Last Updated : 13 Nov, 2016 02:34 PM

 

Published : 13 Nov 2016 02:34 PM
Last Updated : 13 Nov 2016 02:34 PM

போராட்டம்: பிரதமரின் பெயரால் பறிபோன வாழ்வுரிமை

ஒரு நாட்டின் பிரதமர் கையால் மரியாதை நிமித்தமாக மாலை பெறுவதும், அந்த நாட்டின் மிக முக்கியமான அரசாங்கத் திட்டத்தைத் தொடங்கிவைப்பதும் ஒரு சாதாரண பெண்ணுக்குக் கிடைக்கிற மிகப் பெரிய கவுரமாகக் கருதப்படும். புத்னி மஞ்சியாயீன் என்ற பெண்ணுக்கும் அப்படியொரு வாய்ப்பு வாய்த்தது. ஆனால் அதுவே அவரது வாழ்க்கையைத் தலைகீழாகப் புரட்டிப்போட்டுவிட்டது. தனக்கு மறுக்கப்பட்ட உரிமைகளுக்காகவும் தான் புறக்கணிக்கப்பட்டதற்கு எதிராகவும் கடந்த 57 ஆண்டுகளாகப் போராடிவருகிறார் புத்னி.

அது 1959-ம் ஆண்டு. இந்தியாவின் முதல் பிரதமரான ஜவாஹர்லால் நேரு, நாட்டின் மிகப்பெரிய திட்டமான தாமோதர் அணைத் திட்டத்தைத் தொடங்கிவைப்பதற்காக மேற்கு வங்கத்துக்குச் சென்றார். அந்த அணைத் திட்டம் மக்களுக்கானது என்பதை உணர்த்துவதற்காக அணை கட்டும் பணியில் இருந்த சாந்தால் பழங்குடியினத்தைச் சேர்ந்த புத்னி மஞ்சியாயீன் என்பவரை வைத்தே திட்டத்தைத் தொடங்க முடிவுசெய்தார்கள். அப்போது புத்னிக்கு 17 வயது! ஏதுமறியாத அந்த இளம்பெண், அதிகாரிகள் சொன்னபடி செய்தார். அணையைத் திறந்துவைத்த முதல் பணியாளர் என்ற பெருமையையும் பெற்றார். ஆனால் இதோடு முடிந்துவிடவில்லை.

பஞ்சாயத்து கட்டுப்பாடு

அன்று இரவே சாந்தால் இன மக்களின் பஞ்சாயத்து கூட்டப்பட்டது. “ஒரு ஆணிடம் இருந்து மாலை பெற்றதால் அவரே உனக்குக் கணவர்” என்று சொல்லி, புத்னியை ஜவாஹர்லால் நேருவின் மனைவியாக அறிவித்த கொடுமை நிகழ்ந்தது. அதோடு, ஜவாஹர்லால் நேரு பழங்குடி இனத்தைச் சேர்ந்தவரல்ல என்பதால் தன் இனத்தைச் சேராத ஒருவரை மணந்ததால் புத்னியைத் தங்கள் இனத்தைவிட்டே ஒதுக்கிவைப்பதாகவும் அறிவித்தார்கள். “ஒரு ஆணின் கையைப் பிடித்ததாலேயே ஒரு பெண்ணின் வாழ்வு இப்படிச் சிதையும் என்பது வேதனை நிறைந்தது” என்று குறிப்பிட்டிருக்கிறார் இந்தச் சம்பவம் குறித்து எழுதியிருக்கும் தனிக் பாஸ்கர்.

தொடரும் பிரச்சினை

சொந்த பந்தம் அனைத்தும் தன்னை ஒதுக்கிவைத்த நிலையிலும் தாமோதர் பள்ளத்தாக்கு அணைத் திட்டத்தில் தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் பணியாற்றினார் புத்னி. பிறகு அந்தப் பணியிலிருந்தும் விலக்கப்பட, மனம் வெறுத்துப் போய் ஜார்கண்ட் மாநிலத்துக்குக் குடிபெயர்ந்தார். அங்கும் சிரமம் நிறைந்த வாழ்க்கைதான். சுதிர் தத்தா என்பவரைச் சந்தித்தார். இருவருக்கும் மனமொத்துப் போனாலும், புத்னி தன் சமூகத்துக்குப் பயந்து அவரைத் திருமணம் செய்துகொள்ளவில்லை. மணம் செய்துகொள்ளாமலேயே சேர்ந்து வாழ்ந்தனர். அவர்களுக்கு மூன்று குழந்தைகளும் பிறந்தார்கள். அப்போதும் புத்னியை அவரது சமூகத்தார் ஏற்றுக்கொள்ளவில்லை.

எப்போது விடிவு?

புத்னி இந்தப் பிரச்சினை குறித்து நேருவின் பேரனான ராஜீவ்காந்தியிடம் 1985-ம் ஆண்டு முறையிட்டார். அதன் பிறகு அவருக்கு தாமோதர் பள்ளத்தாக்கு நிறுவனத்தில் மீண்டும் வேலை கிடைத்தது. தற்போது பணியிலிருந்து ஓய்வுபெற்றுவிட்ட புத்னி மஞ்சியாயீன், தன் சொந்த கிராமத்துக்குப் பல வருடங்கள் கழித்துச் சென்றிருக்கிறார். இப்போதுகூட அவரை யாரும் ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. இந்தப் புறக்கணிப்பு தன்னைக் கொல்கிறது என்று குறிப்பிடும் புத்னி, ராகுல் காந்தியைச் சந்தித்து, தன் பிரச்சினைகள் குறித்து முறையிடும் முயற்சியில் இருக்கிறார். ஓர் ஆணின் கையைப் பிடித்ததாலும் மாலை வாங்கியாதாலுமே வாழ்க்கையே தடம்மாறிப் போன புத்னியைப் போன்ற பெண்கள் இந்தியாவில் இருக்கத்தான் செய்கிறார்கள். சமூகத்தின் கவுரவம் ஒரு பெண்ணின் செய்கையில்தான் அடங்கியிருக்கிறது என்ற பிற்போக்குச் சிந்தனைக்கு எப்போது முடிவு?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x