிறது.
“இது எங்க சக்தியை மீறுன விஷயம். நாங்க கையில காசில்லாம இருந்தோம். நம்பிக்கையை மட்டும் இழக்கலை. எங்ககிட்டயிருந்த மூலதனம் அது மட்டும்தான். நம்பிக்கை இழந்திருந்தோம்னா இன்னைக்கு நாங்க காணாம போயிருப்போம். எந்த ஏழைக்கும் வரக் கூடாத சோதனை எங்களுக்கு வந்துச்சு. வெள்ளத்துல சிக்குனவங்க எப்படியாவது உயிர் பிழைக்கப் போராடுவாங்களே, அப்படித்தான் நாங்களும் போராடினோம். எனக்கு ஒரு கண்ணு இல்லை. ஆனா சாதாரணமா இருக்குறவங்களைவிட எந்த வேலையையும் என்னால் சிறப்பாகச் செய்ய முடியும். அதுக்குக் காரணம் என் நம்பிக்கைதான்” என்று திவாகரை அணைத்துக்கொள்கிறார் மோகனாம்பாள். இனி குறையொன்றும் இல்லை!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT