Published : 09 Oct 2016 01:25 PM
Last Updated : 09 Oct 2016 01:25 PM

முகம் நூறு: நெருக்கடியால் நிறைவேறிய கனவு

நம் சமூகத்தில் பேசி, தெளிவுபடுத்திக்கொள்ள வேண்டிய பல விஷயங்களைப் பற்றி பெண்கள் வாய் திறப்பதே இல்லை. பெண்கள் இப்படித் தவிர்க்கும் சங்கதிகளில் முதன்மையானது மாதவிடாய். மாதவிடாய் நாட்களில் பேணப்பட வேண்டிய சுகாதாரம் மற்ற எதையும்விட முக்கியம். “நம் கருப்பையிலிருந்து வெளியேறும் ரத்தத்தைச் சில மணி நேரத்துக்குச் சேகரித்துவைக்கும் நாப்கின்கள் தரமாக இருக்க வேண்டும். காரணம் மாதவிடாய் நாட்களில் கருப்பையின் வாய் திறந்திருக்கும். அந்த நேரத்தில் கிருமிகள் கருப்பைக்குள் நுழைவது எளிது. சுகாதாரத்தில் நாம் காட்டுகிற சின்னதொரு அலட்சியம்கூட நம்மைப் பேராபத்துக்கு அழைத்துச் சென்றுவிடும்” என்கிறார் நாகலட்சுமி. சென்னை கெருகம்பாக்கத்தில் சானிட்டரி நாப்கின்கள் தயாரிக்கும் தொழிலை நிர்வகித்துவரும் இவர், இதுவரை ஒன்றரை லட்சம் பெண்களுக்கு மேல் மாதவிடாய் கால சுகாதாரம் குறித்த விழிப்புணர்வை அளித்ததுடன், சானிட்டரி நாப்கின்கள் செய்வதற்கான பயிற்சியையும் அளித்திருக்கிறார். யுனிசெஃப் அமைப்பின் மாஸ்டர் டிரெயினராக இருந்த இவர், வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களுக்கும் பயிற்சி அளித்திருக்கிறார்.

புதிய அடையாளம்

நாகலட்சுமி, சிறு வயதிலேயே தாயை இழந்தவர். விடுதிகளில் தங்கிப் படித்ததால் வெளியுலகமே தெரியாமல் வளர்ந்திருக்கிறார். மத்திய அரசு அதிகாரியான அப்பாவின் வழிகாட்டுதலால் எலெக்ட்ரானிக் இன்ஸ்ட்ருமெண்டேஷன், ஃபேஷன் டெக்னாலஜி படித்தார். இவர் படித்த படிப்புக்கு ஏற்ற வேலைக்குச் செல்ல நெடுந்தொலைவு பயணிக்க வேண்டும் என்பதால், கெருகம்பாக்கத்தில் வீட்டுக்குப் பக்கத்தில் உள்ள பள்ளியில் ஆசிரியர் பணியில் சேர்ந்தார். சில மாதங்களில் திருமணம் நடக்க, அடுத்தடுத்து மகனும் மகளும் பிறந்தனர். கணவருடைய தொழிலில் சுணக்கம் ஏற்பட்டு, பொருளாதார ரீதியாகச் சிக்கல்களைச் சந்தித்தபோதுதான், ஏதாவது செய்தே ஆகவேண்டும் என்று முடிவெடுத்தார் நாகலட்சுமி.

“சின்ன வயசுல இருந்தே ஏதாவது தொழில் தொடங்கணும்னு எனக்கு ஆசை. ஆனா, அதுக்கு வழிகாட்ட யாருமில்லாததால இல்லத்தரசிங்கற அடையாளத்தோட மட்டும் இருந்தேன். வீட்ல பணக் கஷ்டம் வந்தப்போதான் என் தொழிலதிபர் கனவு மீண்டும் மேலெழுந்துச்சு” என்று சொல்லும் நாகலட்சுமி தன் வீட்டுக்குப் பக்கத்தில் உள்ள அஞ்சல் நிலையத்தில் பெண்கள் கூட்டமாக நிற்பதைப் பார்த்தார். விசாரித்தபோது அவர்கள் மகளிர் சுயஉதவிக் குழுக்களைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. உடனே தங்கள் பகுதியில் உள்ள பெண்களை ஒருங்கிணைத்து மகளிர் சுயஉதவிக் குழு ஒன்றைத் தொடங்கினார்.

“குழு தொடங்கினா, ஏதாவது தொழில் செய்யணுமே. எனக்கு டெய்லரிங் தெரியுங்கறதால அதைத்தான் முதல்ல ஆரம்பிச்சேன். காஞ்சிபுரம் பி.டி.ஓ. ஆபிஸுக்கும் மாவட்டத் தொழில் மையத்துக்கும் போய் என்னென்ன தொழில் தொடங்கலாம், அதுக்கு எவ்வளவு லோன் கிடைக்கும்னு விசாரிச்சேன்” என்று சொல்லும் நாகலட்சுமி, எட்டு தையல் மிஷின்களோடு தனது தொழிலை விரிவுபடுத்தினார்.

வந்தது புதிய பாதை

நட்சத்திர ஓட்டல்களில் வைக்கப்படும் கைக்குட்டை தயாரிக்கும் ஆர்டர் பெரிய அளவில் கிடைத்தது. நல்ல வருமானம் வந்தாலும் வருடத்தில் ஒன்பது மாதங்கள் மட்டுமே வேலை. மீதியிருக்கும் மூன்று மாதங்களுக்கு என்ன செய்வது?

“அப்போதான் என்.ஐ.எஃப்.டி. சார்பில் தரமணியில் சானிட்டரி நாப்கின் தயாரிக்கும் பயிற்சி நடக்கப் போறதைப் பத்தி தகவல் கிடைச்சுது. தமிழகம் முழுவதும் இருந்து 32 பேர் அந்தப் பயிற்சியில கலந்துக்கிட்டோம். பயிற்சி முடிஞ்சதும் யாருமே தொழில் தொடங்கத் தயாரா இல்லை. காரணம் அங்கே பயிற்சி மட்டும்தான் கிடைச்சுது. ஒரு பொருளைத் தயாரிக்கறதைவிட, அதைச் சந்தைப்படுத்தறதுதான் முக்கியம். சானிட்டரி நாப்கின்களை எப்படி விற்பனை செய்யறதுன்னு தெரியாம பலரும் தயங்க, நான் துணிஞ்சு இறங்கினேன்” என்று புன்னகைக்கிறார் நாகலட்சுமி.

ஆரம்பத்தில் இவருடன் சுயஉதவிக் குழுவைச் சேர்ந்த இருவர் சேர்ந்து தொழில் தொடங்கியிருக்கிறார்கள். நாளடைவில் அவர்கள் விலகிக்கொள்ள, தொழில் தொடங்குவதற்காக வாங்கிய கடன் தொகை முழுவதும், இவரது தலையில் விழுந்தது.

“எப்படிச் சமாளிக்கப்போறோம்னு முடங்கி உட்காராம, அடுத்து என்னன்னு யோசிச்சேன். யாரையும் நம்பாம நானே களத்தில் இறங்கினேன். சிவில் சப்ளை ஆபிஸுக்குப் போனேன். 24 அமுதம் சிறப்பு அங்காடிகளில் விநியோகிப்பதற்கான ஆர்டர் எனக்குக் கிடைச்சுது. அதுக்கப்புறம் ஏறுமுகம்தான். வேலை செய்தே ஆகணும்னு கட்டாயம், ஏதாவது ஒரு தொழில்ல சாதிக்கணுங்கற விருப்பம். இது ரெண்டும்தான் எனக்கு இப்போ அங்கீகாரத்தைக் கொடுத்திருக்கு” என்று சொல்லும் நாகலட்சுமி, பதினைந்து ஆண்டுகளாக சுயதொழில் செய்துவருகிறார்.

இயற்கை வழியில்

தனக்கு வருகிற ஆர்டர்களைப் பல சுயஉதவிக் குழுக்களுக்கும் பிரித்துக் கொடுக்கிறார். நாப்கின் தயாரிப்பில் பல புதுமைகளைச் செய்ய இவரது தொழில்நுட்ப அறிவு கைகொடுக்கிறது.

“கையில் தயாரிக்கும் நாப்கின்களில் பொதுவா விங்க்ஸ் மாடல் செய்ய மாட்டாங்க. நான் அதையும் செய்தேன். நிறைய பெண்கள் ஏன் நாப்கின் தயாரிக்கிற தொழிலுக்கு வரத் தயங்கறாங்கன்னு யோசிச்சப்போதான், அவங்களுக்கு இதைப் பத்தி போதுமான விழிப்புணர்வு இல்லைன்னு புரிஞ்சது. இது தொழில் மட்டுமல்ல, பெண்களின் ஆரோக்கியத்துக்கு வழிகாட்டுற சேவையும்கூடன்னு அவங்களுக்கு விளக்கினேன். ரசாயனங்கள் நிறைஞ்ச வெளிநாட்டு நாப்கின்களை கேள்வியே கேட்காம பயன்படுத்துறோம். அந்த நாப்கின்களின் தரம், செயலாற்றும் தன்மை இதைப் பத்தியெல்லாம் யாருகிட்டே போய் கேட்க முடியும்? அதுவே நம்ம ஊர்ல ஒருத்தர் சானிட்டரி நாப்கின் தயாரிச்சா, அதோட நிறைகுறைகளைச் சொல்லலாம். நம்மளோட எதிர்பார்ப்பையும் பகிர்ந்துக்கலாம். வாடிக்கையாளர்களின் கருத்துக்கு ஏற்பதான், ஒவ்வொரு மாடலையும் நான் மேம்படுத்தியிருக்கேன்” என்று சொல்லும் நாகலட்சுமி, தாவரப் பொருட்களையும் மூலிகைப் பொருட்களையும் பயன்படுத்தி நாப்கின்கள் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுவருகிறார்.

“நாப்கின்களில் மேற்பரப்புக்கு மல் காட்டன் வகையைப் பயன்படுத்தலாம். செயற்கைத் துணியோடு ஒப்பிடும்போது இது கொஞ்சம் விலை அதிகம். ஆனா, சிக்கனத்தைவிட நம் ஆரோக்கியம் முக்கியமல்லவா! மாதவிடாயின்போது கருப்பையின் வாய் மூடிக்கொள்ளும் கடைசி நாட்களிலாவது இவற்றைப் பயன்படுத்தலாம். பெண்களுக்குக் கருப்பை, கருமுட்டைப் பை, கருப்பை வாய், கருப்பைக் குழாய் ஆகியவற்றில் புற்றுநோய் ஏற்படுவது நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. அதனால், கருப்பையின் நலம் காக்கும் வகையிலும், தோலுக்குப் பாதிப்பு ஏற்படுத்தாத வகையிலும் மலைவேம்பு, கற்றாழை ஆகியவற்றுடன் ஏழு வகையான மூலிகைகளைக் கலந்து நாப்கின்கள் தயாரிக்கும் பணியைச் செய்துவருகிறோம். மக்களின் ஆதரவைப் பொறுத்து இதை விரிவாக்கும் எண்ணம் இருக்கிறது” என்று சொல்கிறார் நாகலட்சுமி.

படங்கள்: க.பரத்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x