Published : 13 Mar 2022 11:06 AM
Last Updated : 13 Mar 2022 11:06 AM
பல்லாயிரம் ஆண்டு காலமாக ஆணாதிக்க, ஆண் மையச் சிந்தனை புரையோடிப் போயிருக்கும் ஒரு சமுதாயத்தில் பாலினச் சமத்துவத்தைக் கொண்டு வரவேண்டுமெனில் அதற்கான சமூக அரசியல் செயற்திட்டம் ஒன்று கண்டிப்பாகத் தேவை. முதன்முறையாகத் தமிழக அரசு தமிழ்நாட்டுப் பெண்களுக்கான கொள்கை வரைவு ஒன்றினை அறிவித்திருப்பது இந்தக் கோணத்தில் மிகவும் வரவேற்கத்தக்கது. இதற்காக முனைந்து செயல்பட்ட அமைச்சர் கீதா ஜீவனுக்கு வாழ்த்துகள்.
சாராம்சமாகப் பெண்களுக்கெதிரான வன்முறைகளை ஒழிப்பது, பெண்ணைப் பொருளா தாரரீதியாக ஆளுமைப்படுத்துதல் மற்றும் பாலினச் சமத்துவவெளியை உருவாக்குதல், இந்தச் செயற்பாடுகளின் வாயிலாகப் பெண்ணின் சுயமரியாதை, முடிவெடுக்கும் திறன், சமூகப் பங்களிப்பு ஆகியவற்றை மேம்படுத்துவது என்பதான அடிப்படைகளைக் கொண்டு இந்தக் கொள்கை வகுக்கப்பட்டிருக்கிறது.
நல்ல முன்னெடுப்பு
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் வழி காட்டுதலின்படியும் அண்மையில் ஐ.நா., வெளியிட்டிருக்கும் பெண்கள் மீதான வன் முறையைத் தடுப்பதற்கான கட்டமைப்புப் பரிந்துரைகளை (RESPECT) அடிப்படை யாகக் கொண்டும் இந்தக் கொள்கை வரையப்பட்டிருக்கிறது.
இக்கொள்கை வரைவு பெண்களை ஆளுமைப்படுத்துவதற்கான அனைத்து முன்னெடுப்புகளையும் வாய்ப்புகளையும் முன்வைக்கிறது. எனினும் உறுதிப்படுத்தப்பட்ட, தெளிவாக வடிவமைக்கப்பட்ட திட்டங்கள் இதில் இணைக்கப்படாததால் இவற்றின் செயல்வடிவம் குறித்து நாம் எதையும் கூற முடியாது. ஒரு நல்ல கனவை இக்கொள்கை முன்வைக்கிறது. பெண்கள் குறித்த அடிப்படையான பார்வையில் பெரிய அளவில் பிசிறில்லை. குறிப்பாகத் தொழில் அடிப்படையில் பெண்களைச் சமூகவெளியில் ஒருங்கிணைத்தல், அரசியல் பாடம் எடுக்கப் பாடசாலைகள் நிறுவுதல், பாலின பட்ஜெட், அனைத்துத் துறைகளிலும் பாலினச் சமத்துவம் - சமவாய்ப்பு குறித்து கண்காணிக்கும் பொறுப்பெடுத்தல், பெண்களுக்கான திறன் வளர்க்கச் சிறப்பு முயற்சிகள், பொருளாதார ஆளுமைக்கு மகளிர் வங்கி, கடன் திட்டங்கள், பெண் ஆராய்ச்சியாளர்கள் ஊக்குவிப்பு என கூடைகூடையாய் மலர்களைக் கொட்டி நம்மை மகிழ்விப்பதுபோல் அறிக்கை விரிந்து செல்கிறது. ஆனால், இதற்கான செயல்திட்டங்கள், அவற்றை நடைமுறைப்படுத்தும் அதிகாரங்கள், நிதி ஒதுக்கீடுகள் ஆகியவற்றை அறியாமல் நாம் எந்தவொரு திட்டமான கருத்தையும் உடனே தெரிவித்துவிட இயலாது.
மகளிர் ஆணையங்களின் அதிகாரம்
ஒரு சில இடங்களைத் திறனாய்ந்து எண்ணங் களைப் பகிர்ந்து கொள்ளலாம். உதாரணமாக அனைத்துத் துறைகளுக்கும் பாலினரீதியாக பிரித்துத் தகவல்கள் தரப்படும் என்கிறார்கள்.
ஆனால், அதைவிட முக்கியம் அனைத்துத் துறைகளும் தங்கள் பதிவேடுகளைப் பாலினரீதியாகப் பிரித்து சமூகநலத் துறைக்கு தங்கள் துறைகளில் பாலினச் சமத்துவம் குறித்து அறிக்கைகள் தர வேண்டும் என்று நிர்பந்திப்பதே. வேறு வார்த்தைகளில் சொல்லப்போனால் சமூகநலத் துறை தன்னை அதிகாரப்படுத்திக் கொள்ள வேண்டுமல்லவா? மேலும், வன்முறை யொழிப்பைத் தனது முதன்மை இலக்காகக் கொண்டுள்ளபோது மத்திய மற்றும் மாநில மகளிர் ஆணையங்கள் குறித்த எந்தப் பதிவும் இந்த அறிக்கையில் இடம் பெறவில்லை. மகளிர் ஆணையங்களை அதிகாரப்படுத்த வேண்டிய தேவை குறித்து நாம் நீண்ட நாட்களாகப் பேசி வருகிறோம். இக்கொள்கைகளைக் கண்காணிக்க ஒரு உயர்நிலைக் குழுவை அமைக்க இருப்பதாக அறிக்கை தெரிவிக்கிறது. அந்த அமைப்பு பொதுமக்கள் அணுகக் கூடிய அமைப்பா அல்லது உள் நிர்வாக அமைப்பா என்பது தெரியவில்லை.
ஒடுக்கப்பட்ட பெண்களின் மீட்சி
பெண்களின் தாழ்வு நிலை என்பது நமது சமுதாயத்தில் சாதி அமைப்போடு நேரடித் தொடர்புடையது. ஆனால், தனது இலக்கு பெண்கள் என்கின்ற வகைப்படுத்தலில் இந்தக் கூறு அடிப்படையாக எடுத்துக் கொள்ளப்படவில்லை. பிற்படுத்தப்பட்ட சமுதாயங்கள் என்கின்ற வகைப்பாடு கணக்கில் கொள்ளப்படவில்லை. திராவிட இயக்க ஆட்சி பின்தங்கியோர் என்கின்ற மிகவும் பொத்தாம் பொதுவான, நேரடியாக இல்லாத சொற்றொடரை ஏன் பயன்படுத்த வேண்டும்? இங்கே பெண்ணடிமை என்பது சாதி அமைப்புடன், அதன் வேர்களுடன் தொடர்புள்ளது. எனவே, சாதி அடிப்படையில் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட பெண்களுக்கான திட்டங்கள் என்று அடையாளப்படுத்துவதே சரியான திராவிட இயக்க அணுகுமுறையாக இருக்க முடியும். இந்தக் கொள்கை வரைவில் அந்த அணுகுமுறை முற்றிலுமாகத் தவிர்க்கப்பட்டிருப்பது ஏமாற்றமளிக்கிறது.
‘Gen O’ என்கின்ற பாலியல் கண்காணிப்பு மையங்கள் அறிமுகப் படுத்தப்பட இருக்கின்றன. இவை பாலின ஆராய்ச்சி மையங்கள், கல்வி நிறுவனங்கள், மேலும் பாலினச் சமத்துவத்தைக் கண்காணிக்கும் அமைப்பாகச் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சொல்லாக்கம் மேற்கத்திய உலகிலிருந்து பெறப்பட்டுள்ளது. நமது சமுதாயத்தில் இது எப்படி அமைக்கப்படப்போகிறது, இந்த இடங்களில் யார் அமர்த்தப்படப்போகிறார்கள் இது எந்தப் பிரிவினருக்கு பயன்படப்போகிறது என்பதெல்லாம் இப்போதைக்குக் கேள்விகள் மட்டுமே. பெண்கள் புழங்கும் பொது இடங்களில் பாலின அமைதியை நடைமுறைப்படுத்த முடியாத நிலையிலிருக்கும் நாம் இந்தத் திட்டத்தை வைத்து என்ன செய்ய இருக்கிறோம் என்பது கேள்வியாகவே நிற்கிறது.
தொழில்முனைவை விரிவாக்க வேண்டும்
மகளிர் வங்கி என்கின்ற முயற்சி ஏன் இதுவரை வெற்றி பெறவில்லை என்பதற்கான ஆய்வு தேவை. ஆனால், கண்டிப்பாக மகளிர் வங்கி என்கின்ற கருத்தமைவு வரவேற்க வேண்டிய, வெற்றிகரமாகச் செயற்படுத்தப்பட வேண்டிய ஒன்று. பெண்களுக்கான திறன் வளர்த்தல், தொழில் முனைவு ஆதரவு என்று நம்பிக்கை வாசகங்கள் நிறைய இடம் பெற்றுள்ளன. ஆனால், என்ன மாதிரியான திறன் என்கின்ற கேள்வி மிகவும் முக்கியமானது. தையல் எந்திரங்களைத் தாண்டிப்போயாக வேண்டும்.
பல்வேறு தொழில்களில் பெண்கள் முற்றிலுமாகத் தவிர்க்கப்பட்டிருக்கிறார்கள், தடை செய்யவும் பட்டிருக்கிறார்கள். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகத் தொடர்ந்த இந்த மரபினால் அத்திறன்களை உடற்கூற்றியல்ரீதியாக இழந்தும் இருக்கிறார்கள். அந்தத் துறைகளைத் தெரிவு செய்து திறன் வளர்ச்சி பயிற்சி வழங்க அரசு முன்வர வேண்டும் (உதாரணம் தச்சு வேலை, வாகன வேலைகள், கடல் சார்ந்த பணிகள்). தனியார், பொதுத்துறை நிறுவனங்கள் மத்திய அரசின் ஆளுகையிலிருக்கும் நிலையில் தமிழக அரசு அந்த நிறுவனங்களில் பெண் தலைமையை உறுதிசெய்ய என்ன வழிமுறையைக் கையாளப்போகிறது?
இந்தக் கொள்கை வரைவு அறிக்கை பன்னாட்டு மற்றும் ஐ.நா., உருவாக்கி வைத்திருக்கும் தன்னார்வத் தொண்டு நிறுவனங் களைத் தன் செயற்பாட்டுக் கூட்டாளிகளாக வெளிப்படையாக அறிவிக்கிறது. மிகப் பெரிய சமூகநலத் திட்டத்தின் செயலாக்கத்துக்கு இந்தக் கூட்டு தவிர்க்க இயலாததாக இருக்கலாம். ஆனால், அரசு சாரா நிறுவனங்கள் அரசின் கட்டுப்பாட்டுக்குள் இயங்க வேண்டும் என்பதைக் கண்காணித்துக்கொள்ள வேண்டும்.
இந்தக் கொள்கையில் விடுபட்டுப்போயி ருக்கும் ஒரு முக்கிய பார்வை என்னவெனில் பெண்ணை அகவாழ்வின் சுமைகளிலிருந்து விடுவிப்பது. வீட்டில் சமையல், பராமரிப்பு, குழந்தை வளர்ப்பு, முதியோர் பராமரிப்பு போன்றவற்றை சமுதாயப் பணிகளாக மாற்றுவதன் மூலமாக மட்டுமே பெண்ணை உண்மையாக விடுவிக்க இயலும். அதற்கான முதல் தேவையான சமுதாய உணவுக் கூடங் களை அமைக்க அரசு முன்வர வேண்டும். இக்கொள்கை அறிக்கையில் அத்திட்டதை இணைத்துக்கொள்வது மிகவும் அவசியம். மேலும், முதிர் கன்னிகள், பூப்பெய்துதல், விதவைகள் போன்ற வார்த்தைப் பயன்பாடு களை இந்த அறிக்கை தவிர்த்திருக்க வேண்டும்.
மற்றொரு குறிப்பிடத்தக்க விஷயம் அமைக்கப்பட இருக்கும் கண்காணிப்பு மையங்களில் பெண்கள் அமைப்புகளின் பிரதிநிதித்துவத்தை அரசு பெற வேண்டும். ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கி வைத்திருப்பதற்குத் தமிழக அரசுக்கு நன்றி. எதிர்பார்க்க வைத்திருக்கிறீர்கள். எதிர்பார்ப்புகள் நிறைவேற வேண்டும்.
கட்டுரையாளர், எழுத்தாளர், சமூகச் செயற்பாட்டாளர்
தொடர்புக்கு: oviacs2004@yahoo.co.uk
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT