Published : 09 Oct 2016 01:06 PM
Last Updated : 09 Oct 2016 01:06 PM
கர்நாடகத்தைச் சேர்ந்த ராணி அப்பக்கா தேவி சௌதா, அந்நியரை எதிர்த்துப் போரிட்ட முதல் வீராங்கனை என்ற பெருமைக்குச் சொந்தக்காரர். எதற்கும் அஞ்சாத துணிச்சலின் காரணமாக, பயம் அறியாத ராணி என்று பொருள்படும் வகையில் ‘அபய ராணி’ என்று போற்றப்பட்டவர்.
அந்நியரை எதிர்த்துப் போரிட்ட வீராங்கனையாகக் கொண்டாடப்படும் ஜான்சி ராணி லட்சுமிபாய் வாழ்ந்த காலத்துக்கு 300 ஆண்டுகளுக்கு முன்னதாகப் போர்த்துகீசியர்களின் ஆக்கிரமிப்புக்கு எதிராகப் போராடிய அப்பக்கா, வரலாற்றில் மறக்கப்பட்டிருக்கிறார். தீரமிக்க அவரது போர்கள் முறையாகப் பதிவு செய்யப்படவில்லை.
மூவர் ஒன்றானால்
16-ம் நூற்றாண்டில் போர்த்துகீசியர்களை எதிர்த்து அப்பக்கா ராணி தொடர்ச்சியாகப் போரிட்டிருக்கிறார். கன்னட வாய்மொழிக் கதைகளும் நாட்டுப்புறப் பாடல்களும் ‘அப்பக்கா மகாதேவி’ என்று அழைத்து, அவரை தெய்வமாகவே போற்றுகின்றன. கர்நாடகத்தின் முக்கிய நாட்டுப்புறக் கலை வடிவங்களான யக்ஷகானம் (நாடக வடிவம்), பூதரதனா (சடங்கு நாட்டிய வடிவம்), நாட்டுப்புறப் பாடல்களில் அப்பக்கா ராணியின் கதை காலம்காலமாக நிகழ்த்தப்பட்டுவருகிறது.
பழைய ஆவணங்கள், போர்த்துகீசியர்களின் பயணக் குறிப்புகள், வரலாற்று ஆய்வுகள் மூன்று அப்பக்காக்களைப் பற்றி குறிப்பிடுகின்றன. ஒருவர் தாய், மற்ற இருவரும் மகள்கள். இவர்களில் இரண்டாவது மகள், மிகவும் துணிச்சல் மிகுந்தவர். நாட்டுப்புறக் கதைகள் மூன்று அப்பக்காக்களையும் சேர்த்து ஒரு மகாராணியாக, அப்பக்கா மகாதேவி அல்லது ராணி அப்பக்கா என்ற பெயரில் முன்னிறுத்துகின்றன. போர்த்துகீசிய ராணுவத்துக்கு எதிராக 1530-ல் இருந்து 1599வரை கிட்டத்தட்ட 70 ஆண்டுகளுக்கு இவர்கள் போரிட்டிருக்கிறார்கள்.
ராணுவ அறிவும் போர் தந்திரங்களும்
தாய்வழிச் சமூகம் காரணமாகவே அப்பக்கா ராணியானார் என்று கருதப்படுகிறது. அவர் ஆட்சி செய்த பகுதி கர்நாடகத்தின் கடற்கரையோரப் பகுதியான துளுநாடு. மங்களூரு அருகே அரபிக் கடலின் கரையில் உள்ள உல்லாலைத் துணைத் தலைநகராகக் கொண்டு அவர் ஆண்டுவந்தார். வில்வித்தை, வாள் சண்டையில் திறம் மிகுந்த அவரது ராணுவ அறிவும் போர் தந்திரங்களும் பெரிதாகப் பேசப்பட்டன. நாட்டுப்புறக் கதைகள் சொல்வதன் அடிப்படையில் தீ அம்புகளைக் கடைசியாகப் பயன்படுத்தியவர் அப்பக்கா.
அப்பக்கா சமண மதத்தைப் பின்பற்றினாலும், மற்ற மதங்கள், சமூகங்களைச் சேர்ந்தவர்களை அனுசரணையாகவே நடத்தியுள்ளார். அண்டை ஆட்சிப் பகுதியான பங்கரின் ராஜாவை அவர் மணம் முடித்தாலும், கொஞ்சக் காலத்திலேயே மணமுறிவு ஏற்பட்டது. பிற்காலத்தில் போர்த்துகீசியர்களுடன் இணைந்த முன்னாள் கணவர், அப்பக்காவை எதிர்த்தார்.
கப்பம் கட்ட மறுப்பு
வியூக முக்கியத்துவம் வாய்ந்த உல்லால் கோட்டையைக் கைப்பற்ற போர்த்துகீசியர்கள் பல முறை முயற்சித்தார்கள். ஒவ்வொரு தாக்குதலையும் துணிச்சலுடனும் புத்திசாலித்தனத்துடனும் அப்பக்கா எதிர்கொண்டார்.
1525-ல் தெற்கு கனரா கடற்கரைப் பகுதியைத் தாக்கி, மங்களூரு துறைமுகத்தைப் போர்த்துகீசியர்கள் தகர்த்தார்கள். இதைத் தொடர்ந்து தன்னுடைய ஆட்சிப் பகுதியைப் பாதுகாத்துக் கொள்வதற்கான ஏற்பாடுகளை ராணி அப்பக்கா தொடங்கினார். 1555-ல் அப்பக்காவிடம் கப்பம் வசூலிக்க அட்மிரல் டான் அல்வாரோ டா சில்வெரிராவை போர்த்துகீசியர்கள் அனுப்பினார்கள். அதற்கு அடிபணிய மறுத்த அப்பக்கா, போரிடத் தொடங்கினார்.
வாகையும் வீழ்ச்சியும்
1567-ல் ஜெனரல் ஜோவ் பேஷோடோ தலைமையிலான படையைப் போர்த்துகீசியர்கள் அனுப்பினார்கள். அவர் உல்லால் கோட்டையைக் கைப்பற்றி அரசவையிலும் நுழைந்தார். அப்போது உல்லால் கோட்டையிலிருந்து தப்பிய அப்பக்கா, ஒரு மசூதியில் அடைக்கலம் புகுந்தார். அதே நாள் இரவில் 200 வீரர்களுடன் பதில் தாக்குதல் தொடுத்த அப்பக்கா, ஜெனரல் பேஷோடோ உள்ளிட்ட 70 போர்த்துகீசிய வீரர்களைக் கொன்றார்.
வேறு வழியில்லாமல் போர்த்துகீசியர்கள் தங்கள் கப்பலுக்குத் தப்பிச் சென்றார்கள். எஞ்சியிருந்த போர்த்துகீசிய வீரர்களையும் அட்மிரல் மாஸ்கரேனஸையும் அப்பக்காவின் 500 முஸ்லிம் ஆதரவாளர்கள் தாக்கினார்கள்.
தொடர்ந்து முஸ்லிம் வீரர்களின் உதவியுடன் போர்த்துகீசியர்களிடம் இருந்து மங்களூரு கோட்டையையும் அப்பக்கா கைப்பற்றினாலும், மீண்டும் அது போர்த்துகீசியர்கள் வசமே போனது. எதற்கும் அசராமல் தொடர்ந்து போரிட்டுக்கொண்டிருந்த அப்பக்கா ராணி, போர்த்துகீசியர்களுக்கு ஆபத்தாகவே தெரிந்தார். இதன் காரணமாக அப்பக்காவின் முன்னாள் கணவரான பங்கர் பகுதி ராஜாவுடன் ஒப்பந்தம் செய்ய போர்த்துகீசியர்கள் முயற்சித்தனர். அப்பக்காவும் பிஜபூர் சுல்தான் அஹமது, கோழிக்கோடு சமுத்திரி அரச வம்சத்தினருடன் இணைந்து போர்த்துகீசியர்களை எதிர்க்க ஆரம்பித்தார்.
விடாது போராட்டம்
அப்பக்காவின் ராணுவ வியூகங்களை முன்னாள் கணவர் போர்த்துகீசியர்களிடம் சொல்லிவிட, போரில் அப்பாக்கா தோல்வியைத் தழுவினார். கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டபோது, சிறையைத் தகர்ப்பதற்கான ஆதரவு திரட்டும் முயற்சியில் இறங்கினார். அதுவும் தோல்வியடைய, கடைசியில் அங்கேயே இறந்தார்.
கன்னட நாட்டுப்புற இலக்கியத்தில் போற்றப்படும் அப்பக்காவுக்கு, நீண்ட காலத்துக்குப் பிறகே பெங்களூருவில் சிலையை நிர்மாணித்துத் தனக்குப் பெருமை தேடிக்கொண்டது கர்நாடக அரசு.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT