Last Updated : 05 Nov, 2016 04:10 PM

 

Published : 05 Nov 2016 04:10 PM
Last Updated : 05 Nov 2016 04:10 PM

பக்கத்து வீடு: பயங்கரவாதத்துக்கு எதிராகப் போராடும் நாதீயே

“நான் தற்கொலை செய்துகொள்ள விரும்பவில்லை. ஆனால் என்னை யாராவது கொல்ல வேண்டும் என்று விரும்பினேன்” என்று உலகை அதிரவைத்த நாதீயே மூராத், இன்று ஐக்கிய நாடுகள் சபையின் நல்லெண்ணத் தூதுவராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

இராக்கின் கோச்சோ கிராமத்தில் யசீதி இன மக்கள் அதிகம் வசித்துவந்தனர். இவர்கள் சிறுபான்மையினத்தவர். உலகை அச்சுறுத்தி வரும் ஐஎஸ் என்று அழைக்கப்படும் இஸ்லாமிய அரசுப் படைகள், யசீதி இனமக்களை அழிப்பதை லட்சியமாகக் கொண்டு செயல்பட்டுவருகின்றன.

2014-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இஸ்லாமிய அரசுப் படைகள் கோச்சோ கிராமத்துக்குள் நுழைந்தன. பெண்களையும் குழந்தைகளையும் ஒரு பள்ளியில் அடைத்தன. கிராமத்தில் இருந்த 600 ஆண்களைக் கொடூரமாகக் கொன்று குவித்தன. இதில் நாதீயேவின் சகோதரர்கள் ஆறு பேர் இறந்து போனார்கள். 150 பெண்களையும் குழந்தைகளையும் அடிமைகளாக, மொசுல் நகருக்கு அழைத்துச் சென்றனர். அங்கே ஏற்கெனவே சிறைபிடிக்கப்பட்ட 6,700 யசீதி பெண்கள் இருந்தனர். அவர்களைப் பாலியல் அடிமைகளாக விற்பனை செய்துவந்தனர். சிறுவர்களைத் தங்கள் படையில் சேர்த்துக்கொண்டனர்.


நாதியே மூராத்

சில நாட்களுக்குப் பிறகு, நாதீயேவை அலங்கரித்தனர். ஆண்கள் வரிசையாக வந்து பார்வையிட்டனர். ஒரு ராணுவ வீரன் அவரை அழைத்துச் சென்றான். மதம் மாறச் சொன்னான். திருமணம் செய்துகொள்ளச் சொன்னான். அனைத்தையும் மறுத்தார் நாதீயே. ஒரு நாள் இரவு அந்தக் கொடூரத்தை நிகழ்த்தினான். அநாகரிகமான ஆடைகளை அணியச் சொல்லிக் கட்டாயப்படுத்தினான். அவனது சக ராணுவ வீரர்களுக்கும் இணங்கும்படி துன்புறுத்தினான். தினம் தினம் பலாத்காரம். கொடுமை தாங்க முடியாமல் தப்பிச் சென்றார். பாதுகாப்புக்காக நின்றிருந்த ஒரு ராணுவ வீரன் அவரைப் பிடித்துவிட்டான்.

“அந்த இரவை நினைத்தால் இப்போதும் நடுங்குகிறது. ஆடைகள் இன்றி ஒரு அறையில் அடைத்தான். அங்கே ஆறு பேர் நான் சுய நினைவை இழக்கும்வரை தொடர்ந்து பலாத்காரம் செய்தனர். சிகரெட்டால் சுட்டனர், அடித்தனர். அந்தக் கொடுமைகளை அனுபவித்த எந்தப் பெண்ணுக்கும் வாழ்நாள் முழுவதும் அதை மறக்க முடியாது. பலர் தற்கொலை செய்துகொண்டார்கள். என்னால் தற்கொலை செய்துகொள்ள முடியவில்லை. ஆனால் என்னை யாராவது கொன்றுவிட மாட்டார்களா என்று ஏங்கினேன்” என்கிறார் நாதீயே.

மூன்று மாதங்களுக்குப் பிறகு, ஒருநாள் நாதீயே அடைத்து வைக்கப்பட்ட அறையின் கதவு பூட்டப்படாமல் இருந்தது. பக்கத்தில் வசித்த ஒரு குடும்பத்தின் உதவியுடன், இஸ்லாமிய அரசு கட்டுப்பாட்டுப் பகுதியை விட்டு வெளியே வந்தார் நாதீயே. அங்கிருந்த அகதிகள் முகாமில் தஞ்சமடைந்தார். பிறகு ஜெர்மனி வந்து சேர்ந்தார். அங்கே உடலுக்கும் மனதுக்கும் மருத்துவம் செய்துகொண்டார்.

இன அழிப்பு, ஆள் கடத்தல், பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள் போன்றவற்றைக் கொடூரமான முறையில் பின்பற்றிவரும் இஸ்லாமிய அரசுக்கு எதிராகப் போராட வேண்டும்; யசீதி மக்களை மீட்டெடுக்க வேண்டும் என்று உறுதிபூண்டார் நாதீயே. ஐ.நா. சபையில் முறையிட்டார். பெண்கள் மீதான அடக்குமுறைகள், பாலியல் சமத்துவம் குறித்து நடத்தப்பட்ட கூட்டத்தில், நாதீயேவை உரையாற்ற அழைத்தது ஐ.நா.

“கிராமத்தில் மகிழ்ச்சியாகப் படித்துகொண்டிருந்த நான், இன்று குடும்பம் இழந்து, வீடிழந்து, நாடிழந்து நின்றுகொண்டிருக்கிறேன். என்னைப் போல ஒவ்வொரு யசீதி பெண்ணும் சித்திரவதை அனுபவித்துவருகிறார். இஸ்லாம் என்ற பெயரில், இஸ்லாமிய அரசுப் படைகள் நடத்திவரும் கோரமான இன அழிப்புகளுக்கு எதிராக உலகம் ஒன்றுதிரள வேண்டும். இவர்களிடம் அடிமைகளாக அடைபட்டிருக்கும் பெண்களை மீட்டெடுக்க வேண்டும்” என்று தனக்கு நேர்ந்த கொடூரங்களை விளக்கிப் பேசினார் நாதீயே. உலகம் அதிர்ந்து போனது.

பல்வேறு நாடுகளுக்குச் சென்று, இஸ்லாமிய அரசு பயங்கரவாதம் குறித்துப் பேசிவருகிறார். பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளுக்கு எதிராகப் போராடிவருகிறார். பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் சித்திரவதை அனுபவிக்கும் பெண்களையும் குழந்தைகளையும் மீட்கும் நடவடிக்கைகளில் இறங்கியிருக்கிறார்.


லாமியா ஹாஜி பஷார்

அமைதிக்கான நோபல் பரிசுக்காகப் பரிந்துரை செய்யப்பட்ட நாதீயேவை சமீபத்தில் ஆள்கடத்தலால் பாதிக்கப்பட்டோரின் பிரச்சினை களுக்கான நல்லெண்ணத் தூதுவராக ஐ.நா சபை நியமித்திருக்கிறது. தற்போது ஐக்கிய நடுகள் சபையின் மதிப்புகுரிய ‘சகாரோவ் மனித உரிமைகள் விருது’ நாதீயே முராத்துக்கும் ஐஎஸ் படையினரிடம் இருந்து மீண்ட லாமியா ஹாஜி பஷாருக்கும் வழங்கப்பட்டிருக்கிறது. நாதீயே, லாமியா போன்ற பெண்களின் துணிச்சல் மிக்கப் போராட்டம், விரைவில் மற்ற பெண்களின் விடுதலைக்கு வித்திடும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x