Last Updated : 23 Oct, 2016 01:49 PM

 

Published : 23 Oct 2016 01:49 PM
Last Updated : 23 Oct 2016 01:49 PM

முகங்கள்: சங்கதி சொல்லும் கோலங்கள்

நகரத்துப் பெண்கள் கைவிட்ட விஷயங்களில் கோலமும் ஒன்று. வீதியை அடைத்துக்கொண்டு கம்பிக் கோலம், வண்ணக் கோலம் போடுவதற்கெல்லாம் தற்போது இடமும் இருப்பதில்லை; நேரமும் இருப்பதில்லை. அவரவர் வசதிக்கு ஏற்ப பெயின்ட், ஸ்டிக்கர் கோலங்களை வைத்துக்கொள்கிறார்கள்.

இன்றும் கோலத்தை ஒரு கலையாக நினைத்து, வரைபவர்களும் இருக்கிறார்கள். விழுப்புரம் , மாந்தோப்பு தெருவில் வீணையுடன் சரஸ்வதி வீற்றிருக்கும் கோலம் எல்லோரையும் நிற்க வைத்துவிட்டது. அழகான கலைமகளை வரைந்தவரும் கலைமகள்தான்! விதவிதமாகக் கோலம் போடுவதில் வல்லவர்.

கோலம் போடுவதில் என்ன புதுமை என்று யோசிக்கலாம். கலைமகள் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கருத்தை மையமாக வைத்துக் கோலம் வரைகிறார். இவர் வரைகிற கோலத்தைப் பார்த்தாலே பல சமயங்களில் அந்த நாளின் சிறப்பு என்ன என்பது புரிந்துவிடும்.

“சின்ன வயதிலிருந்தே கோலங்கள் போடுவதிலும் புதிய கோலங்களை உருவாக்குவதிலும் எனக்கு ஆர்வம் அதிகம். ஓய்வு நேரங்களில் எல்லாம் நோட்டும் பென்சிலுமாகத்தான் இருப்பேன். பண்டிகை, விசேஷ நாட்களில் அதற்கு ஏற்ற மாதிரி கோலங்கள் போடுவேன். சரஸ்வதி பூஜை என்பதால், சரஸ்வதியை வரைந்தேன். சாதாரண நாட்களிலும்கூட என் கோலம் ஏதாவது ஒரு விதத்தில் வித்தியாசமாக இருக்க வேண்டும் என்று நினைப்பேன். இப்போதெல்லாம் கோலத்தோடு சமூகக் கருத்துகளையும் எழுதிவைத்து விடுகிறேன். என் கோலம் இந்தப் பகுதியில் உள்ளவர்களிடம் மிகவும் பிரபலம்.

இந்தத் தெருவுக்கு வருகிறவர்கள், ஒரு நிமிடமாவது நின்று கோலத்தை ரசிக்காமல் செல்வதில்லை. சிலர் என்னைக் கூப்பிட்டுப் பாராட்டுவதும் உண்டு. இளம் பெண்கள் பலர் நான் இன்று என்ன கோலம் போட்டிருக்கிறேன் என்பதைப் பார்ப்பதற்காகவே இந்தப் பக்கம் வருவார்கள். என் திறமையை அறிந்து, வீட்டில் உள்ளவர்களும் உற்சாகப்படுத்திவருகிறார்கள்’’ என்று மகிழ்ச்சியுடன் சொல்கிறார் கலைமகள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x