Last Updated : 09 Oct, 2016 01:24 PM

 

Published : 09 Oct 2016 01:24 PM
Last Updated : 09 Oct 2016 01:24 PM

சலங்கை ஒலி: கல்லூரியில் ஒலித்த சலாமு சப்தம்

நம் கலாச்சாரத்தின் அடையாள மாகவும் பாரம்பரியத்தின் பெருமையாகவும் கொண்டாடப்படும் பரதநாட்டியம் 1930-கள்வரை சதிர் என்றே அழைக்கப்பட்டது. சதிர் ஆட்டம் ஆலயங்களில் தொடங்கி அரண்மனைகள், ஜமீன்தார்களின் மாளிகைகள்வரை பயணித்த வரலாற்றை ஆய்வுசெய்திருக்கும் சொர்ணமால்யா, சதிர் ஆட்டத்தின் முக்கிய அம்சங்கள் சிலவற்றை நடனத்தில் ஈடுபாடு இருப்பவர்களுக்குக் கற்றுத்தருகிறார்.

ஆசியாவில் செயல்படும் யுனைடெட் போர்ட் ஃபார் கிறிஸ்டியன் ஹையர் எஜிகேஷன் சார்பாக கல்லூரிகளில் கிராமிய கலாச்சார பண்பாட்டை வளர்த்தெடுக்கும் நிகழ்வின் ஓர் அங்கமாக ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் இந்தப் பயிற்சிப் பட்டறை நடத்தப்பட்டது.

கல்லூரிக்குள் நுழைந்த சதிர்

சமீபத்தில் சென்னை, ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியின் செவ்வியல் நடனச் சங்கம், பண்டைய நடன முறையான சதிர் ஆட்டம் தொடர்பான பயிற்சிப் பட்டறையை சொர்ணமால்யாவின் வழிகாட்டுதலின்படி நடத்தியது. இதில் ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியைத் தவிர வேறு சில கல்லூரிகளிலிருந்தும் நடனப் பள்ளிகளிலிருந்தும் ஏறக்குறைய 40 மாணவியர் பங்கேற்றனர்.

சமூகத்திலிருந்து விலகாத நடனம்

பயிற்சியின்போது சொர்ணமால்யா, முந்தைய நூற்றாண்டுகளில் நடனம், சமூகத்தின் வாழ்க்கைச் சூழலிலிருந்து விலகாத அம்சமாக எப்படித் திகழ்ந்தது என்பதை விளக்கினார். செவ்வியல் நடனம், கிராமிய நடனம் என்னும் பிரிவினைகள்கூட அன்றைக்கு இல்லை. ஒரு குறிப்பிட்ட சமூகத்தினருக்கான கலை வடிவமாக சதிர் இருந்தாலும், அன்றைக்கு இருந்த பல்வேறு கலாச்சாரங்களையும் தன்னிடத்தே கொண்ட கலை வடிவமாக அது எப்படி மிளிர்ந்தது என மாணவிகளுக்கு விளக்கப்பட்டது. தன்னுடைய சில நடன ஆசிரியர்களிடமிருந்து கற்ற சதிர் ஆட்டத்தின் சில முக்கிய அம்சங்களையே தன்னுடைய மாணவிகளுக்கு பயிற்றுவிப்பதாகக் கூறினார் சொர்ணமால்யா.

சலாமு சப்தம்

நாயக்கர் கால நாட்டிய முறைகள் தொடர்பாக ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றிருக்கும் சொர்ணமால்யா, பழங்கால நாட்டிய வடிவமான சதிர் ஆட்டம் இந்து, கிறிஸ்தவம், இஸ்லாம் என எல்லா கலாச்சாரத்தையும் தன்னுள் கொண்டிருந்தது. சப்தம் என்பது நாட்டியத்தில் ஓர் உருப்படி. இந்துக் கடவுள்களை குறித்து பாடப்பட்டாலும் அன்றைக்கு இருந்த இஸ்லாம் வழக்கப்படி, அந்தக் கடவுளர்களுக்கு சலாமு சொல்லி பாட்டெழுதும் வழக்கம் இருந்திருக்கிறது.

ஸ்ரீ தஞ்சபுரமுனா

பிரகதீஸ்வரூரே

ஹவுது ஹவுதுரே

சலாமுரே…

என்னும் ஒரு சலாமு பாடல், நாட்டிய முறையை நெறிப்படுத்திய தஞ்சை நால்வரால் எழுதப்பட்டது. இதுபோன்ற பல சலாம் பாடல்கள் அந்தக் காலத்தில் இருந்திருக்கின்றன. இந்தச் சலாமு பாடலை அடியொட்டிதான் பயிற்சிப் பட்டறை நடந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x