Last Updated : 02 Oct, 2016 12:23 PM

 

Published : 02 Oct 2016 12:23 PM
Last Updated : 02 Oct 2016 12:23 PM

கீதம் சங்கீதம்: கருணையை வரவைப்பதே நல்ல இசை!

மோகன கல்யாணி ஓர் அபூர்வமான ராகம். இந்த ராகத்தில் ஆரோகணம் மோகனத்திலும் அவரோகணம் கல்யாணியிலும் இருக்கும். ‘ராகா சகோதரிகள்’ என கர்னாடக இசை உலகில் அழைக்கப்படும் ரஞ்சனி, காயத்ரி சகோதரிகளும் மோகன கல்யாணி ராகத்தைப் போல் அபூர்வமானவர்கள். இந்திரா சிவசைலம் விருதுக்குத் தேர்வாகியிருக்கும் ரஞ்சனி – காயத்ரியை சமீபத்தில் சந்தித்தோம்.

உங்களின் வயலின் குருவும் வாய்ப்பாட்டு குருவும் உங்களிடம் கூறிய எந்த அறிவுரையை இன்றளவும் தொடர்கிறீர்கள்?

எங்கள் பெற்றோரே எங்களுக்கு முதல் குருவாக இருந்தது எங்கள் பாக்கியம். டி.எஸ்.கிருஷ்ணசாமி (வயலின் குரு), பி.எஸ். நாராயணசாமி (வாய்ப்பாட்டு குரு) இருவருமே, ‘பாரம்பரியமான கர்னாடக இசை என்பது ஒரு தொடர் சங்கிலி போல; புதுமை என்னும் பெயரால் அந்தக் கண்ணிகள் துண்டாகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்’ என்று சொல்லியிருக்கிறார்கள். அவர்களின் வாக்கை இன்றைக்கும் வேத வாக்காக நாங்கள் கடைப்பிடித்துவருகிறோம்.

உங்களைப் பாடகராக்கிய அந்த இனிய மாலை எது?

87-ம் ஆண்டு முதல் பத்து ஆண்டுகளுக்கு மேலாக பிரதான வயலின் கச்சேரிகளாகவும், பல முன்னணி கலைஞர்களுக்குப் பக்க வாத்தியமாகவும் வயலின் வாசித்துவந்தோம். பி.எஸ்.என். அவர்கள் எங்களைப் பாட்டு கச்சேரி செய்துதான் ஆக வேண்டும் என்று மேடையேற்றி விட்டார்.

எங்களுடைய இரண்டாவது அல்லது மூன்றாவது பாட்டுக் கச்சேரி என்று நினைக்கிறோம். 1999-ல் ஜனவரி மாதத்தில் ஒருநாள். சென்னை, வெங்கட்நாராயணா தெருவில் இருக்கும் திருப்பதி தேவஸ்தானத்தில் கச்சேரி நடத்த இருந்தவருக்கு உடல் நலம் சரியில்லாததால், எங்களைப் பாடுவதற்கு அழைத்தார்கள். அந்தக் கச்சேரி நாங்கள் எதிர்பார்த்ததற்கும் மேலாக ரசிகர்களின் ஆதரவைப் பெற்றது. அந்தக் கச்சேரியின் வெற்றி எங்கள்மீது எங்களுக்கே புதிய நம்பிக்கையைக் கொண்டுவந்தது. அதுதான் நாங்கள் பாடகர்களாக முகிழ்த்த தருணம் என்று நினைக்கிறோம்.

உங்களின் பாடும் திறமையை வளர்க்க நீங்கள் வயலின் கலைஞர்களாக இருந்தது எந்தளவு உதவுகிறது?

பொதுவாக வாத்தியம் என்பது ஒரு ஹார்ட்வேர். குரலும் ஒரு வாத்தியமே. ஆனால், குரலுக்கேற்ப வாத்தியத்தின் ஸ்ருதியைக் கூட்டலாம், குறைக்கலாம். குரல் வளத்தை மெருகேற்றிக் கொள்ள முடியுமே தவிர, மாற்றிக்கொள்ள முடியாது. இசை ஞானம் மற்றும் கற்பனைகள் ஒரு சாஃப்ட்வேர். ஆதலால், வயலின் வசிக்கும்போதும் இசை ஞானம் என்பது மெருகேறிக்கொண்டே இருந்திருக்க வேண்டும். அதன் பலன் எங்கள் இசையில் நிச்சயம் இருக்கும்.

இந்திரா சிவசைலம் விருதுக்கு எந்த அடிப்படையில் உங்களைத் தேர்ந்தெடுத்திருப்பார்கள் என நினைக்கிறீர்கள்?

சார்ந்திருக்கும் துறையில் ஒருவர் ஏற்படுத்தும் புதுமையான முயற்சிகளுக்குத்தான் இந்த விருது வழங்கப்படுகிறது. 1999-க்குப் பிறகு தமிழ்நாட்டு கர்னாடக கச்சேரி மேடைகளில் விருத்தங்கள் அதிகமாக மறுமலர்ச்சி அடைந்தன என்று நாங்கள் கொஞ்சம் பெருமையுடன் சொல்லிக்கொள்வோம். ராகம், தானம், பல்லவி முதல் அபங் ஹிந்தி பஜன் போன்றவற்றையும் எங்களின் கச்சேரிகளில் மக்கள் அதிகம் விரும்புகிறார்கள்.

பக்தியைச் சுற்றி மட்டுமே கர்னாடக இசை பின்னப்பட்டிருப்பதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

நாட்டார் இசை, கிராமிய இசை என இங்கும் பல இசை வடிவங்கள் இருக்கின்றன. பக்தி எல்லையைக் கடந்தது கர்னாடக இசை. இயற்கையைக் கொண்டாடும் பாடல்களையும் எங்களின் நிகழ்ச்சிகளில் பாடுகிறோம். இயற்கையைப் பாடுவதும் இறைவனைப் பாடுவதும் ஒன்றுதான் என நாங்கள் நினைக்கிறோம்.

திட்டமிட்டபடி கச்சேரியை நடத்துவீர்களா அல்லது ரசிகர்களுக்காக கச்சேரியைத் திட்டமிடுவீர்களா?

எங்களின் திட்டமிடலும் ரசிகர்களுக்கான தேவையும் ஒரே புள்ளியில் இணைந்தால்தான் கச்சேரி சோபிக்கும். அப்படித்தான் கச்சேரியை இதுவரை நடத்திவருகிறோம்.

உச்சஸ்தாயியில் பாடுவதுதான் நல்ல இசையா? ஓபரா பாணியில் பாடும்போது கண்ணாடிகூட உடையுமாமே?

எங்களைப் பொறுத்தவரை கண்ணாடியை உடைப் பதைவிட தவிக்கும் மனத்தை ஆற்றுப்படுத்தி, கண்களில் கண்ணீரை வரவைப்பதே நல்ல இசை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x