Published : 23 Oct 2016 01:44 PM
Last Updated : 23 Oct 2016 01:44 PM
நம்மில் பலருக்கு தீபாவளி போனஸ் வந்திருக்குமே, அதைப் பற்றிப் பேசிவிடலாம். போனஸ் 25 ஆயிரம் ரூபாய் என்று வைத்துக்கொள்வோம். இதை வைத்துப் போடும் கணக்கை உங்கள் போனஸுக்கு ஏற்ப மாற்றிக்கொள்ளுங்கள். அதேபோல செலவுகளையும் நான்கு பேர் கொண்ட சிறு குடும்பம் என்ற அடிப்படையில் சொல்கிறேன். உங்கள் குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப மாற்றிக்கொள்ளுங்கள்.
நகை வாங்குவதும் லாபமே
போனஸ் வந்ததுமே இதையெல்லாம் வாங்கிவிட வேண்டும் என்ற பட்டியல் உங்களிடம் இருக்கும். அதில் தங்க நகை முக்கியமான இடத்தைப் பிடித்திருக்கும். நகை வாங்குவதாக இருந்தால் உடனே வாங்கிவிடுங்கள். (சில அத்தியாயங்களுக்குப் பிறகு தங்கத்தை நகையாக வாங்காதீர்கள். அது நல்ல சேமிப்பு இல்லை என்று சொல்லத்தான் போகிறேன். இன்றைக்கு இது சரி, அன்றைக்கு அது சரி. எப்படி என்பதைத் தங்கம் சேமிப்பு பற்றிப் பேசும்போது பார்க்கலாம்.) நகை வாங்கவில்லையென்றால் துணிகளில் கொஞ்சம், பலகாரங்களில் கொஞ்சம், பட்டாசில் கொஞ்சம் என்று கொஞ்சம் கொஞ்சமாக போனஸ் கரைந்துவிடும்.
நான்கு பேர் கொண்ட குடும்பத்துக்குத் தலா ஆயிரத்து ஐநூறு ரூபாய் புதுத் துணி என்று வைத்தால் ஆறாயிரம் ரூபாய். நான்காயிரத்தில் பட்டாசு, பலகாரம் என்று எல்லாச் செலவுகளையும் முடித்துவிடுங்கள். மீதமுள்ள பதினைந்தாயிரத்தைச் சேமிப்பாகப் போட்டு வையுங்கள். ஓராண்டில் அந்தத் தொகை லேசாக முளைவிட்டு வளரத் தொடங்கியிருக்கும். அதை அப்படியே விட்டுவைத்தால் பிள்ளைக்குத் தலை தீபாவளி கொண்டாடும்போது நிச்சயம் உபயோகமாக இருக்கும்.
நான் பார்த்து வைத்திருக்கிற பட்டுப் புடவையே பத்தாயிரத்துக்கு மேல். இதில் மொத்த பட்ஜெட்டையுமே ஆறாயிரத்தில் முடிக்கச் சொல்கிறீர்களே என்கிறீர்களா? இந்தத் தீபாவளிக்குப் பொறுத்துக்கொள்ளுங்கள். கையோடு ஒரு சீட்டைத் தொடங்குங்கள். அடுத்த தீபாவளிக்கு நீங்கள் நினைத்ததை வாங்கிவிடலாம்!
தீபாவளி சீட்டில் சேரலாமா?
சீட்டு சேரும்போது பல விஷயங்களைக் கவனிக்க வேண்டும். முதலில் கவனிக்க வேண்டியது, சீட்டு மோசடி என்று தினசரிகளில் வரும் செய்தியை. அப்போதுதான் நாம் எச்சரிக்கையாக இருக்க முடியும்.
தீபாவளி சிறப்புச் சீட்டு. மாதம் ஐநூறு ரூபாய் கட்டினால் தீபாவளிக்கு இரண்டு கிலோ ஸ்வீட், இரண்டு கிலோ காரம் (மதிப்பு ஆயிரம் ரூபாய்), பட்டுப் புடவை, பட்டு வேட்டி, சட்டைத் துணி (மதிப்பு மூவாயிரம் ரூபாய்), பத்து கிலோ அரிசி, பருப்பு, வெல்லம், உளுந்து, எண்ணெய் உள்ளிட்ட மளிகை சாமான் (மதிப்பு இரண்டாயிரம் ரூபாய்), பட்டாசு (மதிப்பு மூவாயிரம் ரூபாய்) மட்டன் இரண்டு கிலோ (மதிப்பு ஆயிரம் ரூபாய்) என்று பட்டியல் போட்டு உங்களிடம் சீட்டு சேரச் சொல்லியிருப்பார்கள். நாம் கட்டும் ஆறாயிரம் ரூபாய்க்கு நமக்கு மளிகை, துணி, பட்டாசே வந்துவிடும். ஸ்வீட், காரம், மட்டன் எல்லாம் கூடுதலாகக் கிடைப்பது என்ற வகையில் நமக்கு நல்ல லாபம் தருவதாக இருக்கும்.
அவர்களுக்கும் மொத்தமாகப் பட்டாசு, பொருட்கள் எல்லாம் வாங்குவதால் குறைந்த விலையில் கிடைக்கும். இவை எல்லாமே நியாயமாக நடந்துகொள்பவர்களால்தான் சாத்தியம். ஆனால், பலரும் இருநூறு, முந்நூறு பேர் சீட்டு சேர்ந்ததும் பத்து மாதங்கள் வசூல் செய்துவிட்டு, தலைமறைவாகிவிடுவார்கள். பிறகு குதூகல தீபாவளி, சோகத்தில் முடிந்துவிடும்.
அந்த ஐந்து கேள்விகள்
‘உங்கள் நலனுக்காக’ என்ற அறிவிப்போடு யாராவது சீட்டு போடச் சொல்லி வந்தால் ஐந்து கேள்விகளைக் கேளுங்கள்.
1. உங்கள் சீட்டு நிறுவனத்தைப் பதிவு செய்திருக்கிறீர்களா? அதற்கான பதிவு எண், சான்றிதழ் போன்ற விஷயங்களைக் காட்ட முடியுமா என்பது உங்கள் முதல் கேள்வியாக இருக்க வேண்டும்.
2. அடுத்து சீட்டு நடத்துபவரின் நடத்தை, நாணயம் எப்படிப்பட்டது என்பதை அக்கம் பக்கம் விசாரித்து உறுதி செய்துகொள்ளுங்கள்.
3. இந்தத் துறையில் இவர்களுடைய அனுபவம் எத்தனை ஆண்டுகள் என்பதைக் கொஞ்சம் ஆய்வு செய்து முடிவு எடுங்கள்.
4. ஒருவேளை இவர்கள் ஓடிப் போய்விட்டால், நாம் கட்டிய பணத்தை வசூலிக்க ஏதேனும் வழி இருக்கிறதா என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.
5. கடைசியாக இப்படி எந்த அங்கீகாரமும் இல்லாமல், வாய் வார்த்தையாக உறுதி தருபவர்களை நம்பி சீட்டு சேரத்தான் வேண்டுமா என்று உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள்.
இப்படி ஒரு குண்டு போட்டுவிட்டீர்களே என்கிறீர்களா? உண்மைதான். சேமிப்பில் மிக மிக முக்கியமாகத் தெரிந்துகொள்ள வேண்டிய விதி இதுதான்: பேராசை பெரு நஷ்டம். நம் சேமிப்புக்கு, நியாயமாக என்ன லாபம் கிடைக்க வேண்டுமோ அது கிடைக்கும். அதிகமாக ஆசைப்பட்டால் நஷ்டம் அடையவும் சாத்தியம் உண்டு.
இப்படி நீட்டி முழக்குவதைவிட சீட்டு சேராதீர்கள் என்று சொல்லிவிட்டுப் போய்விடலாமே என்று தோன்றுகிறதா? மத்தியதர மக்களுக்கு சீட்டு போன்று ஒரு சிறப்பான சேமிப்பு இருக்க முடியாது. ஆனால், எப்படிப்பட்ட சீட்டில் சேர வேண்டும் என்ற வழிமுறை இருக்கிறது. அது பற்றி விரிவாகப் பார்க்கலாம்.
கட்டுரையாளர், முதலீட்டு ஆலோசகர்
தொடர்புக்கு: cmbabu2000@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT