Last Updated : 23 Oct, 2016 01:42 PM

 

Published : 23 Oct 2016 01:42 PM
Last Updated : 23 Oct 2016 01:42 PM

பெண் தடம்: ரௌத்ரம் பழகிய துர்காவதி

ராணி துர்காவதி, 16-ம் நூற்றாண்டில் கோண்ட் பகுதியின் (இன்றைய மத்தியப் பிரதேசம்) அரசியாக 14 ஆண்டுகள் ஆட்சி புரிந்தவர். முகலாயப் பேரரசர் அக்பரின் சமகாலத்தில், அவரது ஆட்சிப் பகுதிக்கு அருகே ஆட்சி புரிந்தவர். முகலாயப் படைக்கு எதிராகவும் அண்டை அரசரான பாஸ் பஹதூர் படைக்கு எதிராகவும் துணிச்சலாகப் போரிட்டவர்.

துர்காவதி, சண்டேல் வம்சாவளியைச் சேர்ந்தவர். இந்த சண்டேல் வம்சத்தினர்தான், முகமது கஜினியை எதிர்த்தவர்கள் என்பது மட்டுமில்லாமல் கஜுராஹோ கோயில்களில் உள்ள உலகப் புகழ்பெற்ற சிற்பங்களை வடிப்பதற்குக் காரணமாகவும் இருந்தவர்கள்.

மகனுக்குப் பதிலாக

1524-ம் ஆண்டு அக்டோபர் 5-ம் தேதி கலஞ்சார் கோட்டையில் (இன்றைய உத்தரப் பிரதேசம்), ராஜபுதன அரசர் கீரத் ராயின் மகளாகத் துர்காவதி பிறந்தார். 1542-ல் கோண்ட் அரச வம்சத்தைச் சேர்ந்த தல்பத் ஷாவை மணந்தார்.

மகன் வீரநாராயணுக்கு ஐந்து வயதான போது, தல்பத் ஷா இறந்தார். இதன் காரணமாகக் கோண்ட் ஆட்சிப் பகுதியை ராணி துர்காவதியே ஆள ஆரம்பித்தார். அதுவரை சிங்கார்கரில் இருந்த தலைநகரை, வியூக முக்கியத்துவம் அடிப்படையில் சாத்பூரா மலைத் தொடரில் உள்ள சௌராகருக்கு அவர் மாற்றினார். முதன்மை அமைச்சர் பையோஹர் ஆதார் சிம்ஹா, அமைச்சர் மான் தாக்கூர் ஆகிய இருவரும் துர்காவதி ஆட்சி நடத்த உதவியாக இருந்தார்கள்.

வெற்றியும் அச்சுறுத்தலும்

1556-ல் போர் தொடுத்துவந்த அண்டைப் பகுதியான மால்வாவின் அரசர் பாஸ் பஹதூரை ராணி துர்காவதி வீழ்த்தினார். ஆனால், 1562-ல் பாஸ் பஹதூரை வீழ்த்திய அக்பரின் படைகள், அந்தப் பகுதியை முகலாய சாம்ராஜ்யத்தின் கீழ் கொண்டுவந்தன.

மால்வா தங்கள் வசமாகிவிட்ட நிலையில், கோண்ட் பகுதியின் செல்வ வளம் முகலாயர் களுக்கு முக்கியமாகப்பட்டது. காரா மாணிக்பூரின் ஆளுநர் க்வாஜா அப்துல் மஜி அசஃப் கான், அதைக் கைப்பற்றும் நோக்கத்துடன் 1564-ல் கோண்ட் பகுதி மீது போர் தொடுத்தார்.

தடுப்புப் போர்

முகலாயப் படைகளின் பெரும் பலம் பற்றி கேள்விப்பட்ட பிறகும் ராணி துர்காவதி சரணடைய விரும்பவில்லை. முகலாயப் படை பெரிது என்பதால் அதைத் தடுக்கும் முனைப்புடன் நர்மதை - கார் நதிகள் மற்றும் மலைத் தொடருக்கு இடைப்பட்ட நராய் காட்டுப் பகுதிக்குப் படையுடன் துர்காவதி போனார். முகலாயப் படையில் பயிற்சி பெற்ற வீரர்களும் நவீன ஆயுதங்களும் பயன்படுத்தப்பட, துர்காவதியின் படையில் இருந்த வீரர்களோ தேர்ந்த பயிற்சி பெறாதவர்களாகவும், பழைய ஆயுதங்களுடனும் இருந்தார்கள். இருந்தபோதும் துர்காவதி துணிச்சலுடன் தாக்குதலைத் தொடங்கினார்.

முகலாயப் படை சமவெளியில் நுழைந்தபோது துர்காவதியின் வீரர்கள் தாக்கினர். இந்தச் சமமற்ற போரில் தளபதி அர்ஜுன் தாஸ் மடிய, ராணி துர்காவதியே படைக்குத் தலைமையேற்று வழிநடத்தினார். முதல் நாளில் துர்காவதி முகலாயப் படையை விரட்டியடித்ததாகக் கூறப்படுகிறது.

பிடிபட மறுப்பு

அடுத்த நாளில் அசஃப் கான் பீரங்கிகளுடன் போரைத் தொடங்கினார். இதை எதிர்கொள்ளும் நோக்கத்துடன் துர்காவதி யானையில் வந்தார். இந்தப் போரில் துர்காவதியின் மகன் வீரநாராயண் பங்கேற்றதாகக் கூறப்படுகிறது. போரில் இருவரும் காயமடைந்து பாதுகாப்பான இடத்துக்குத் தனித்தனியாக அழைத்துச் செல்லப்பட்டனர். முகலாயப் படை மூன்று முறை பின்வாங்கினாலும், தளராமல் திரும்ப வந்து போரிட்டுக்கொண்டே இருந்தது.

துர்காவதியின் யானைப் பாகன், ராணியைப் போர்க்களத்தை விட்டு அகலச் சொன்னார். வெற்றி சாத்தியமில்லை என்பதை உணர்ந்தபோது, குறுவாளால் தன்னையே மாய்த்துக்கொண்டார் துர்காவதி. 1564-ம் ஆண்டு ஜுன் 24-ம் தேதி அவர் மரணித்தார்.

அடையாளம் புனைதல்

ராணி துர்காவதியைக் கௌரவிக்கும் வகையில் 1983-ல் ஜபல்பூர் பல்கலைக் கழகத்தின் பெயர் ‘ராணி துர்காவதி விஸ்வ வித்யாலயா’ என்று மாற்றப்பட்டது. ஜபல்பூர் – ஜம்மு தாவி இடையே ஓடும் அதிவிரைவு ரயிலுக்கு ‘துர்காவதி எக்ஸ்பிரஸ்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

இஸ்லாமியர்களான முகலாயர்களுக்கு எதிராகப் போரிட்ட இந்து வீராங்கனை என்று ராணி துர்காவதியை முன்னிறுத்த இந்து மத அடிப்படைவாதிகள் முயற்சித்துவருகின்றனர். ஆனால் வரலாற்று ஆதாரங்களின்படி அந்தக் காலத்தில் ஆட்சிப் பொறுப்பில் இருந்தவர்களுக்கு இடையிலான வழக்கமான மோதலாகவே மேற்கண்ட போர்களைக் கருத முடிகிறது. அந்த இடத்தில் ராணி துர்காவதி சரணடைந்துவிடாமல் துணிச்சலாக எதிர்த்துப் போரிட்டது நிச்சயமாகச் சாதாரண விஷயமில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x