Published : 15 Jun 2014 01:00 AM
Last Updated : 15 Jun 2014 01:00 AM
சென்னை, நுங்கம்பாக்கம், ஜெயலஷ்மிபுரத்தில் வசிக்கும் கல்பனா வீட்டிற்குச் செல்ல வழி கேட்டால், “கிராஃப்ட் டீச்சர் வீட்டுக்கா?” என்று திருப்பிக் கேட்கிறார்கள். அந்தப் பகுதியின் அறியப்பட்ட கிராஃப்ட் டீச்சர் கல்பனாவின் வீடு முழுக்க அவர் உருவாக்கிய கலைப்பொருட்களே காட்சி தருகின்றன. தன் அம்மா ராஜேஸ்வரியிடம் இருந்து கற்றுக் கொண்ட கைவினைக் கலைகளுக்குத் தன் கற்பனையையும் சேர்த்து புது வடிவம் தருகிறார் கல்பனா.
தையல், எம்ப்ராய்டரி, ப்ளவுஸ் வடிவமைப்பு, ஃபேஷன் நகைகள், ஓவியம் வரைதல், தேவையற்ற பொருட்களைக் கொண்டு பயனுள்ள பொருட்கள் செய்வது போன்றவற்றைப் பலருக்கு கற்றுக்கொடுக்கிறார்.
“நான் ஒரு முறை டிசைனர் நகைகள் வாங்க ஃபேன்ஸி ஸ்டோருக்குச் சென்றேன். அவற்றின் விலையைக் கேட்டதும் மலைத்துவிட்டேன். இதை ஏன் நாமே செய்யக் கற்றுக்கொள்ளக் கூடாது என்று தோன்றியது. ஏற்கனவே கைவினைக் கலைகள் மீது ஆர்வம் இருந்த எனக்கு, தொலைக்காட்சியும் பத்திரிகைகளும் கைகொடுத்தன. என் மகனின் உதவியோடு இன்டர்நெட்டில் பார்த்தும் நிறைய கற்றுக்கொள்கிறேன்” என்று சொல்லும் கல்பனாவிடம் ஏழு வயது முதல் எழுபது வயது வரையுள்ளவர்கள் கைவினைக் கலைகளைக் கற்றுக் கொள்கிறார்கள். “ஊசி நூல் கோர்க்கத் தெரியாத குழந்தைகளும் பள்ளி விடுமுறையின் போது ஆர்வத்துடன் வந்து கற்றுக்கொள்கின்றனர். பள்ளி தொடங்கியதும் குழந்தைகளை அனுப்பிவிட்டு அம்மாக்கள் வருகின்றனர்” என்கிறார் கல்பனா.
இந்த கைவினைக் கலை, வருமானம் பெற்றுத் தருவதுடன் பலரது வாழ்விலும் ஒளியேற்றியிருப்பதைப் பெருமிதத்துடன் குறிப்பிடுகிறார்.
“வேலூர் மாவட்டத்தில் இருந்து குடும்ப வறுமை காரணமாக கைவினைப் பொருட்கள் செய்ய கற்றுக்கொள்ள ராஜலஷ்மி என்பவர் வந்தார். அவருக்கு ஒரு நாளில் என்னென்ன கற்றுத் தரமுடியுமோ அவற்றைக் கற்றுக் கொடுத்து அனுப்பினேன். எம்ப்ராய்டரி, ஃபேஷன் நகைகள் செய்தல் ஆகியவற்றை அவரும் ஆர்வமாகக் கற்றுக்கொண்டார். இன்று அவரது ஊரில் இருக்கும் பல கடைகளுக்கு அவர்தான் கைவினைப் பொருட்கள் செய்து கொடுக்கிறார். இது போன்ற சம்பவங்கள்தான் எனக்கு மகிழ்ச்சியும் பெருமிதமும் தருகின்றன” என்று சொல்லும் கல்பனா,
“கைவினைப் பொருட்கள் செய்வது பெண்களுக்கு மட்டும் சொந்தமல்ல. ஆர்வம் இருந்தால் ஆண்களும் இதில் சிறந்து விளங்கலாம். படைப்பாற்றல்தான் முக்கியமே தவிர கலைக்கு ஆண், பெண் வேறுபாடு இல்லை” என்கிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT