Published : 10 Apr 2016 01:45 PM
Last Updated : 10 Apr 2016 01:45 PM

கல்வெட்டுகளில் பெண்கள்!

சமூகம், அறிவியல், கலை இலக்கிய வரலாற்றில் பெண்களின் பங்கு பற்றிய பதிவுகள் மிகவும் குறைவே. அதிலும் கல்வெட்டுகள் என்று வந்தால் அரசர்களின் கொடை, வீரர்களின் பராக்கிரமங்கள் ஆகியவை பற்றியவைதான் அதிகம் இருக்குமேயொழிய பெண்களைப் பற்றிய கல்வெட்டுகள் மிகவும் குறைவே.

இதற்கு விதிவிலக்காகக் கிடைத்துள்ள சில கல்வெட்டுகள் பழங்காலத் தமிழ்ச் சமூகத்தில் பெண்களின் நிலை பற்றிய சில பார்வைகளை நமக்குத் தருவனவாக உள்ளன என்கிறார் பேராசிரியை சு. தமிழ்வாணி.

“சங்க காலத்தில் தமிழ்ச் சமூகத்தில் பெண்களின் நிலையை, சங்கப் பாடல்கள் மூலம் அறிகிறோம். இடைக்காலத்தில், அதாவது கி.பி.8-ம் நூற்றாண்டு முதல் கி.பி.13-ம் நூற்றாண்டு வரை தமிழ்ச் சமூகத்தில் பெண்களின் நிலையைக் கல்வெட்டுக்கள் வாயிலாக அறியலாம்.

அன்றைக்கு, அரசி மட்டும் அல்லாமல் வணிகர், விவசாயி, காவலர் ஆகியோரது மனைவிகளும், கோயில்களில் திருப்பணி செய்த தேவரடியார்கள், பணிப்பெண் ஆகியோரும் கொடுத்த கொடைகளைக் கல்வெட்டுகளில் பதிவு செய்திருப்பதன் மூலமாக வரலாற்றைப் பற்றிய வேறுபட்ட கோணம் நமக்குப் புலப்படுகிறது” என்கிறார் பேரா. சு. தமிழ்வாணி.

பெண்களின் கொடை

அவிநாசி வட்டம் ஆலத்தூர் சமணர் கோயில் வாசல் கல்லில் உள்ள கி.பி. 10-ம் நூற்றாண்டு வட்டெழுத்துக் கல்வெட்டு மூலம், சித்தரையர் மகளும், கொங்குச் சோழன் மனைவியுமான வானவன் மாதவி சிற்றாச்சர் ஆலத்தூரில் வீர சங்காதப் பெரும்பள்ளியைத் திருப்பணி செய்து புதுப்பித்துள்ளார்.

அன்னூர் மன்னீசர் கோயில் கருவறைத் தென்சுவர்க் கல்வெட்டு மூலம், கி.பி.1265-ல் கொங்குச் சோழர் இரண்டாம் விக்கிரம சோழன் காலத்தில் சாத்து வாணிகன் மாலன் மனைவி கவுரி, சந்தி விளக்கெரிக்க 29 பணம் கொடையாகக் கொடுத்துள்ளார்.

விவசாயி மனைவி கொடை

தாராபுரம் வட்டம் பிரம்மியம் அம்மன் கோயிலுக்கு வடக்கில் உள்ள வட்டெழுத்துத் தனிக்கல் மூலம் கி.பி.10-ம் நூற்றாண்டில், பாண்டிய மன்னன் வரகுண பராந்தகன் காலத்தில் அண்டநாட்டுப்புத்தூர் கிழான் உள்ளங்கணப்பன் மனைவியும் கூடல் கிழான் மகளுமான வடுகங்கோதை செப்புத் திருமேனி செய்து வைத்தது பற்றியும் அதற்கு பூஜை செய்யவும் நிலம் தந்ததும் அறிய முடிகிறது.

காங்கேயம் வட்டம் பட்டாலி பால்வண்ண ஈஸ்வரர் மண்டபம் கிழக்கு சுவரில் உள்ள 3-ம் விக்கிரமசோழன் கால கல்வெட்டு மூலம், கி.பி.1292-ல் காவலன் அகளங்காழ்வான் மனைவி அவிநாசியாண்டி என்பவர் சந்தி விளக்கு எரிக்க ஒரு கழஞ்சுப் பொன் (4.4கிராம்) அளித்துள்ளார்.

தேவரடியார் கொடை

உடுமலை வட்டம் கடத்தூரில் உள்ள மருதீசர் கோயில் அர்த்த மண்டபம், கி.பி.1278-ம் ஆண்டு மூன்றாம் விக்கிரம சோழன் காலத்துக் கல்வெட்டு மூலம் கொழுமத்தைச் சேர்ந்த நாட்டிய மகள் சொக்கி என்பவர் நிலக்கொடை அளித்துள்ளார்.

தேவரடியார்கள் உரிமை

திருப்பூர் திருமுருகன்பூண்டி திருமுருகநாதர் கோயில் கருவறைக் கல்வெட்டு மூலம், வீரபாண்டியன் கி.பி.13-ம் நூற்றாண்டில் இக்கோயில் தேவரடியாரில் ஆடக்கொண்ட நாச்சியின் மகளாகிய சவுண்டய நங்கைக்கும் அவர்களைச் சார்ந்தோருக்கும், திருவிழாக்களில் முன் அரங்கு ஏறும் உரிமை, தேரில் அமரும் உரிமை, கருவறை வரை செல்லும் உரிமையும் பெற்றிருந்தனர்.

பணிப்பெண் கொடை

அவிநாசி அருகே சேவூர் கபாலீசர் கோயிலில் உள்ள கி.பி.1227-ம் ஆண்டு கல்வெட்டு மூலம், அரசி முக்கோ கிழானடிகளின் பணிப்பெண் அறையன்வல்லி என்பவர், சந்தி விளக்கு எரிக்க ஒரு கழஞ்சுப் பொன்னைக் கொடையாகக் கொடுத்துள்ளார்.

கணவன் கொடை

அவிநாசி ஆலத்தூர் சமணர் கோயில் கி.பி.10-ம் நூற்றாண்டைச் சேர்ந்த வட்டெழுத்துக் கருவறை வாசல்கல் கல்வெட்டு தெரிவிக்கும் செய்தி ஒரு கணவன் தன் மனைவி மீது கொண்டிருந்த ஆழமான அன்பைத் தெரிவிக்கிறது. பொங்கலூர் வண்ணான் நீலன் செல்லன் என்பவர், தன் மனைவி காவஞ்சாத்தி மற்றும் தன் மகன் செல்லங்கணத்தி ஆகியோர் நல்வாழ்வுக்காக ஆலத்தூர் சமணர் கோயில் கருவறை வாசல்காலைக் கொடுத்துள்ளார்.

இந்தக் கல்வெட்டுகளை வைத்துக்கொண்டு முழுமுற்றாக அந்தக் காலத்தில் பெண்கள் சுதந்திரம் பெற்றிருந்தார்கள் என்றெல்லாம் முடிவுக்கு வந்துவிட முடியாதுதான். ஆனாலும், வரலாற்றில் பெண்களின் பங்களிப்புகளைக் குறித்துக் குறைந்தபட்சப் பதிவுகளாவது இருந்திருக்கின்றனவே என்று நாம் சந்தோஷப்பட்டுக்கொள்ள முடியும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x