Last Updated : 16 Oct, 2016 02:06 PM

 

Published : 16 Oct 2016 02:06 PM
Last Updated : 16 Oct 2016 02:06 PM

சுற்றுலா: மயக்கும் மலை ரயில் பயணம்!

ஊட்டிக்குப் பலரும் போயிருக்கலாம். ஆனால் மலை ரயிலில் ஊட்டிக்குச் சென்றதுண்டா? ஊட்டிப் பயணமும் மலை ரயில் பயணமும் வெவ்வேறு அனுபவங்களைத் தரக்கூடியவை. இந்தியாவில் இருக்கக்கூடிய மிகச் சிறப்பான நான்கு மலை ரயில்களில் இதுவும் ஒன்று.

108 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்ட நீலகிரி மலை ரயில், இன்றும் குறையாத உற்சாகத்தைத் தந்தபடி தன் பயணத்தைத் தொடர்ந்துகொண்டிருக்கிறது! பயணிக்கும் 45.8 கிலோ மீட்டர் தூரத்துக்குள் 16 சுரங்கங்களையும் 250 பாலங்களையும் கடக்கிறது. ஐந்து மணி நேரமும் நம் கவனத்தை அப்படி இப்படித் திருப்ப முடியாமல், முழுக் கவனத்தையும் தன்னை நோக்கியே இருக்குமாறு பார்த்துக்கொள்கிறது மலையின் பேரழகு! போனில் கவனம் திரும்பினால் ஆர்ப்பரிக்கும் சிற்றருவிகளையும் மென்மையாகப் பயணிக்கும் நீரோடைகளையும் பார்க்கத் தவறிவிடுவீர்கள்.

மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டி வரை 12 நிறுத்தங்கள். பார்க்கும் காட்சிகளை எல்லாம் கேமராவில் பத்திரப்படுத்திக்கொள்வதற்கும் சூடான தேநீர் பருகுவதற்கும் சில நிமிடங்கள் ரயில் நிற்கிறது. ஊட்டிக்குச் செல்லும்போதோ, திரும்பி வரும்போதோ ஒருமுறையாவது மலை ரயிலில் அவசியம் செல்லுங்கள். ஊட்டியின் பாதி அழகை இந்தப் பயணத்திலேயே பார்த்துவிடலாம்!

எப்படிச் செல்வது?

சென்னையில் இருந்து செல்பவர்கள் மேட்டுப்பாளையம் வரை நீலகிரி எக்ஸ்பிரஸில் செல்லலாம். கோவை வரை ரயில் / பேருந்துகளில் வந்து, அங்கிருந்து மேட்டுப்பாளையம் ரயில் நிலையம் வர வேண்டும். அங்கிருந்து ஊட்டி வரை மலை ரயில்.

மலை ரயிலுக்கு முன்கூட்டியே பதிவு செய்துவிட வேண்டும். காலை 7 மணி முதல் 12 மணி வரை 5 மணி நேரப் பயணம். (பேருந்தில் 2 மணி நேரத்தில் சென்றுவிடலாம்). ஊட்டியில் இருந்து மேட்டுப்பாளையம் வருவதற்கு மதியம் 2 மணிக்கு ரயில். 4 மணி நேரப் பயணம். ஏதாவது ஒரு வழியில் ரயிலைப் பயன்படுத்தலாம். ஒவ்வொரு நிறுத்தத்திலும் சுத்தமான கழிவறை வசதிகள் உள்ளன.

எச்சரிக்கை

கடுமையான மழைக் காலங்களில் ரயில் சேவை நிறுத்தப்படலாம். மழை, மரம், யானைகள் குறுக்கிட்டாலும் ரயில் நின்றுவிடும். அப்புறப்படுத்திய பிறகே பயணத்தைத் தொடரும்.

மலை ரயில் கட்டணம்?

முதல் வகுப்பு 500 ரூபாய். இரண்டாம் வகுப்பு 250 ரூபாய்.

பார்க்க வேண்டிய இடங்கள்?

சிம்ஸ் பார்க், லாம்ப்ஸ் ராக், ரோஸ் கார்டன், ஊட்டி ஏரி, தாவரவியல் பூங்கா, பைகாரா நீர்வீழ்ச்சி, தொட்டபெட்டா சிகரம், தேயிலை அருங்காட்சியகம் இன்னும் பல… சுற்றுலாத் தலங்களைத் தவிர்த்து, மலைக் கிராமங்களுக்குள் சென்றால் அழகான கேரட் தோட்டம், தேயிலைத் தோட்டம், கிராமத்து மனிதர்கள் என்று வேறு வகையான அற்புதமான அனு பவங்களும் கிடைக்கும்.

எப்போது செல்லலாம்?

மார்ச், ஏப்ரல், மே, ஜூன் போன்ற கடுங்கோடைக் காலத்தில்தான் மக்கள் ஊட்டியை நோக்கிப் படையெடுக்கிறார்கள். அபரிமிதமான மக்கள் கூட்டத்தால் ஊட்டியின் குளிர்ச்சியே குறைந்து, அங்கும் வெயில் எட்டிப் பார்த்து விடுகிறது. எங்கே சென்றாலும் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டியதும் வரும். ஊட்டியை கூட்டமில்லாமலும் அமைதியாகவும் பார்க்க விரும்புகிறவர்கள் ஜூலை, ஆகஸ்ட் மாதங்களைத் தேர்ந்தெடுக்கலாம். தாங்கக்கூடிய குளிர், நடுநடுவே மழைச் சாரல் என்று ரம்மியமாக இருக்கும்.

எங்கே தங்குவது?

ஊட்டி, குன்னூர், கோத்தகிரியில் ஏராளமான தங்கும் விடுதிகள் இருக்கின்றன. நகரை விட்டுத் தள்ளியிருந்தால் கட்டணம் குறையும். சீசன் காலங்களைத் தவிர்த்து ஜூலை, ஆகஸ்ட் மாதம் சென்றால் கட்டணம் பாதியாகக் குறையும்.

உணவு?

புகழ்பெற்ற சைவ, அசைவ உணவு விடுதிகள் இருக்கின்றன.

என்ன வாங்கலாம்?

கம்பளி ஆடைகள், ஊட்டி வர்க்கி, விதவிதமான பிஸ்கெட்கள், சாக்லெட்கள், தேயிலைத் தூள், காபி தூள், தேன், மசாலாப் பொருட்கள், மூலிகை மருந்துகள், மலைக்கே உரிய பழ வகைகள், காய்கறிகள், பூச்செடிகள்.

அவசியம் எடுத்துச் செல்ல வேண்டியவை?

குளிருக்கு ஸ்வெட்டர், நீலகிரியின் அழகைப் படம் பிடிக்க கேமரா, குடை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x