Published : 23 Oct 2016 01:48 PM
Last Updated : 23 Oct 2016 01:48 PM
‘சார் கூரியர்’ என்ற வார்த்தைகளைப் படித்ததுமே நம் மனம் ஓர் ஆணின் உருவத்தைத்தான் கற்பனை செய்துகொள்ளும். மன்னர்கள் காலத்தில் செய்தி கொண்டு செல்லும் தூதுவனில் தொடங்கி, தற்போது ஆன்லைனில் ஆர்டர் செய்யும் பொருட்களின் விநியோகம்வரை ஆண்களின் வசமாகவே இருக்கிறது டெலிவரி துறை. பயணமும் வாகனங்களைக் கையாள்வதும் ஆண்களுக்கு மட்டுமே சாத்தியம் என்ற நினைப்புதான் பெண்களை இந்தத் துறையில் இருந்து தள்ளிவைத்திருந்தது.
தங்கள் அறிவாலும் திறமையாலும் அனைத்தையும் சாத்தியப்படுத்தும் பெண்கள், தற்போது விநியோகத் துறையையும் தங்கள் கையில் எடுத்துவிட்டார்கள். அமேசான் இந்தியா நிறுவனத்தில் ‘டெலிவரி கேர்ள்’ பணியில் சேர்ந்து, சிறப்பாகச் செயல்பட்டுவரும் ஜமுனா ராணி, அப்படியான பெண்களில் ஒருவர்! சென்னை ராமாவரத்தைச் சேர்ந்த ஜமுனா ராணியிடம் புதிய துறையில் அவரது அனுபவம் எப்படி என்று கேட்டோம்.
“திருமணத்துக்குப் பிறகு ஏதாவது தொழில் செய்ய வேண்டும் என்று முயற்சி செய்துகொண்டிருந்தேன். அப்போதுதான் அமேசான் இந்தியா நிறுவனம் பெண்கள் டெலிவரி குழுக்களை ஏற்படுத்தவுள்ளதாகப் படித்தேன். உடனே அதற்கு விண்ணப்பிக்கலாம் என்று நினைத்தேன். என் தோழிகள் இருவரும் ஆவலோடு முன்வந்தனர். எங்கள் மீது நம்பிக்கை வைத்து, அமேசான் இந்தியா நிறுவனம் வாய்ப்பளித்தது. வங்கிகள், ஐடி நிறுவனங்கள், சில குறிப்பிட்ட குடியிருப்புகள்தான் எங்களின் முக்கிய வாடிக்கையாளர்கள். முதலில் எங்களைப் பார்த்து ஆச்சரியப்பட்டவர்கள், இப்போது எங்களை உற்சாகப்படுத்துகிறார்கள். இப்போது நாங்கள் இந்தப் பகுதியின் தனி அடையாளமாக இருக்கிறோம்” என்று தன் அனுபவங்களை வார்த்தைகளாக்குகிறார் ஜமுனா ராணி.
மேம்படும் பொருளாதாரம்
“அலைச்சல் மிகுந்த வேலை சிரமமாக இல்லையா?” என்று கேட்டால் “எந்த வேலையில்தான் சிரமம் இல்லை?” என்று பதில் வருகிறது ஜமுனாவிடமிருந்து. தற்போது ஒன்பது பெண்கள் இந்தத் துறையில் வேலை செய்துவருகிறார்கள். பலரும் முதல் முறையாக வேலைக்குச் செல்கிறவர்கள்.
“இந்த வருமானம் எங்கள் குடும்பத்தின் நிலையை உயர்த்தியுள்ளது. குடும்பப் பொருளாதாரம் உயர்வதால் தன்னம்பிக்கையும் மகிழ்ச்சியும் அதிகமாகின்றன. நாங்கள் மிக உற்சாகமாக எங்கள் பணியைச் செய்துவருகிறோம். நேரம் தவறாமைதான் எங்களின் சிறப்பு. தற்போது ஒரே பகுதியில் மட்டும் டெலிவரி செய்துவருகிறோம். விரைவில் நிறையப் பகுதிகளுக்கு டெலிவரி செய்ய வேண்டும். இப்போது தீபாவளி ஆர்டர்கள் நிறைய இருக்கின்றன. நேரம் இல்லை” என்று விடைகொடுக்கும் ஜமுனா ராணி, பெண்கள் குழுவினரின் எண்ணிக்கையை உயர்த்தப்பட வேண்டும் என்ற தன் ஆவலையும் வெளிப்படுத்த மறக்கவில்லை.
தமிழகத்தில் முதல் முறையாக, டெலிவரி பணியில் பெண்களை அமேசான் இந்தியா நிறுவனம் ஈடுபடுத்தியுள்ளது. பெண்கள் டெலிவரி ஸ்டேஷன் மூலம் ஆன்லைனில் ஆர்டர் செய்யப்பட்ட பொருட்களை வாடிக்கையாளர்களுக்கு விநியோகம் செய்துவருகிறது. ராமாவரம் டெலிவரி ஸ்டேஷனைப் பொறுத்தவரை, காலை எட்டு மணிக்கு வரும் நிறுவன வேனிலிருந்து பொருட்களை இறக்கி, ஒவ்வொருவரும் தங்களுடைய வழித்தடத்தைப் பிரித்துக்கொள்கிறார்கள். தங்கள் பகுதிக்கான விநியோகப் பொருட்களைப் பெரிய பையில் போட்டுக்கொள்கிறார்கள். ஹெல்மெட், யூனிபார்ம் அணிந்துகொண்டு இருசக்கர வாகனங்களில் கிளம்புகின்றனர்.
ஒருவருக்கு 20 பொருட்கள்வரை வழங்கப்படுகின்றன. பெரிய பொருட்களாக இருந்தால், வேனில் இருவர் எடுத்துச் செல்கின்றனர். அனைத்துப் பொருட்களையும் டெலிவரி செய்துவிட்டு, வீடு திரும்புகின்றனர். மீண்டும் மாலை மூன்று மணிக்கு டெலிவரி ஸ்டேஷன் வந்து, மறுபடியும் பொருட்களைப் பிரித்துக்கொண்டு பறந்துவிடுகின்றனர். ஆறரை மணிக்குள் டெலிவரிகளை முடித்துவிடுகின்றனர்.
தற்காப்பே பெண் காப்பு
அமேசான் இந்தியா நிறுவனத்தின் வாடிக்கையாளர் பிரிவு துணைத் தலைவர் அகில் சக்சேனா, “பெண்கள் முன்னேற்றம் குறித்து யோசித்த அமேசான் நிறுவனம், சில ஆய்வுகளை மேற்கொண்டது. கடந்த ஆண்டு இந்தியாவில் பெண்கள் டெலிவரி ஸ்டேஷன் தொடங்கத் திட்டமிட்டது. தமிழகத்தில் முழுக்க முழுக்கப் பெண்களே பணியாற்றும் டெலிவரி ஸ்டேஷன் ராமாவரம். ஜமுனா குழுவினர் சிறப்பாகச் செயல்படுகின்றனர். இவர்களின் சேவை திருப்தி தருவதாக வங்கிகளும் வாடிக்கையாளர்களும் மகிழ்ச்சி தெரிவித்துவருகின்றனர்.
விரைவில் பெண்கள் டெலிவரி ஸ்டேஷன்களை அதிகமாகத் தொடங்க ஆர்வமாக இருக்கிறோம். பெண்கள் டெலிவரி குழுவினருக்கு அமேசான் நிறுவனம் அடிப்படைத் தற்காப்புக் கலைகளைக் கற்றுத் தந்திருக்கிறது. பாதுகாப்புக்காக அனைவரும் பெப்பர் ஸ்பிரே வைத்திருக்கின்றனர். அத்துடன் பாதுகாப்பான இடங்கள் என்று கண்டறியப்பட்ட பின்னரே பெண்கள் குழுவினர் நியமிக்கப்படுகின்றனர்” என்கிறார்.
ஒரு பெண் பொருளாதார ரீதியாக சுதந்திரம் அடையும்போது அவளுக்கான வெளி பரந்து விரிவது கண் முன்னே தெரிகிறது!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT