Last Updated : 22 Jun, 2014 08:00 AM

 

Published : 22 Jun 2014 08:00 AM
Last Updated : 22 Jun 2014 08:00 AM

காற்றில் கலந்த இசை

கர்நாடக இசை மற்றும் பின்னணி இசையில் கடந்த நூற்றாண்டில் புகழ்பெற்று விளங்கிய பாடகி ஜெயலஷ்மி, இசைத்துறையில் நிரப்ப இயலா வெற்றிடத்தை விட்டுச் சென்றிருக்கிறார். இசை ரசிகர்களைத் தன் குரலால் மகிழ்வித்த இவர், தன் 82-வது வயதில் மறைந்தார். ராதா மற்றும் ஜெயலஷ்மி என்ற இரட்டையராகவே பாடி வந்த இவர்களின் குரலில் விழும் பிருகாக்களைக் கேட்பதற்காகவே அந்நாளில் ரசிகர்கள் கூட்டம் அலை மோதியது.

ராதாவும் ஜெயலஷ்மியும் உடன்பிறவாச் சகோதரிகள். இவர்கள் இருவரும் இணைந்து மேடைக் கச்சேரி தொடங்கியபோது அவர்கள் இருவருக்கும் 14 வயது. இருவரும் சென்னையிலேயே பிறந்து வளர்ந்ததால், ஜி.என்.பி.யின் பிரதம சிஷ்யர் டி.ஆர். பாலசுப்பிரமணியத்திடம் இசை கற்றனர். மேலும் அவ்வப்போது ஜி.என்.பி.யிடமும் பாடிக் காட்டி இசையின் நுணுக்கங்களைக் கற்று மெருகேற்றிக்கொண்டனர்.

ராதா, ஜெயலஷ்மியின் புதுவிதமான இசை வெளிப்பாட்டிற்காகவே பல நிறுவனங்கள், இவர்களது இசைத்தட்டுகளைத் தொடர்ந்து வெளியிட்டன. அகில இந்திய வானொலியின் மூலம் பாடி இரட்டையர்களாகவே புகழடைந்தனர். `திருச்செந்தூரில் போர் புரிந்து’ என்ற புகழ்பெற்ற சினிமா பாடலை இரட்டையராகவே பாடினர்.

இதில் பின்னணிப் பாடகியாகவும் புகழ் பெற்ற ஜெயலஷ்மி, இசையமைப்பாளர்கள் எஸ்.வி. வெங்கடராமன், கே.வி. மகாதேவன், எஸ்.எம். சுப்பையா நாயுடு மற்றும் குன்னக்குடி வைத்தியநாதன் ஆகியோரின் இசையிலும் பாடியுள்ளார்.

`மனமே முருகனின் மயில் வாகனம்` என்ற பாடலின் மூலம் ஜெயலஷ்மியின் குரல் இன்றைய ரசிகர்களையும் கவர்ந்துவருகிறது என்பது காலத்தால் அழிக்க முடியாத அவரின் புகழுக்குச் சான்று!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x