Last Updated : 20 Nov, 2016 01:23 PM

 

Published : 20 Nov 2016 01:23 PM
Last Updated : 20 Nov 2016 01:23 PM

கமலா கல்பனா கனிஷ்கா: இனி ஆணுக்குத்தான் புகுந்தவீடு!

‘சூப்பர் மூன்’ நிகழ்வைப் பார்ப்பதற்காக கமலா பாட்டி, கல்பனா ஆன்ட்டி, கனிஷ்கா மூவரும் மொட்டை மாடியில் காத்திருந்தார்கள்.

“நிலாவைப் பார்க்கிறதே ஜாலியா இருக்கும். இன்னிக்கு வழக்கத்தைவிட 14 மடங்கு பெரியதாகவும் 30 மடங்கு அதிகப் பிரகாசமாகவும் தெரியுமாம்” என்று வானத்தைப் பார்த்தபடி சொன்னாள் கனிஷ்கா.

“மேலே பார்க்காதே கனிஷ்கா. அதோ மரங்களுக்கு இடையே பாரு” என்று கல்பனா ஆன்ட்டி சொன்னவுடன், இருவரும் சட்டென்று திரும்பினார்கள்.

“அட்டகாசம்! இது எழுபது வருஷத்துக்கு ஒரு முறைதான் நிகழுமாம். இப்போ பார்க்காதவங்க 2034 வரை காத்துக்கிட்டு இருக்கணும்” என்றார் கமலா பாட்டி.

மூவரும் ஒளிப்படங்கள் எடுத்த பிறகு, நாற்காலிகளில் உட்கார்ந்தார்கள்.

“இந்தியாவில் 15 வயதுக்கு மேற்பட்ட பெண்களில் ஏழு கோடிப் பேர் மென்று சுவைக்கக் கூடிய புகையிலையைப் பயன்படுத்துறாங்க. இதில் என்ன கொடுமைன்னா, கடினமான உழைப்பில் ஈடுபடும்போது பசி தெரியாமல் இருக்கவே இதைச் சாப்பிடறாங்க. உலக சுகாதார மையத்துடன் இணைந்து மத்திய சுகாதார அமைச்சகம் இந்த அறிக்கையை வெளியிட்டிருக்கு” என்று வருத்தத்துடன் சொன்னார் கமலா பாட்டி.

“இந்த மாதிரி புகையிலைதான் வாய், தொண்டை போன்றவற்றில் புற்றுநோயை அதிகம் ஏற்படுத்தும். அரசு அறிக்கை வெளியிட்டால் மட்டும் போதாது. இதைத் தடுக்க சரியான நடவடிக்கை எடுக்கணும்”.

“நம்ம அரசுதான் இன்னும் எச்சரிக்கை விளம்பரத்தின் அளவைக்கூட பெருசாக்கத் தயாராக இல்லையே… அப்புறம் எப்படி? புற்றுநோயைத் தடுக்கிறது இருக்கட்டும், முதலில் பசியைப் போக்குவதற்கு ஏதாவது நடவடிக்கை எடுக்கணும். அதைச் சரி செய்தால் புகையிலைக்கு ஏன் அடிமையாகப் போறாங்க?” என்ற கல்பனா ஆன்ட்டியின் குரலில் கோபம் தெரிந்தது.

“நீங்க சொல்றது ரொம்ப சரி ஆன்ட்டி. இங்கே உட்கார்ந்து நிலாச் சோறு சாப்பிட்டால் எவ்ளோ நல்லா இருக்கும் பாட்டி!” என்று சிரித்தாள் கனிஷ்கா.

“நீ கேட்பேன்னு தெரியும். டின்னர் தயார் பண்ணி வச்சிட்டேன். எடுத்துட்டு வர்றீயா கனிஷ்கா?”

மூவரும் நிலா வெளிச்சத்தில் சாப்பிட்டார்கள். ஒரு விமானம் பறந்து சென்றது.

“இதில் ஏறி லட்சத் தீவுகளில் உள்ள மினிகாய் தீவுக்குப் போவோமா பாட்டி?”

“என்னம்மா புதிர் போடுற?”

“மினிகாய் தீவில் பெண்களுக்கு அவ்வளவு சுதந்திரம் இருக்குது. முக்கிய முடிவுகளை பெண்கள்தான் எடுப்பாங்க. திருமணத்துக்குப் பிறகு பெண், மாமியார் வீட்டுக்குச் செல்லத் தேவையே இல்லை. திருமணத்துக்கு ஆண்தான் பெண்ணுக்கு சீர் தரணும்” என்று அடுக்கிக்கொண்டே போனாள் கனிஷ்கா.

“அடடா! பிரமாதம். உனக்கு ஒரு மாப்பிள்ளை பார்த்துடலாம் அங்கே” என்று சீண்டினார் கமலா பாட்டி.

“ஐயோ பாட்டி, மாப்பிள்ளை பார்த்தால் நான் போக முடியாது, அவன்தான் இங்கே வரணும் அவங்க வழக்கப்படி…”

“ரொம்ப முக்கியமான விஷயம் ஒண்ணு இருக்கு. 1990-ம் வருஷத்துல இருந்தே அங்கே திருமணத்துக்கு முன்னாடி ஆண், பெண் இருவரும் பரஸ்பரம் மருத்துவ அறிக்கையைப் பகிர்ந்துக்குறாங்க. இதை நாம் அவசியம் கத்துக்கணும்” என்றார் கல்பனா ஆன்ட்டி.

“சின்னத் தீவில் எவ்வளவு முற்போக்கான விஷயங்கள் சாத்தியமாயிருக்கு! ஆனால் பெரிய இயக்குநராகக் கொண்டாடப்படுகிற ராம்கோபால் வர்மா எவ்வளவு பிற்போக்காக ட்வீட் செய்திருக்கார் தெரியுமா?”

“நானும் பார்த்தேன் ஆன்ட்டி. அமெரிக்க அதிபர் தேர்தலில் ட்ரம்ப் வெற்றி பெற்றதும் ஒபாமா, மிஷேல் முகங்கள் இன்னும் கறுப்பாகியிருக்கும் என்ற தொனியில் எழுதியிருந்தார். கடுமையான எதிர்ப்பு கிளம்பவே அடுத்த ட்வீட்டில், ‘நான் கறுப்புதான். ஆனால் எனக்கு வெள்ளை நிறத்தவரை மிகவும் பிடிக்கும். இதை மற்றவர்கள் மறைக்கலாம். ஆனால், நான் மறைக்கப் போவதில்லை. உண்மையைச் சொல்வதால் நான் அறிவுஜீவி’ அப்படின்னு எழுதியிருக்கார்”

“உண்மையான அறிவுஜீவிகள் தங்களை அறிவுஜீவின்னு சொல்லிக்க மாட்டாங்க. பாலிவுட் இயக்குநர் அக்‌ஷய் சிங், ராம்கோபாலுக்கு எதிர்வினையா ஒரு திறந்த மடல் எழுதியிருக்கார். அவரோட பிங்கி ப்யூட்டி பார்லர் திரைப்படம் கான் திரைப்பட விழாவில் பெரிய வரவேற்பைப் பெற்றது. அந்தப் படத்தோட கருவே இந்தியச் சமூகத்துல சிவப்புத் தோலுக்கான மரியாதையும் கறுப்புத் தோல் மீதான ஒவ்வாமையும் ஏற்படுத்தும் விளைவுகள்தான்” என்றார் கமலா பாட்டி.

“ஒரே வாரத்துல தமிழகத்துல சபர்ணா, கேரளத்துல ரேகா மோகன் என்று நடிகைகள் தற்கொலை பண்ணிக்கிட்டாங்க. ரொம்ப வருத்தமா இருக்கு ஆன்ட்டி”

“பொதுவா நம்ம நாட்டில் தற்கொலைகள் அதிகரிச்சிட்டுதான்வருது. அதிலும் இளம் வயதினர் அதிக அளவில் தற்கொலை செய்துக்கறாங்க. நடிகைகள் என்பதால் வெளியில் தெரியுது. நம்ம கல்வியும் சமூகமும் வாழ்வதற்கான தைரியத்தைக் கொடுக்கலையோன்னு தோணுது கனிஷ்கா”

“பேச்சு சுவாரசியத்துல நேரம் போனதே தெரியலை… நாளைக்கு எனக்கு டெஸ்ட் இருக்கு, நாங்க கிளம்பறோம் பாட்டி. வெரி நைஸ் டின்னர்” என்று கனிஷ்கா சொல்ல, சபை கலைந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x