Published : 02 Oct 2016 02:11 PM
Last Updated : 02 Oct 2016 02:11 PM
எதற்கும் கலங்காத பெண் களைக்கூடலேசாக அசைத்துப் பார்த்துவிடுகிறது மார்பகப் புற்றுநோய். ஆனால் உடலாலும் மனதாலும் தன்னை முடக்கிப்போட முயன்ற புற்றுநோயைத் தளராத உறுதியோடு போராடி வென்றிருக்கிறார் சித்ரா. புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு அவ்வளவாக இல்லாத காலத்திலேயே மரணம்வரை சென்று மீண்டிருக்கும் சித்ரா, வாழத் துடிக்கும் ஒவ்வொரு பெண்ணுக்கும் நல்ல முன்னுதாரணம்.
அதிர்ச்சி தந்த முடிவு
திருச்சி கருமண்டபத்தைச் சேர்ந்த சித்ராவுக்கு அப்போது 36 வயது. மகள் தன் ஐந்து மாதக் குழந்தையுடன் வீட்டில் இருக்க, பிளஸ் டூ தேர்வெழுதிய மகன் ரிசல்ட்டுக்காகக் காத்திருந்தார். சித்ராவுக்கு மார்பகத்தில் நீண்ட நாட்கள் வலியிருக்க, பொறுக்க முடியாமல் மருத்துவரிடம் சென்று மார்பகப் பரிசோதனை செய்துகொண்டார்.
“என் மகனுடைய பிளஸ் டூ ரிசல்ட்டும் என் மெடிக்கல் ரிப்போர்ட்டும் ஒரே நாளில்தான் வந்தன. மகன் பாஸ் ஆகியிருக்க, நான் ஃபெயில் ஆனேன்” என்று தனக்கு மார்பகப் புற்றுநோய் உறுதிசெய்யப்பட்டதைச் சொன்னார். அன்று தொடங்கிய ஓட்டம்தான், கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகள் புற்றுநோயுடன் இடைவிடாத போராட்டம் நடந்தது.
“நான் அவ்வளவா படிக்கலை. கோழிக்கறிக் கடை நடத்தி, அதில் வந்த வருமானத்துலதான் என் மூணு குழந்தைகளையும் வளர்த்தேன். என் கணவர் காய்கறிக் கடை நடத்தினார். எனக்குப் புற்றுநோய்னு சொன்னப்போ வீட்ல யாரும் அதை நம்பலை” என்று சொன்னவர், சிகிச்சை பெறுவதைத் தள்ளிப்போட்டிருக்கிறார். ஆனால் தங்கை வீட்டுக்குச் சென்றபோது வந்த காய்ச்சல், அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றது.
“புற்றுநோய் சிகிச்சைக்கு நிறைய செலவாகுமே என்ற கவலையும், எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது என்ற ஆற்றாமையும் மனதை அழுத்தின. இதிலிருந்து எப்படி மீண்டுவரப் போகிறோம் என நினைத்து பல நாட்கள் தூக்கமில்லாமல் தவித்தேன். மார்பில் நாளுக்கு நாள் வலி அதிகரிக்க, அந்த வலியைப் பொறுத்துக் கொண்டு தினமும் கோழிக்கறிக் கடையை நடத்தினேன். இதற்கிடையே சிகிச்சையும் தொடங்கியது” என்று சொன்னார் சித்ரா.
புற்றுநோய்க்கான சிகிச்சை ஆரம்பித்த பிறகு சித்ராவால் கடைக்குப் போக முடியவில்லை. இவரது வருமானம் தடைபட்டுப் போக, மகன் வேலைக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.
ஆற்றுப்படுத்திய அம்மா
“இப்போ இருக்கற மாதிரி இருபது வருஷத்துக்கு முன்னால மருத்துவ வசதியில்லை. புற்றுநோயைப் பத்தி எங்களுக்கும் ஒண்ணும் தெரியாது. சிகிச்சைக்குப் பணம் புரட்ட ரொம்ப சிரமப்பட்டோம். பணக் கவலை ஒரு பக்கம்னா, உடல் வலி இன்னொரு பக்கம் என்னைப் படுத்தியது. தொடர்ச்சியான வலி ஆளையே கொல்லும். இதிலிருந்து எப்போது மீண்டு வருவோம்னு தோணும். ஒவ்வொரு இரவும் கண்ணீரிலும் பயத்திலும் கரையும். உடைஞ்சிபோயிருந்த என்னைத் தேற்றியவர் என் அம்மா சிட்டம்மாள். அவங்கதான் எனக்கு எல்லா விதத்திலயும் பக்க பலமா இருந்தாங்க. வலது பக்க மார்பை எடுத்துடணும்னு டாக்டருங்க சொல்லிட்டாங்க” என்று சொல்லும்போது அனைத்தையும் கடந்துவந்த நிம்மதி தெரிகிறது சித்ராவின் முகத்தில்.
“கீமோதெரபி செய்யும்போதெல்லாம், யாரோ என்னைப் படுக்கையிலிருந்து தூக்குவது மாதிரி இருக்கும். என் அம்மாதான் கூடவே இருந்தாங்க. புடவை கட்ட முடியாது, கையை அசைக்க முடியாது. ஆபரேஷன் பண்ண வேதனைக்கு இடையில இன்னொரு அதிர்ச்சியும் காத்திருந்தது. தொடர்ந்து சிகிச்சை எடுத்துக்கிட்டதால கர்ப்பப்பையையும் எடுத்துடணும்னு சொன்னாங்க. என்னடா வாழ்க்கை இதுன்னு இடிஞ்சு போய் உட்கார்ந்துட்டேன். ஆனா நான் உட்கார்ந்தா என் குடும்பமும் உட்கார்ந்துடுமே. அவங்களுக்காகவாவது நான் நல்லபடியா பொழைச்சு வரணும்னு நிமிர்ந்து நின்னேன். எவ்வளவோ பார்த்துட்டோம், இதையும் தாங்குவோம்னு உறுதியா இருந்தேன். அதுதான் இப்படி உங்க முன்னால என்னைப் பேசவச்சிக்கிட்டு இருக்கு” என்று தெளிவோடு சொல்கிறார் சித்ரா.
விழிப்புணர்வுப் பாடம்
சிகிச்சையோடு சித்ராவின் மன உறுதியும் அவரை நோயின் பிடியிலிருந்து மீட்டன. அன்றிலிருந்து இன்றுவரை சரியான நேரத்தில் சாப்பிடுவது, டாக்டர்கள் சொல்லும் நாளில், சொல்லும் நேரத்தில் பரிசோதனைக்குச் செல்வது என அனைத்திலும் ஒழுங்கைக் கடைப்பிடிக்கிறார் சித்ரா. புற்றுநோயிலிருந்து மீண்டு வந்தவர், புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்து ஊக்கமளித்துவருகிறார். இவருடைய கதையைக் கேட்கும் பலரும், தங்களாலும் புற்றுநோயை வெல்ல முடியும் என்று நம்பிக்கைகொள்கின்றனர்.
“பெண்கள் தங்கள் உடல் நலத்தின் மீது அக்கறை செலுத்துவதில்லை. திருமணமாகி, குழந்தை பிறந்ததுமே தங்கள் ஆரோக்கியத்தைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. சுவர் இருந்தால்தானே சித்திரம் வரைய முடியும்? புற்றுநோய் இருப்பது தெரிந்தும் பல பெண்கள், தொடர் சிகிச்சை எடுக்காமல் போய்விடுகின்றனர். புற்றுநோய் வந்துவிட்டால் வாழ்க்கையே முடிந்துவிட்டதாகக் கவலைப்படத் தேவையில்லை. குடும்பத்தினருடன் மனம்விட்டுப் பேசி, தைரியமாக எதிர்கொள்ளுங்கள். 19 ஆண்டுகளாக நான் போராடி வாழவில்லையா?” என்று கேட்கிறார் சித்ரா.
படம்: ஜி.ஞானவேல் முருகன்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT