Last Updated : 29 May, 2016 01:42 PM

 

Published : 29 May 2016 01:42 PM
Last Updated : 29 May 2016 01:42 PM

வானவில் பெண்கள்: திருப்பணியும் என் சாதனை!

பல்லாயிரம் கோயில்களைக் கொண்டது தமிழகம். இதில் பல அரசர்கள் புதுக் கோயில்களைக் கட்டியும், ஏற்கெனவே இருந்த கோயில்களைச் சீரமைத்தும் வந்துள்ளார்கள். அறுபத்து மூன்று நாயன்மார்களில் பெண்பால் நாயன்மார்கள் இருந்தாலும், கும்பாபிஷேகங்களைப் பெண்கள் ஏற்று நடத்தியதாக வரலாற்றில் எங்கும் காணப்படவில்லை என்றே சொல்லலாம்.

இந்து அறநிலையத் துறையின் கீழ் வரும், கோயில் நிர்வாகத்திலும் அறங்காவலராகப் பெண்கள் 2002வரை இருந்ததில்லை. அப்போதும் முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா, முதல் முறையாகப் பெண்களும் கோயில் நிர்வாகத்தில் பங்குகொள்ளலாம் என்று கூறினார். இதனையொட்டி பெண்களையும் செயல் அலுவலராக நியமிக்கலாம் என்று அரசாணை மூலம் உத்தரவிட்டுக் கோயிலில் பெண் நிர்வாக அதிகாரிகளை நியமித்தார். அதில் ஒருவரான த. காவேரி, சென்னை அருள்மிகு கற்பகாம்பாள் உடனுறை கபாலீஸ்வரர் கோயில் இணை ஆணையர் மற்றும் செயல் அலுவலராகப் பணியாற்றுகிறார்.

செயல் அலுவலர் கடமைகளில் முக்கியமானது திருவிழாவின்போது, சுவாமி நகைகளை எடுத்துத் தருதல் உள்ளிட்ட பல வேலைகளில் இடைவெளி விடாமல் கலந்துகொள்ள வேண்டும். பெண்களின் அந்த மூன்று நாட்கள் இந்தத் திருவிழாவின்போது இடையில் வந்துவிட்டால், இந்தப் பணிகளில் இடையூறு ஏற்படும் என்பதற்காகவே இப்பதவியில் பெண்கள் நியமிக்கப்படாமல் இருந்தனர் எனலாம். சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயிலில் சம்ப்ரோக்ஷணம் செய்த வகையில் முதல் பெண் இணை ஆணையர் என்ற பெருமையைப் பெற்றிருக்கிறார் காவேரி. அண்மையில் நிகழ்ந்த கபாலீஸ்வரர் திருக்கோயில் கும்பாபிஷேகம் உட்பட ஐந்து கும்பாபிஷேகங்கள் இவரது தலைமையில் நிகழ்ந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. அவருடன் பேசியதிலிருந்து:

கோடிக்கணக்கான ரூபாய் செலவில் செய்யப்பட்ட இந்தக் கும்பாபிஷேகத்தை எப்படி நிர்வகித்தீர்கள்?

குடும்பம் போலதான் வரவு செலவை நிர்வகிக்க வேண்டும். இந்து அறநிலையத் துறையில் உள்ள சட்டத்தில் சில விதிமுறைகள் இருக்கின்றன. திருக்கோயில் நிதியை எப்படிச் செலவிட வேண்டும் என்ற வழிகாட்டுதல்கள் உண்டு. வரம்புகளும் உண்டு. ரூபாய் ஒரு லட்சம், ஐந்து லட்சம், பத்து லட்சம்வரை என அனுமதி வழங்க பல நிலை அதிகாரிகள் உண்டு. அரசு அனுமதி என்றால் ஒரு கோடிக்கு மேல் என்ற வரம்புகள் உண்டு.

அறநிலையத் துறை ஆணையர் வீர சண்முகமணி இ.ஆ.ப, இந்த கும்பாபிஷேகத்தின்போது மூன்று நாட்கள் கோயிலிலேயே இருந்து திருப்பணி வேலைகளை முடுக்கிவிட்டு கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெறச் செய்தார். திருப்பணிக் கூடுதல் ஆணையர் கவிதா, திருமகள் ஆகியோர் திட்டமிட்டுக் கொடுத்தனர்.

கோயில்களின் நிதி ஆதாரங்களின் நிலை என்ன? அவற்றை எப்படி நிர்வகிப்பீர்கள்?

இந்து அறநிலையத் துறைக்கும் மற்ற துறைகள் போல பட்ஜெட் உண்டு. நிதி ஆண்டின் ஒவ்வொரு மாதமும் சேமிப்பு செய்ய வேண்டும். பூஜைக் கட்டணங்கள், நிவேதனம், நித்தியப்படி செலவுகள், உற்சவச் செலவுகள், ஊழியர்கள் சம்பளம் உட்பட திருக்கோயில் செலவுகள் கணக்கிடப்படும். அநாவசியச் செலவுகள் ஏற்படாமல் கவனமாக இருக்க வேண்டும். அது மட்டுமல்லாமல் உபயதாரர்களை ஊக்குவிக்கும் வகையில், நேரடியாகச் செலவுகளைச் செய்ய வைத்து, திருக்கோயிலின் நிதியை மிச்சப்படுத்தி சேமிக்க வேண்டும். அப்படிச் சேமித்துக் கோயில் நிதி ஆதாரத்தைப் பெருக்கினால் தான் பிற்காலத்துக்கு உதவும்.

அந்தக் காலத்தில் கோயில்களுக்கு மன்னர்கள் மானியமாக வழங்கிய நிதி ஆதாரங்கள் இருக்குமே?

மானியமாக வழங்கப்பட்ட நிலங்களை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்டு, புதிய வாடகைதாரர்களிடமிருந்து வாடகைத் தொகையைச் சரியாகக் கணக்கிட்டு வசூலித்து, சேமிப்பாக மாற்றியிருக்கிறோம். கோயில் சொத்துக்களைப் பராமரிப்பதுதான், கோயில் நிர்வாக அதிகாரிகளின் முக்கியக் கடமை. இதனால்தான் உதவி ஆணையர் மற்றும் இணை ஆணையர் நிலையில் சட்டம் பயின்றிருக்க வேண்டும் என்ற விதி உள்ளது. அதன்படி நான் பயின்ற சட்டப் படிப்பு எனது பணிக்காலம் முழுவதும் உறுதுணையாக இருக்கும் என்று நம்புகிறேன்.

நீங்கள் பிறந்த ஊர்?

இளையான்குடி மாற நாயனார் பிறந்த அதே இளையான்குடி. அதனால்தான் இங்கு ஈசன் அடியில் எனக்குப் பணிபுரியும் வாய்ப்பு கிடைத்துள்ளதோ என்னவோ? எனக்குக் கரும்பு தின்னக் கூலி தருகிறார் ஈசன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x