Published : 01 May 2016 02:36 PM
Last Updated : 01 May 2016 02:36 PM
‘தொலைந்த மகள்கள்’ என சமீபத்தில் கனடா மருத்துவக் கழகப் பத்திரிகை ஒரு ஆய்வறிக்கை வெளியிட்டது. 1991-லிருந்து 2012 வரையில் கனடாவில் பிறந்த 60 லட்சம் குழந்தைகளில் 4,400 பெண் குழந்தைகள் காணவில்லை என்கிறது அந்த அறிக்கை. இதையடுத்து, கனடாவில் கொல்லப்பட்ட பெண் சிசுக்களில் பெரும்பாலானவை கனடாவுக்குப் புலம் பெயர்ந்த இந்தியர்களின் பச்சிளம் பிள்ளைகள் என்கிறது ‘தி ஸ்டார்’ நாளிதழில் வெளியான ஒரு கட்டுரை. கனடியர்களின் பாலின விகிதம் 107 ஆண்களுக்கு 100 பெண்கள் என இருக்கும்போது அங்கு வாழும் இந்தியர்களின் விகிதமோ 138 ஆண்களுக்கு 100 பெண்களாக இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இதேபோல, இந்திய மற்றும் சீன சமூகத்தினர் ஆண் குழந்தைகள் மட்டும்தான் தேவை என நினைப்பதால், ‘1400 மகள்களைக் காணவில்லை’ என கடந்த ஆகஸ்ட் மாதம் அறிக்கை வெளியிட்டது ஆஸ்திரேலியா. தற்போது ஆஸ்திரேலியர்களின் பாலின விகிதம் 105.7 ஆண்களுக்கு 100 பெண்களாக இருக்கிறது. ஆனால் ஆஸ்திரேலியாவில் வாழும் இந்தியர்களின் பாலின விகிதமோ 108.2 ஆண்களுக்கு 100 பெண்களாக இருக்கிறது. இந்தியாவிலோ 115 ஆண்களுக்கு 100 பெண்கள் மட்டுமே இருக்கிறார்கள். சீனாவிலோ 119 ஆண்களுக்கு 100 பெண்கள் என்ற விகிதம் உள்ளது.
பெற்றெடுக்கலாமா? வேண்டாமா?
இப்படிக் கருவிலே சிசுக்கள் அழிக்கப்படுவதைக் கருக்கலைப்பு என்பதா அல்லது கருக்கொலை என்பதா? கருக்கலைப்பு நெடுங்காலமாக உலகம் முழுக்க விவாதிக்கப்பட்டுவருகிறது. பெண் தன்னுடைய கருப்பைக்கான உரிமையைக் கோரும் இடத்தில் கருக்கலைப்பு வேறொரு கோணம் பெறுகிறது. மனநலம் பாதிக்கப்பட்ட பெண் கருவுறும் சூழலில், தாயும் சேயும் உடல்ரீதியாகவோ மனநலம் சார்ந்தோ பாதிப்புக்கு உள்ளாகும் நிலையில், பாலியல் வன்முறையினால் ஒரு பெண் கருவுறும் நிலையில், திருமணம் ஆகாத 18 வயதுக்கு உட்பட்ட பெண் கருவுறும் சந்தர்ப்பத்தில் இந்தியச் சட்டம் கருக்கலைப்பை அனுமதிக்கிறது. கருவைத் தாங்கி நிற்கும் பெண் 20 வாரங்களைத் தாண்டாத நிலையில் நியாயமான காரணங்களுக்காக கருவைக் கலைக்கலாம் என 1971-லேயே இந்திய அரசு சட்டம் இயற்றியது.
ஆக, தான் சுமக்கும் கருவைப் பெற்றெடுக்கலாமா வேண்டாமா என்பதைத் தீர்மானிக்கும் உரிமை ஒரு பெண்ணுக்கு முழுவதுமாக உள்ளது. அதிலும் திருமணமான பெண் எனும்போது கணவருடைய ஒப்புதல்கூடத் தேவையில்லை. இது முழுக்க முழுக்க ஒரு பெண்ணுடைய உடலும், மனமும் சார்ந்து. ஆனால் நடைமுறையில் அப்படியா இருக்கிறது? மேல் சொன்ன காரணங்களுக்காக ஒரு இந்தியப் பெண் கருக்கலைப்பு செய்துகொள்ள முடிவெடுத்தால் இந்திய மனசாட்சி அவரை உலுக்கி எடுக்கும், சமூகத் தளத்தில் அவர் கூனி குறுகுவார், அவ்வளவு ஏன், மருத்துவர்கள்கூடக் கருக்கலைப்பை அவமானகரமான செயலாகத்தான் நினைக்கிறார்கள். ஆகவேதான் கருக்கலைப்பு செய்ய வேண்டிய இக்கட்டிலிருந்தாலும் ஆண்டுதோறும் 20 ஆயிரம் இந்திய கர்ப்பிணிகள் வலியால் உயிரிழக்கிறார்கள்.
என்றுமே சிக்கல்தான்
இதைப் பேசும்போது, தற்போது அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் டொனால்டு டிரம்ப்பின் பிரச்சாரத்தைப் பற்றிப் பேசாமல் இருக்க முடியாது. தொடர்ந்து சிறுபான்மையினர், புலம் பெயர் தொழிலாளர்கள் உள்ளிட்டவர்களுக்கு எதிராகப் பேசிவரும் டிரம்ப், கருக்கலைப்புக்கு எதிராக அமெரிக்காவில் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்கிறார். இதனால் ஹிலாரி கிளிண்டன் உட்பட சக அரசியல்வாதிகளாலும் பெண்ணுரிமை ஆர்வலர்களாலும் கடும் கண்டனத்துக்கு ஆளாகியிருக்கிறார். இதேபோன்று அயர்லாந்தும் கருக்கலைப்பை மறுப்பதால் 2012-ல் இந்தியாவைச் சேர்ந்த சவிதா அநியாயமாக உயிரிழந்த சம்பவத்தை மறக்க முடியாது. போன வருடம் கருக்கலைப்பு தடைச் சட்டத்தால் ஸ்பெயினும் சர்ச்சையில் சிக்கியது. இப்படி வளர்ந்த நாடுகளில்கூடக் கருக்கலைப்பு என்பது சிக்கலாகவே இருந்துவருகிறது.
இரட்டை வன்முறை
ஆனால் தற்போது கனடா, ஆஸ்திரேலியாவின் ஆய்வறிக்கை நமக்கு வேறு சிக்கலைச் சுட்டிக்காட்டுகிறது. ஒரு புறம் கருக்கலைப்பைக் கடுமையாக உலகின் பெரும்பான்மைச் சமூகம் எதிர்க்கிறது. ஆனால் மறுபுறம் கருக்கொலை காலங்காலமாக நடந்தேறுகிறது. அதிலும் கனடா, ஆஸ்திரேலியா போன்ற வளர்ந்த நாடுகளில் குடியேறினாலும் இந்தியர்கள், சீனர்கள் இன்னும் பெண் பிள்ளைகளை ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை.
கருக்கலைப்பை மறுப்பது, கருக்கொலை செய்வது என இரண்டுமே பெண்ணுக்கு எதிரான வன்முறைதான். ஒன்றில் பெண் தன் உடல் மீது உரிமை கோர முடியாது என்கிறார்கள். மற்றொன் றில், பெண்ணுக்கான வாழ்வுரிமையே குழி தோண்டிப் புதைக்கப்படுகிறது.
ஒட்டுமொத்தமாக உலக அளவில் தற்போது 107 ஆண்களுக்கு 100 பெண்கள் மட்டுமே இருக்கிறார்கள். ஆண்டுதோறும் உலக அளவில் 47 ஆயிரம் கர்ப்பிணிப் பெண்கள் பாதுகாப்பற்ற கருக்கலைப்பால் உயிரிழக்கிறார்கள். ஆக, உலக அளவில் ஆண்களின் விகிதம் அதிகமாக இருப்பதற்குக் காரணம் கருக்கொலை யும், கருக்கலைப்பும் என்பது அப்பட்டமாகத் தெரிகிறது. ஆண்கள் மட்டுமே உயிர் வாழத் தகுதியானவர்கள் என இன்றும் சொல்லும் உலகில் பாலினச் சமத்துவத்துக்கான பேச்சுவார்த்தையை எங்கிருந்து தொடங்குவது?
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT