Published : 24 Apr 2016 02:16 PM
Last Updated : 24 Apr 2016 02:16 PM
கிடாக்கள் வளரும்போது அவற்றின் கொம்புகள் சாதாரணமாகத்தான் இருக்கும். இந்த ஆட்டுக்காரர்கள்தான் அந்தச் சிறிய கொம்பைப் பல்லால் கடித்து எடுத்துவிடுவார்கள். ரத்தம் கொப்பளித்துக்கொண்டு வரும். அந்த இடத்தில் சுண்ணாம்பை வைத்து அழுத்திவிடுவார்கள். அதன் பின்பு வளரும் கொம்புகள்தான் அந்தக் கிடாக்களின் முகத்துக்கே ஒரு கம்பீரத்தைக் கொடுக்கும்.
மாட்டுப் பொங்கல் அன்று கறி சாப்பிட வேண்டும். அப்போதெல்லாம் ஒரு ஆட்டின் விலை இரண்டு ரூபாய்தான். ஊர் பொதுவில் மூன்று, நான்கு கிடா வெட்டி எல்லோருக்கும் பகிர்ந்தளிப்பார்கள். எப்போதும் வெட்டப்பட்ட ஆடுகளின் தலை ஊருக்குள் துணி வெளுத்துக் கொடுக்கும் தொழிலாளிகளுக்குத்தான். சில இளவட்டங்கள் வேட்டைக்குப் போய் முயல், நரி என்று அடித்துவருவதும் உண்டு. பெரிய குடும்பத்துக்குப் பகிர்ந்து கொடுக்கும் ஊர் கறி பத்தாவிட்டால் கொண்டையிட்ட சேவல்களும், முட்டைக் கோழிகளும் பெரிய வெஞ்சன சட்டிக்குள் மசாலா வாசனையோடு கொதித்து வெந்துகொண்டிருக்கும்.
கறி வாசனை ஊரெங்கும் மணம் பரப்ப, மந்தையில் விளையாடிக்கொண்டிருக்கும் சிறுவர்களுக்கும் சிறுமிகளுக்கும் மந்தையைவிட வீடுதான் ரொம்பப் பிடிக்கும். தினமும் சாப்பிட வா, வா என்று பெற்றவள் பத்து முறை குரல் கொடுத்தாலும் வராத சிறுவர்கள், இன்று நடுப்பொழுது வருமுன்பே ஆளுக்கொடு வட்டில், கும்பாவோடு உட்கார்ந்திருப்பார்கள்.
நேற்று போல் இன்றும் வேலை முடித்த குமரிகள் கரம்பையில் தலைக்குக் குளித்து, மஞ்சளில் முகம் தேய்த்து, புள்ளியிட்ட கண்டாங்கி சேலையின் வடிவான வரிசையிட்ட கொசுவத்தில் வருவார்கள். காதிலும், கழுத்திலும் ஆவாரம் பூக்கள் கோர்வையிட்டுப் பொன்னாக மின்னும். ஆனால் தலையில் கொரண்டி பூக்கள் வெண்மை கொண்ட நுரையாகப் பூத்துக் குலுங்கும்.
இந்தக் கொரண்டிப் பூக்கள், மார்கழி, தை, மாசி ஆகிய மூன்று மாதங்களில் மட்டும் கண்ட கண்ட இடங்களில் எல்லாம் நீண்ட காம்போடு வானத்து நட்சத்திரங்களாகப் பூத்துச் சிரிக்கும். நீண்ட காம்பு இருப்பதால் இந்தப் பூவை யாரும் தொடுக்க மாட்டார்கள். அதோடு அந்தக் காலத்தில் கிராமத்து ஆட்களுக்குப் பூத்தொடுக்கவும் தெரியாது. அதனால் காம்புகளை வைத்து சடையாகப் பிண்ணி அப்படியே தலையில் சூடிக்கொள்வார்கள். இந்தப் பூவின் வாசன் சூடியவர்களை மட்டுமல்லாமல் அவர்களைச் சுற்றியுள்ளவர்களையும் கவர்ந்துகொள்ளும்.
கொரண்டி என்பதற்குப் பிசாசு என்று ஒரு அர்த்தமும் கிராமத்தில் உண்டு. அதனால் இந்தப் பூவைக் கண்டு, ‘ஐயோ.. இந்தப் பூ எனக்கு வேண்டாம்பா. ராத்திரியில நம்ம கடும் உறக்கத்துல இருக்கற போது கொரண்டிப் பிசாசு வந்து நம்மளை கீச்சிரும்’ என்று சிலர் பயப்படுவார்கள். அவர்கள் சொன்னது போல மறுநாள் விடிந்த பிறகு சிலரின் கை, கால்களில் ரத்தம் கசிந்த கீறல் இருக்கும். அதற்குக் காரணம் அவர்களின் கை விரல் நகங்கள்தான். ஒவ்வொருவரின் கை, கால்களிலும் நீள நீளமாக நகம் வளர்ந்திருக்கும். நகம் என்ற ஒன்று நம் உடலினுள் வளர்ந்துகொண்டிருக்கிறது என்பதே யாருக்கும் நினைவில் இருக்காது. ஏனென்றால் அவர்கள் செய்யும் எல்லா வேலைக்கும் நகமும் தேவைப்பட்டது. அதனால் நகத்தை வளர்த்து வைத்திருப்பார்கள். வேலை செய்த அலுப்பில் உறங்கும் போது தங்களைத் தாங்களே சொறிந்துகொண்டு, கொரண்டிப் பேய் கீறிவிட்டதாகச் சொல்வார்கள். இந்தப் பூ இரவு முழுக்க மணம் கூட்டும். காலையில் வாடி சாம்பல் நிறமாக மாறிவிடும்.
பெரிய ஆட்களும், சிறு பிள்ளைகளும் காடுகளில் இவ்வளவு நேரமும் மேய்ந்துகொண்டிருக்கும் பசுக்களையும், காளைகளையும் பத்திக்கொண்டு வருவார்கள். தன்னிச்சையாக மேய்ந்த மாடுகள் ஆதாளி போட்டுக் கொண்டுவரும். புண்ணாக்கோடு பருத்தி விதையை ஆட்டி, தண்ணிக்கு விட்டப்பின் பசுக்களும், கன்றுகளும் கொட்டத்தில் வழக்கம் போல் கட்டப்பட்டு நிற்க, காளைகள் ஓட்டப் பந்தயத்துக்குத் தயாராகிவிடும். இந்த ஓட்டத்தை ஊரே வந்து வேடிக்கைப் பார்த்து மகிழும்.
மாட்டுப் பொங்கலன்று இரவில் மாறுவேடப் போட்டி நடக்கும். இதில் யாரும் கலந்துகொள்ளலாம். எந்த வேஷமும் போடலாம். சீனி, பெரிய பணக்காரராக இருப்பதால் எப்போதும் ஆடு, மாடு மேய்க்க யாராவது வரமாட்டாரா என்று எந்நேரமும் தேடிக்கொண்டிருப்பார். அவர் அப்படி தேடுவது குமரிகளுக்கு வேடிக்கையாக இருக்கும்.
கட்டுரையாளர், எழுத்தாளர். தொடர்புக்கு: arunskr@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT