Last Updated : 02 Oct, 2016 12:21 PM

 

Published : 02 Oct 2016 12:21 PM
Last Updated : 02 Oct 2016 12:21 PM

பெண் நூலகம்: ஒரு கொள்ளை ராணியின் வாழ்க்கை

இந்தியாவின் கொள்ளை ராணியாக அறியப்பட்ட பூலான்தேவியின் வாழ்க்கைப் பயணத்தை ‘நான் பூலான் தேவி’ புத்தகம் பதிவுசெய்கிறது. மரியே தெரஸ்கூன், பால் ராம்பாலி என்ற இரண்டு பிரெஞ்சு எழுத்தாளர்கள் பூலான்தேவியை நேரில் சந்தித்துப் பேசி, இதை எழுதியிருக்கின்றனர். ‘ஐ, பூலான்தேவி’ (I, Phoolan Devi) என்ற தலைப்பில் அது 1996-ம் ஆண்டு வெளியானது.

உத்தரப் பிரதேசத்தில் கோர்ஹா கா பூர்வா என்னும் கிராமத்தில் ஒடுக்கப்பட்ட மல்லா சமூகத்தில் பிறக்கிறார் பூலான்தேவி. பத்து வயதிலிருந்தே அவரது போராட்டம் தொடங்கிவிடுகிறது. ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பெண்ணாகப் பிறந்ததால் சிறு வயதிலிருந்தே அவமானங்களை எதிர்கொள்கிறார். ஆனால், மற்ற பெண்களைப் போல் இது நம்

தலைவிதி என்று ஏற்றுக்கொள்ளாமல் அதை எதிர்க்கிறார். அவருடைய அம்மா மூலா தேவிதான் அநீதிகளை எதிர்க்க பூலானுக்குக் கற்றுக்கொடுக்கிறார்.

வறுமையின் காரணமாக பூலானுக்குப் பதினோரு வயதிலேயே முப்பது வயது புட்டிலாலுடன் திருமணம் செய்துவைத்து விடுகிறார்கள். இது பூலானின் வாழ்க்கை திசைமாறிப் போவதற்கான முக்கியக் காரணமாக அமைந்துவிடுகிறது. திருமணத்தின் பெயரால், பலமுறை வன்புணர்வு செய்யப்படுகிறார் பூலான். அங்கிருந்து எப்படியோ தப்பித்து வீட்டுக்கு வரும் அவருக்கு, ஆதரவளிக்க முடியாமல் தவிக்கின்றனர் பெற்றோர்.

பூலான்தேவி எதற்கும் அஞ்சாமல் தன் அப்பா நிலத்தின்மீது பஞ்சாயத்தில் உரிமை கோருகிறார். இதனால் திருட்டுப் பழி சுமத்தப்பட்டுச் சிறைக்கு அனுப்பப்படுகிறார். 15 வயதில் சிறையிலிருந்து திரும்பியதும் கொள்ளைக் கூட்டத்தால் கடத்தப்படுகிறார். கடத்திச் சென்ற சங்கத் தலைவர்களில் ஒருவரான விக்ரம் மல்லா, பூலானைத் திருமணம் செய்துகொள்கிறார்.

இந்தத் திருமணத்தைப் பற்றி பூலான் புத்தகத்தில் இப்படி நினைவுகூர்கிறார்: “இந்த மனிதர், அவர் உரிமை எடுத்துக்கொண்ட அளவுக்கு என்னை நேசித்தார் என்றால், ஏன் என்னைத் திருப்பி அனுப்பியிருக்கக் கூடாது? திருப்பி அனுப்பியிருந்தார் என்றால் நிச்சயமாக நான் ஒரு கொள்ளைக்காரியாக இருந்திருக்க மாட்டேன். எனக்கென்று ஒரு குடும்பமும் குழந்தைகளும் இருந்திருக்கும்”.

திருமணத்துக்குப் பிறகு, பூலான்தேவி கொஞ்சம் கொஞ்சமாக முழு கொள்ளைக் காரியாக மாறிவிடுகிறார். கொள்ளைக்கூட்டத்தில் நடக்கும் அதிகாரப் போட்டியில் விக்ரம் கொல்லப்படுகிறார். தனித்துவிடப்படும் பூலான்தேவியின்மீது பாலியல் வன்முறை கட்டவிழ்த்துவிடப்படுகிறது. இது பூலான்தேவிக்குள் பழிவாங்கும் வெறியை விதைக்கிறது. பூலானின் கூட்டத்தினரால் இருபத்திரண்டு தாக்கூர்கள் கொல்லப் படுகிறார்கள். அதற்குப் பிறகு, பூலான்தேவி காவல்துறையிடம் சரணடைகிறார்.

11 ஆண்டுகள் சிறைவாசத்திலிருந்து அவர் 1994-ல் அவர் வெளியே வருவதுடன் சுயசரிதை நிறைகிறது.

பூலான்தேவியின் வாழ்க்கை எப்படிப்பட்டது என்பதை இந்தப் புத்தகம் தெள்ளத்தெளிவாக ஆவணப்படுத்துகிறது. மு.ந. புகழேந்தி மொழிபெயர்த்திருக்கும் இந்த நூல், சாதியின் பெயராலும், பாலினத்தின் பெயராலும் ஓடஓட விரட்டப்பட்ட ஒரு பெண்ணின் வலிகளையும் வேதனைகளையும் பதிவுசெய் திருக்கிறது. நம் சமூக அமைப்பின் விகாரமான முகத்தை இது அம்பலப்படுத்துகிறது

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x