Published : 23 Oct 2016 01:36 PM
Last Updated : 23 Oct 2016 01:36 PM
அடிப்படை வசதிகளற்ற சின்னஞ்சிறு கிராமமாக இருந்த தண்டலத்தை, சுகாதாரத்துக்கான ‘நிர்மல் புரஸ்கார் விருது’ வாங்கவைத்திருக்கிறார் ராதா பார்த்தசாரதி!
டி.வி.எஸ். குழுமத்தைச் சேர்ந்த ராதா, தன் கணவருடைய பூர்வீக கிராமமான தண்டலத்துக்குச் சென்றபோது, முட்புதர்கள் மண்டிக் கிடந்தன. நிலமெல்லாம் வெடித்துக் கிடந்தது. பள்ளமும் மேடுமாகச் சாலை.
“அது 2004-ம் வருஷம். தண்டலம் கிராமத்துக்குச் சென்னையில் இருந்து இரண்டு மணி நேரத்துல போயிடலாம். அங்கே மாலைவரை சமூகப் பணி செய்வேன். கழிவறைகூட அங்கே இருக்காது. ‘இங்கே இருக்கும் மக்கள் எல்லாம் அவசரத்துக்கு என்ன செய்வாங்க? இயற்கை உபாதையைக் கழிக்க இருட்டுற வரைக்கும் காத்துக்கிட்டு இருக்கணுமா?’னு பல கேள்விகள் எனக்குள்ளே எழுந்தன. இந்தியக் கிராமங்கள் இப்படி இருக்கின்றனவே என்ற வருத்தமும் ஏற்பட்டது. என்ன செய்தால் மாற்ற முடியும் என்று என் கணவரிடம் கேட்டேன். “ஒரே நாளில் எதையும் மாற்றிவிட முடியாது” என்றார்.
அதனால் நீண்ட காலத் திட்டங்களை ஆரம்பித்தோம். முதலில் மக்கள் மனதில் நம்பிக்கை ஏற்படுத்த இங்குள்ள ஸ்ரீஆதிகேசவ பெருமாள் கோயிலை புனருத்தாரணம் செய்தோம். கிராம மக்களுக்கு மகிழ்ச்சியும் நம்பிக்கையும் ஏற்பட்டன” என்கிறார் 75 வயது ராதா.
வருமானம் தரும் பொடி வகைகள்
பெண்களுக்கான மசாலா தொழிற்சாலை, தமிழ்நாடு விவசாயப் பல்கலைக்கழகத்தின் உதவியுடன் அமைக்கப்பட்ட பயோ காஸ் அடுப்பு திட்டம், 260 இலவசக் கழிப்பறைகள், இலவச டியூஷன் சென்டர், கால்நடை முகாம், மருத்துவமனை, மழைநீர் சேகரிப்பு, சோலார் விளக்குகள் போன்ற பல திட்டங்களைத் தண்டலம் மக்களுக்கு ஏற்பாடு செய்து கொடுத்திருக்கிறார் ராதா.
“அன்றைய தண்டலம் மிக மோசமாக இருந்தது. ஆண்கள் குடிப் பழக்கத்தில் மூழ்கியிருந்தார்கள். விவசாயப் பெண்கள் வருமானமின்றி, குழந்தைகளைப் படிக்கவைக்கச் சிரமப்பட்டார்கள். இவர்களின் வருமானத்துக்கு வழி செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் உதயமானதுதான் அன்னபூரணி பப்ளிக் சாரிடபிள் டிரஸ்ட். இதன் மூலம் தேயிலை, மசாலாப் பொடி, இட்லி மிளகாய்ப் பொடி, ரவா மற்றும் சாமை தோசை ரெடி மிக்ஸ், பருப்புப் பொடி, தக்காளி, புதினா வடாம் என்று முப்பத்தைந்துக்கும் மேற்பட்ட பொருட்களை, இங்குள்ள கிராமப் பெண்களை வைத்துத் தயாரிக்கிறோம். மாதம் ஒரு டன் வடாம் கையால் தயாராகிறது. விற்பதற்கான வழிமுறைகளை நான் பார்த்துக்கொண்டேன். இதிலிருந்து வரும் வருமானத்தை இங்கே வேலை செய்யும் பெண்களுக்கே சம்பளமாகக் கொடுத்துவிடுகிறேன். இன்று ஓரளவு மக்களின் வாழ்க்கை மேம்பட்டிருப்பதாக நினைக்கிறேன்” என்று சொல்லும்போது ராதாவின் முகத்தில் பெருமிதம்!
வீட்டுக்கு ஒரு கழிவறை கட்டிக் கொடுத்திருக்கிறார்கள். பொதுக் கழிவறைகளும் கட்டப்பட்டு, பராமரிக்கப்படுகின்றன. மாட்டு சாணத்திலிருந்து தினமும் பயோ காஸ் தயாரிக்கப்பட்டு, அடுப்பு எரிக்கப் பயன்படுகிறது. மாதம் 500 லிட்டர் பஞ்சகவ்யம் பெண்களின் பொறுப்பில் தயாராகிறது. இயற்கை உரம் தயாரிப்பதற்கான தொழிற்சாலை கட்டித் தரப்பட்டுள்ளது. அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்காக இலவச டியூஷன் மையம் நடத்தப்படுகிறது. பெண்களுக்குப் பசு மாடுகளை இலவசமாக கொடுத்திருக்கிறார்கள். அவற்றின் பாலை, பண்ணைகள் கொள்முதல் செய்கின்றன. இதனால் அவர்களின் மாத வருமானம் உயர்ந்துள்ளது.
“முன்பு இருந்ததைவிட பெண்களின் நிலை உயர்ந்திருக்கிறது. வருமானம் பெருகியிருக்கிறது. குழந்தைகளின் கல்விக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. கணவனை இழந்த பெண் ஒருவர், பசும்பால் விற்று அந்த வருமானத்தின் மூலம் ஒரு வீடு கட்டியிருப்பதைப் பார்க்கும்போது நிறைவாக இருக்கிறது” என்கிறார் ராதா பார்த்தசாரதி.
படங்கள்: எல்.சீனிவாசன்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT