Published : 30 Jun 2014 10:40 AM
Last Updated : 30 Jun 2014 10:40 AM
“துணி வெட்டும் கத்தரிக்கோலும், முடி வெட்டும் கத்தரிக்கோலும் எனக்கு ஒண்ணுதான்” என்கிறார் ஆண்களுக்கான பிரத்யேக முடிதிருத்தும் கடையை நடத்திவரும் பெட்ரீஷியா மேரி.
திருச்சி, சிந்தாமணியில் நியு வெம்புலி சலூன் என்ற பெயரில் செயல்படும் கடைக்குள் நுழைகிற வர்களுக்கு ஆச்சரியம் நிச்சயம். காரணம் கையில் ஷேவிங் கத்தியுடன் வரவேற்கிறார் பெட்ரீஷியா மேரி. சலூன் கடை என்பது ஆண்கள் மட்டுமே வேலை செய்ய உகந்தது என்ற நினைப்பை மாற்றுகிறது அவருடைய தொழில் நேர்த்தி.
வாடிக்கையாளர் ஒருவருக்கு ஷேவிங் செய்துகொண்டிருக்கிறார் பெட்ரீஷியா. சலூன் மூலையில் தையல் மிஷின் ஒன்று இருக்கிறது. ஐந்து நிமிடத்தில் ஷேவிங்கை முடித்த கையோடு, தையல் மிஷினில் அமர்ந்து துணி தைத்தபடியே பேசுகிறார்.
“என் மாமனார் ஆரம்பித்த இந்தக் கடையில் என் கணவர் ரூபன் சண்முகநாதனும் அவருடைய சகோதரரும் வேலை செய்தனர். எனக்குத் திருமணமாகி 14 வருஷம் ஆகுது. திருமணத்துக்கு முன்பே நான் டெய்லரிங்ல டிப்ளமோ முடிச்சிருந்தேன். கணவர் ஆதரவோடு வீட்டில் ஒரு தையல் மிஷினை வாங்கிப்போட்டு, அக்கம் பக்கத்தில் இருந்தவர்களுக்கு தைத்துக் கொடுத்தேன்.
மாமனார் இறந்ததும் கூட்டுக் குடும்பமாக இருந்த எங்களுக்கு வருமானம் போதவில்லை. ‘சலூனில் ஒரு ஓரமாக தையல் மிஷினை போட்டு நீ தைத்தால் கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் மூலம் தையல் தொழிலில் இன்னும் சம்பாதிக்கலாம்’ என என் கணவர் சொன்னார். நானும் அவர் சொன்னதைச் செயல்படுத்தினேன். இந்தக் கடையில் தைக்க ஆரம்பித்து ஏழு வருஷமாகுது” என்று சொல்லி இடைவெளி விட்டார் பெட்ரீஷியா. அடுத்து அவர் பகிர்ந்துகொண்ட தகவலுக்குத் தேவையான ஆசுவாசத்தை அந்த இடைவெளி ஏற்படுத்தித் தந்தது.
“ஓரளவுக்கு வருமானமும், மகிழ்ச்சியுமா நல்லா போய்க்கிட்டிருந்தது எங்கள் வாழ்க்கை. என் கணவருக்கு ஏற்பட்ட ஒரு விபத்து, எங்கள் வாழ்க்கையை மாற்றிப்போட்டு விட்டது. ஐந்து மாதத்துக்கு முன் சாலையைக் கடக்கும்போது விபத்தில் சிக்கிய என் கணவரோட கை சிதைந்துவிட்டது. என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து நின்றோம். மருத்துவ செலவுக்கும், குடும்ப செலவுகும் மிகவும் கஷ்டப்பட்டேன்.
கணவர் தொழில் செய்ய முடியாத நிலையில், நான் ஒரு உறுதியான முடிவுக்கு வந்தேன். திருமணமானது முதல் என் கணவருக்கு நான்தான் முடி வெட்டி, ஷேவிங் செய்வேன். கடையில் தையில் மிஷின் போட்ட பிறகு கடைக்கு வருகிற குழந்தைகளுக்கு அவ்வப்போது முடி வெட்டியிருக்கிறேன். துணி வெட்டும் கத்தரிக்கோலும், ஷேவிங் செய்யும் கத்தியும் ஒண்ணுதானே. அதனால் நானே வாடிக்கையாளர்களுக்கு கட்டிங், ஷேவிங், டை அடித்தல் போன்ற வேலைகளை செய்யத் தொடங்கினேன்.
ஆரம்பத்தில் கொஞ்சம் கூச்சமாக இருந்தது. ஏழு வருடமாகக் கடையில் பார்த்துப் பழகிய வாடிக்கையாளர்கள் என்பதால் பெரிதாக சிரமமில்லை. ஒரு ஜாக்கெட் தைக்க ஒரு மணி நேரம் ஆகும். அதற்குக் கூலியாக 50 ரூபாய் கிடைக்கும். ஆனால், 20 நிமிடத்தில் இரண்டு பேருக்கு ஷேவிங் செய்து 60 ரூபாய் சம்பாதித்துவிடுவேன். சலூன் வேலையில் வருமானம் அதிகம் கிடைத்தாலும், டெய்லரிங் தொழிலையும் தொடர்ந்து செய்கிறேன்” என்று சொல்லும் பெட்ரீஷியா, தான் செய்யும் வேலை தனக்கு மன நிறைவும் மகிழ்ச்சியும் தருவதாகச் சொல்கிறார்.
“எனக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். என் கணவரின் சகோதரர் குடும்பத்தில் பிரச்சினையால் அவருடைய மூன்று பிள்ளைகளையும் நான்தான் பார்த்துக் கொள்கிறேன். கணவருடன் சேர்த்து இப்போ ஆறு பிள்ளைகளையும் இந்த தொழில்தான் காப்பாற்றுகிறது” என்கிறார். பிசிறில்லாமல் வெட்டுகிற கத்தரிக்கோலைப் போலவே தயக்கமின்றி உறுதியுடன் பேசுகிறார் பெட்ரீஷியா. அந்த உறுதி அவரை வெற்றியின் பாதையில் அழைத்துச் செல்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT