Last Updated : 29 May, 2016 01:27 PM

 

Published : 29 May 2016 01:27 PM
Last Updated : 29 May 2016 01:27 PM

எங்க ஊரு வாசம்: அறிமுகமற்றவர்களின் அளவிலா அன்பு!

பாட்டுப் பாடிக்கொண்டே நடப்பதற்குள் பலபலவென்று பொழுது விடிந்துவிடும். இத்தனை நேரமும் பால் பொழிந்த நிலவு, வாட்டத்துடன் வெளிறிப்போய் சாய்வான மேற்கு திசையில் ஒதுங்கிக்கொள்ள, கிழக்குத் திக்கில் நெருப்பில் குளித்த சூரியன் தங்கத் தகடாக மின்னியவாறு வானத்தையே தன் வசப்படுத்தியபடி வெளிச்சக் காடாக்கி மெல்ல மேலேறிவரும்.

அந்தப் புழுதி வாங்கிய சாலையில் ஆடு, மாடுகளைப் பத்திக்கொண்டும் தலையில் கூனைச் சுமையோடும் ஆண்கள் நடக்க, பென்கள் தலையில் கஞ்சிக் கலயத்தோடும் இடுப்பில் பிள்ளைச் சுமையோடும் நடபார்கள். கோடைக் கால வெள்ளாமையான பருத்திக் காட்டுக்குக் களைச் சொரண்டியோடு நடப்பவர்கள், புது முகம் கொண்ட இவர்களைப் பார்த்து சற்று திகைத்தவாறு சற்று தயங்கி, தயங்கி நடைபோடுவார்கள்.

கமழும் பக்தி மணம்

அதில் ஒருத்தி, “ஏத்தா, இப்படி கேக்காளேன்னு கோவிச்சிக்கிடாதீக. ஏன்னா உங்க முகமெல்லாம் அறியாத முகமாயிருக்கு. அதேன் நீங்க யாரு, என்னன்னு தெரிஞ்சிக்கிடலாமா?” என்று கேட்க, தங்கமணி முந்திக் கொண்டாள்.

“நாங்கள்லாம் சங்கரன்கோயிலுக்கு நேத்திக் கடன் செலுத்தப் போறவக” என்று அவள் சொல்லி முடிக்கும் முன்பே கேள்வி கேட்டவள் களைக்குப் போகிறவர்களைப் பார்த்து சத்தம் கொடுப்பாள்.

“ஏத்தா, எல்லாரும் வாங்க. சங்கரன்கோயிலுக்குச் சாமி கும்புடப் போறவகள இடைவழியில பாத்துக்கிட்டேன். அவுக கையால இம்புட்டு துன்னூறு வாங்கிப் பூசிக்கிடுவோம். அந்தச் சங்கரேஸ்வரரு காட்டுல கெடக்க பூச்சிகளையெல்லாம் நம்ம கண்ணுக்குத் தெரியாம ஒதுக்கி வைப்பாரு. காலடியில ஊர்ந்து போற அம்புட்டு சீவராசிக்கும் அவரு அதிபதி இல்ல?’ என்று ஒரு சத்தம் கொடுக்கவும் அத்தனை பேரும் வந்து சுரண்டிக்கனையை அந்தப் பக்கம் போட்டுவிட்டு இவர்கள் காலில் வந்து விழுவார்கள்.

தங்கமணியும் அவளைச் சேர்ந்தவர்களும் பதறி விலகியவாறு, “ஏத்தா இதென்னா கொடுமை எங்க கால்ல வுளுந்துக்கிட்டு. நாங்களும் உங்க கணக்கா ஊத்த உடம்பு கொண்டு உப்பு வச்ச பாண்டத்தோடுவில்ல அலயிறோம்? நீங்க பாட்டுக்கு எங்க கால்ல வுளுந்துட்டீங்களே. அந்தப் பாவத்தை நாங்க எங்க கொண்டு கழுவுறது?” என்று பதற்றமும் பக்தியுமாகக் கேட்பார்கள்.

அதற்கு அவர்களும், “கோயிலுக்குப் போறவக அப்படி சொல்லாதீக. எங்களுக்கு எல்லாரும் துன்னூறு பூசிவிடுங்க. எல்லாரும் வாங்கடி. நமக்கு இந்தப் புண்ணியமாவது கிடைக்கட்டும்” என்று சொல்லியவாறே அவர்களின் காலடியில் விழுந்தார்கள். எல்லோருக்கும் வயதில் மூத்தவராயிருந்த முத்தையா தன் மடியில் பத்திரப்படுத்தியிருந்த மஞ்சக் காப்பை எடுத்து ஒவ்வொருவரின் நெற்றியிலும் கை வைத்து ஆசீர்வதித்தார்.

தக்காளியும் மிளகாய்ப் பழமும்

அந்த ஆட்களில் ஒருத்தி, “எய்யா சாமிகளா இப்படி வண்டிப்பாதை வழியே போனீங்கன்னா சுத்துப்பாதை. ‘பொக்கின்னு’ (சீக்கிரம்) கோயில் போய் சேர மாட்டீக. என்கூட வாங்க. நானு குறுக்குப் பாதையை காட்டுதேன். நானு சொல்லுத வழியில போனீங்கன்னா பொழுது மசங்ககுள்ளயும் கோயிலுக்குப் போயி சேர்ந்துருவீக” என்று சொல்லிவிட்டு அவர்களில் சிறியவளாக இருந்தவளைப் பார்த்து, “தாயீ, நீ போய் விளஞ்ச சீனி செடியில ஒரு பாத்தி வெட்டி, கெழங்க கழுவிப் பெறக்கி மாறு, மட்டையைப் போட்டு தீ மூட்டி சுட்டுவையி.

இவுகளுக்கு ஆளௌக்கு ரெண்டு கெழங்க கொடுத்து அனுப்புவோம். சீனிக்கெழங்க தின்னா சீக்கிரம் பசியாறுமின்னு சொலவட” என்று சொல்லிவிட்டு, “வாங்க. இந்தக் கெணத்து தண்ணி கக்கண்டா இனிக்கும். கனி சொக்கலா தக்காளிப் பழம் பழுத்து கெடக்கு. பச்ச மிளகாயும் சட சடயா புடிச்சிருக்கு. நாலு பழம் புடுங்கி, பச்ச மிளகா, உப்பு போட்டு பெணஞ்சி வவுறு நிறைய சாப்பிட்டு போங்க” என்று அன்பும் பாசமுமாக சொன்னாள்.

இவர்களும் பொழுதைப் பார்ப்பார்கள். பொழுது மேலேறி இருந்தது. வெள்ளனத்தின் எழுந்து நடந்ததால் வயிறும் பசித்தது. சிவப்புக் கூடாகப் பழுத்திருக்கும் தக்காளிப் பழங்களைப் பார்க்கையில் வாயூறியதோடு வயிற்றுப் பசியும் அதிகமானது. கமலைக் குழியையொட்டி கல்லக்கா மரம் பசுந்தோப்பாக விரிந்திருந்தது. அதையொட்டி பூவும் காயுமாகப் பூவரச மரங்கள். மரத்தைச் சுற்றிலும் பட்டாம்பூச்சிகள் விதவிதமாகப் புள்ளி வைத்த சிறகு கொண்டு அங்கும், இங்கும் பறந்தன. பழுத்த மிளகாய்ப் பழங்களை கொத்தி, தின்றுகொண்டிருந்த நாடவந்தான் குருவிகள் இவர்களின் அருகில் வந்து எட்டிப் பார்த்துவிட்டு சிறகடித்துப் பறந்து ஓடின. தீயில் சுட்ட சீனிக் கிழங்கின் மணம் குப்பென்று வீசியது.

கனிந்த தக்காளிப் பழத்தோடு சடக் சடக்கென்று பச்சை மிளகாயை ஒடித்துப் போட்டு உப்பும் சேர்த்துப் பிசைந்து சாப்பிட்டவர்களின் நாக்கில் அமிர்தமாக ருசி பாய, கலயத்தில் இருக்கும் கஞ்சியை மொத்தமாகக் குடித்துவிடலாம்போலத் தோன்றியது.

- கட்டுரையாளர், எழுத்தாளர்.
தொடர்புக்கு: arunskr@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x