Published : 03 Apr 2016 01:08 PM
Last Updated : 03 Apr 2016 01:08 PM

அதிசயங்களை நிகழ்த்திய ஆந்திர பிரதேசம்: ஈஷா குப்தா @ இந்திய சாலைகள்

(இந்தியா, பெண்களுக்குப் பாதுகாப்பான நாடு என்பதை உலகிற்கு உணர்த்தும் நோக்கத்துடன் சவால்கள் மிகுந்த இந்திய‌ச் சாலைகளில் இரு சக்கர வாகனத்தில் தனி ஒருத்தியாக வலம் வருகிறார் ஈஷா குப்தா. 37 வயதான ஈஷா குப்தாவின் மோட்டார் சைக்கிள் அனுபவங்கள் தொடர்கின்றன.)

நிதமும் ஞானம் பொழியும் வானம், இலை மீது படரும் கதிரொளி, மெதுவாக ஊர்வலம் போகும் மேகங்கள், தேகத்தை மென்மையாகக் குளிர்விக்கும் தென்றல், கண்களைப் பனிக்கும் பசுமை வெளி என இத்தனை பேரின்பங்கள் பயணத்தில்தானே வாய்க்கின்றன. இந்தப் பாதையில் பயணித்தால் பாரமான இதய‌ங்களில் செந்தாமரைகள் பூத்துக் குலுங்கும். வெற்றிகரமாக‌ தெலங்கானா மாநிலத்தைக் கடந்து, ஆந்திரப் பிரதேசத்துக்குள் நுழைகையில் மனம் கவிதையால் நிறைந்து கிடந்தது.

அனந்தப்பூரின் இருமுகங்கள்

அதிகாலை வேளையில் ஹைதராபாத்தில் இருந்து சூர்யாபேட்டை வழியாக கர்னூல் நோக்கிப் பயணித்தேன். போக்குவரத்து நெரிசல் இல்லாத சாலையில் சல்லென சுமார் 100 கி.மீ. வேகத்தில் பறப்பது அலாதியாக இருந்தது. கர்னூலில் இருந்து மலைகளைப் பின்தொடர்ந்தவாறு அனந்தப்பூரை நோக்கி மைக்கியை விரட்டினேன். ஏற்கெனவே திட்டமிட்டவாறு இலக்கை அடைய வேண்டும் என்பதால், விரைவாக மைல்கற்களைக் கடந்துகொண்டிருந்தேன். லட்சிய வெறியில் மதிய உணவைச் சாப்பிட மறந்துப்போனதால், கோரப்பசி வாட்டியது. அனந்தப்பூர் சாலையில் வழிநெடுகத் தேடியும் ஒரு கையேந்தி பவன்கூட‌க் கிடைக்கவில்லை. கடைசியாக களிகிரி கிராமத்தில் மாலை 4.30 மணியளவில் ஒரு ரோட்டோர ஓட்டலைக் கண்டடைந்தேன். அளவற்ற சோறு, அறுசுவை குழம்பு, கூட்டு வகைகள், கோடைக்கு இதமான மோர் என 35 ரூபாய்க்குப் பிரமாதமான உணவைப் பரிமாறினார்கள். இவ்வளவு நேரம் ஓட்டல் தேடியதற்கும், மூன்று மணி நேரம் பசியால் வாடியதற்கும் நல்விருந்தாக அமைந்தது.

அனந்தப்பூர் மாவட்டத்தின் வயல்களில் பெரிதாக வேளாண்மை இல்லை. வேலையில்லா விவசாயிகள் புளிய மரத்தடியில் தாயம் விளையாடிக்கொண்டிந்தார்கள். நீர்நிலைகள் வறண்டதால் பெண்கள் குடிநீரைத் தேடி மைல் கணக்கில் குடங்களைச் சுமக்கிறார்கள். மலையடிவாரங்களில் இருந்த பாறைகள் துண்டு துண்டாக வெட்டப்பட்டிருந்தன. குன்றுகளையும், கரடுகளையும் பெரும் முதலாளிகள் சுரங்கங்களாகக் குடைந்துகொண்டிருக்கிறார்கள். கண் முன்னே அனந்தப்பூர் நகரத்தின் அழிவைப் பார்க்கையில், மனம் மயான‌ அதிர்ச்சியில் உறைந்தது.

பொன்னிற வேளையில் கொள்ளாப்பள்ளியைக் கடந்து புட்டபர்த்தி நோக்கிப் பறந்தேன். திடீரென வண்ணமயமான ரயில் நிலையம், பெரிய பேருந்து நிலையம், தனி விமானங்கள் வந்திறங்க விமான நிலையம், சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, பல்கலைக்கழகம், ஆய்வு மையங்கள், வழியெங்கும் சாய்பாபாவின் பெயரைச் சொல்லும் கட்டிடங்கள் என புட்டபர்த்தி தனி தேசமாகக் காட்சியளித்தது. அன்றிரவு கோடை நிலவை அங்கேயே கண்டு உறங்கினேன்.

யானைமலை குதிரைமலை ஆன கதை

அதிகாலையில் அனந்தப்பூரில் இருந்து சித்தூர் நோக்கிப் புறப்பட்டேன். பாதையில் தென்பட்ட ஊர்ப்பெயர்கள், கிராம அமைப்பு, வீடுகளின் தோற்றம், மனிதர்களின் முகம், கலாச்சாரம் எனத் தமிழ்நாட்டில் பயணிப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தியது. சித்தூர் தேசிய நெடுஞ்சாலையில் பயணிக்கையில் காணிபாகம் என்ற அழகான கோயில் நிறைந்த சிற்றூரைக் கண்டேன். பாகுபத நதியின் கரையோரம் அமைந்திருக்கும் இந்த ஊருக்கு நீண்ட வரலாறு இருக்கிறது. தமிழில் காணி என்றால் நிலம் என்று பொருள். பாகுபத நதியின் நீர் இந்த நிலத்தில் பாய்வதால் காணிபாகம் எனப் பெயர்ப்பெற்றது எனப் பொறுமையாகவும் பெருமையாகவும் விளக்கினார் ஓய்வுபெற்ற தமிழாசிரியர் ஒருவர்.

மதனபள்ளியை நெருங்குகையில் சாலையோரம் யானை வடிவிலான மலைத்தொடர் பின்தொடர்ந்தது. 1870-ல் இந்தப் பகுதியை ஆண்ட ஆங்கிலேய ஆட்சியரின் பெயர் டபள்யூ.டி.ஹார்ஸ்லி. அவரது பெயர் இந்தக் கம்பீரமான மலைக்குச் சூட்டப்பட்டது. தெலுங்கில் இதை ஹார்ஸ்கொள்ளிகொண்டா என அழைக்கிறார்கள். ஆனால் இந்த மலையின் உண்மையான பெயர் யானுகுலு மல்லம்மாகொண்டா. சில நூற்றாண்டுகளுக்கு முன் இந்த மலையில் மல்லாம்மா என்கிற மூதாட்டி வாழ்ந்தார். அவருக்குப் பாதுகாப்பாக பல யானைகள் இருந்தன. எனவே மல்லாம்மாவையும்யானைகளையும் நினைவுக்கூறும் வகையில் யானுகுலு மல்லம்மாகொண்டா என அழைக்கப்பட்டது. ஆங்கிலேயர் ஆட்சியில் யானைமலை குதிரைமலையாக மாற்றப்பட்டுள்ளதாகச் சொன்னார்கள்.

அனல் பறக்கும் வெயிலில் சித்தூரைக் கடந்து திருப்பதி நோக்கி செம்மர வனப்பகுதியில் நுழைந்தேன். வெயிலைத் தணிக்கும் வகையில் வழியெங்கும் காடுகளும் கோயில்களும் நிறைந்திருந்தன. திருப்பதி மலையடிவாரத்தில் நண்பர்கள் லட்டு பொட்டலத்துடன் என்னை வரவேற்றார்கள். உலகப் பிரசித்தி பெற்ற திருப்பதியில் லட்டுவையும், சிற்றுண்டியையும் சாப்பிட்டுவிட்டு, கடப்பா நோக்கி மோட்டார் சைக்கிளைச் செலுத்தினேன்.

சோழர்களை நினைவூட்டும் நெல்லும், காளைகளும்!

கடப்பாவுக்குச் செல்லும் திருப்பதி தேசிய நெடுஞ்சாலை புதிதாகப் போடப்பட்டிருந்ததால் ஜெட் வேகத்தில் பயணித்தேன். மலைகளும் காடுகளும் நிறைந்த இந்தப் பாதையில் லாரிகளை முந்திக்கொண்டு பறப்பது உற்சாகத்தைக் கொடுத்தது. கடப்பாவை அடைந்து அங்கிருந்து நெல் வயல்கள் நிறைந்த நெல்லூர் நோக்கிப் பறந்தேன். சாலைகள் தோண்டப்பட்டு, செப்பனிடும் பணிகள் நடைபெற்றுவருவதால் மைக்கி மிகவும் திணறியது.

தமிழகத்தின் நெற்களஞ்சியமான‌ தஞ்சாவூரைத் தலைநகரமாகக் கொண்ட சோழ மன்னர்கள், இன்றைய ஆந்திராவின் நெற்களஞ்சியமான‌ நெல்லூரை ஒரு காலத்தில் ஆண்டனர். தஞ்சையைப் போலவே இந்த ஊரிலும் நெல் செழித்து வளர்ந்ததால் நெல்லூர் என பெயரிட்டனர். சோழ மன்னர்களின் பெருமையைப் பறைச்சாற்றும் வகையில் இன்றும் ஏராளமான கோயில்கள் இந்தப் பூமியில் கம்பீரமாக நிற்கின்றன. நெல்லூர் மாவட்டத்தில் இருக்கும் பல கிராமங்களின் பெயர் தூயதமிழில் இருப்பது எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

நெல்லூரில் அன்றிரவு ஓய்வெடுத்துவிட்டு, மறுநாள் அதிகாலை ஓங்கோல் நோக்கி வங்கக் கடற்கரையோரம் புறப்பட்டேன். ஆளரவமற்ற சாலையில், இளங்காற்று வீசும் வேளையில் மோட்டார் பைக்கில் பயணிப்பது ஏகாந்தமாக‌ இருந்தது. சாலைகள் நீளும் திசையெல்லாம் வரவேற்கும் வானம், அதைத் தொடத் தூண்டும் மனம் என எனக்குள் பெரும்போட்டியே நிலவியது. சோழர்களும் பல்லவர்களும் ஆண்ட ஓங்கோலில் இருக்கும் கம்பீரமான காளைகள் உலக புகழ்பெற்றவை. மிக‌ வேகமாக அழிந்துவரும் ஓங்கோல் காளைகள், தற்போது ‘கொல்லா’ சமூகத்தினரிடம் மட்டும் அதிகமாக இருக்கின்றன. இந்த அரிதான காளைகளை வைத்து கொல்லா சமூகத்தினர் பெங்களூருவில் பிச்சையெடுத்துக்கொண்டிருப்பது மிகவும் வேதனையானது.

புத்த பூமியும், மசூலிப்பட்டின வண்ணங்களும்

ஓங்கோலில் இருந்து விஜயவாடா வழியாக மசூலிப்பட்டினம் நோக்கிப் பயணித்தேன். ஆந்திர மாநிலத்தின் புதிய தலைநகராக அவதாரம் எடுத்துவரும் அமராவதியை ஆக்கிரமிக்கும் வகையில் வழியெங்கும் கட்டிடங்கள், பாலங்கள், தொழிற்சாலைகள் பெருகிவருகின்றன. பழமையான கோயில்களிலும், கல்வெட்டுகளிலும் புத்தரின் மென்சிரிப்பைப் பார்க்க முடிகிறது. ஒரு காலத்தில் கிருஷ்ணா நதிக் கரையோரம் பவுத்தம் படர்ந்து, பாய்ந்ததன் தடத்தை இப்போதும் உணர முடிகிறது.

ஆந்திராவின் முதன்மையான தொழில் நகரம் விஜயவாடா என்றாலும், உண்மையான தெலுங்கு கலாச்சாரத்தின் தலைநகரம் ராஜமுந்திரிதான். பழமையான கோயில்களும், அற்புதமான சிற்பங்களும், குகைக் கல்வெட்டுகளும் நிறைந்த ராஜமுந்திரி முக்கியமான வரலாற்றுத் தொன்மை வாய்ந்த நகரமாக விளங்குகிறது. வங்கக்கடல் அலை தாலாட்டும் மசூலிப்பட்டினத்தை அடையும் வேளையில் நிறைய வரலாற்றுச் சின்னங்களைக் காண முடிந்தது. காய்கறி, பழங்களில் இருந்து எடுக்கப்ப‌டும் வண்ணங்களைக் கொண்டு நெய்யப்படும் உடைகளும், வரையப்படும் ஓவியங்களும், உலகப்புகழ் பெற்றவை. கலம்காரி ஜவுளி என அழைக்கப்படும் இந்த வண்ணமயமான உடைகளின் மேல் மையல் கொண்டு பிரெஞ்சுக்காரர்களும், பிரிட்டிஷ்காரர்களும், டச்சுக்காரர்களும் மசூலிப்பட்டினத்தைத் தங்களது காலனியாக மாற்றினர்.

அடிக்கடி புயலுக்கு இரையாகும் மசூலிப்பட்டினத்தில் நுழைந்தபோது அங்குள்ள‌ மக்கள் எனக்கு உற்சாகமான வரவேற்பைக் கொடுத்தார்கள். எளிய மனிதர்கள் நிறைந்த சந்தைப் பகுதியில் எனது பயணத்தின் தேவை குறித்தும், பெண்களின் பாதுகாப்பு குறித்தும், தன்னம்பிக்கை குறித்தும் பேசினேன். உணர்ச்சிவசப்பட்ட நிலையில் பெண்களில் சிலர், என்னை

அணைத்து நெற்றியில் முத்தமிட்டது கண்ணீரைத் துளிர்க்கச் செய்தது. தூய்மையான அன்பு நிறைந்தவர்களோடு அன்றிரவு அளவளாவினேன்.

மறுநாள் அதிகாலையில் காக்கிநாடா வழியாக விசாகப்பட்டினம் நோக்கிப் புறப்பட்டேன். கிருஷ்ணா நதியின் பாய்ச்சலால் நெல், கரும்பு, பருத்தி விளைச்சல் அமோகமாக இருந்தது. கண்கவரும் சுற்றுலாத் தலங்கள், சீரான வெப்பநிலை, பல்வேறு மொழிகளைப் பேசும் மக்கள் என விசாகப்பட்டினம் சிறப்பான சுற்றுலாத் தலமாகக் காட்சியளிக்கிறது. ராமகிருஷ்ணா கடற்கரை அடைந்த போது ரிஷி குருகுல மாணவர்கள் என்னை வரவேற்றனர். மாணவர்களின் குச்சிப்புடி நடனத்தையும், மகளிர் விழிப்புணர்வு நாடகத்தையும் மெய்மறந்து ரசித்தேன்.

பெண்களை தெய்வமாக வணங்கும் இந்நாட்டில், இன்று பெண்கள் மீது நடத்தப்படும் வன்முறைகள் குறித்து விலாவரியாக விவரித்தேன். இந்த நிலையை மாற்ற எதிர்காலத் தலைமுறையான மாணவர்களால் மட்டுமே முடியும். எனவே மாணவர்கள் பெண்களை மதிக்கவும், பாதுகாக்கவும் வேண்டுமெனச் சொன்னேன். “பெண்கள் நாட்டின் கண்கள். அவர்களை மதிப்போம், பாதுகாப்போம்” என மாணவர்கள் ஒரே குரலில் உறுதிமொழி எடுத்துக்கொண்டார்கள். அந்தக் கணம் என்னை அறியாமல் கண் கலங்கியது!

(பயணம் தொட‌ரும்), தொகுப்பு: இரா.வினோத்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x