Published : 10 Apr 2016 01:53 PM
Last Updated : 10 Apr 2016 01:53 PM
பணியில் ஆணும் பெண்ணும் சமம், ஆனால் எல்லா நேரத்துக்கும் இது பொருந்துமா என்று ஏப்ரல் 3-ம் தேதி வெளியான ‘பெண் இன்று’ இணைப்பிதழில் கேட்டிருந்தோம். ஒவ்வொரு நிறுவனமும் உடல் அடிப்படையில் பெண்ணுக்கு ஏற்படும் மாற்றங்களைப் புரிந்துகொண்டு அதற்கேற்ப அவர்களுக்குப் பணி வாய்ப்பை வழங்க வேண்டும் என்பதே பெரும்பாலான வாசகர்களின் கருத்தாக இருக்கிறது. இன்னும் சில வாசகர்கள், ஒரு பெண் தனக்குத் தரப்படும் விடுப்பைச் சரியான முறையில் பயன்படுத்திக்கொள்ள இந்தச் சமூகமும் குடும்ப அமைப்பும் ஒத்துழைக்கிறதா என்ற கேள்வியை முன்வைத்திருக்கிறார்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட சில கடிதங்களை இங்கே பார்க்கலாம்.
அலுவலகப் பணிகளும் வேலை நேரமும் பெண் என்பதற்காக எந்த விதத்திலும் குறைக்கப்படுவதும் இல்லை, மாற்றப்படுவதும் இல்லை. காலையில் வீட்டு வேலைகளை முடித்துவிட்டு அரக்கப் பரக்க அலுவலகத்துக்கு ஓடும் அவள், எந்த விதத்திலும் பணியில் சமரசம் செய்துகொள்வதில்லை. கடமை என்று வந்துவிட்டால் கவனம் திருப்பாமல் முழு மூச்சாகப் பணியாற்றுபவள். அவளை உற்சாகப்படுத்தி மேம்படுத்த வேண்டியது இந்தச் சமூகத்தின் கடன்.
- லலிதா சண்முகம், திருச்சி.
பெண்கள் பல்வேறு துறைகளிலும் புகுந்து புறப்படுகின்றனர். ஆனால் காலகாலமாகப் பெண்கள் செய்துவரும் வேலைகளைச் செய்வதில் ஆண்களுக்கு இருக்கும் தயக்கம் இன்னும் தகர்ந்தபாடில்லை. மகப்பேறு, குழந்தை வளர்ப்பு போன்ற தவிர்க்க முடியாத சூழ்நிலைகளைத் தாண்டி, பெண்கள் தங்கள் பணியை ஆண்களைவிடச் சிறப்பாகவே செய்கின்றனர். ஆணின் வாழ்க்கை முறையையும் பெண்ணின் வாழ்க்கை முறையையும் ஒப்பிட்டு, வேறுபாடுகளை உணர்ந்து அதற்கேற்ப பெண்ணுக்குச் சமத்துவம் அளிக்கப்பட வேண்டும். மகப்பேறு காரணமாக விடுப்பு எடுக்கும் பெண்களுக்கு ஊதிய உயர்வு, பதவி உயர்வு ஆகியவற்றில் பாரபட்சம் காட்டக் கூடாது.
- ஜானகி ரங்கநாதன், சென்னை-4.
ஒரு நாட்டின் வளர்ச்சி என்பது பாலின இடைவெளியற்ற சமச்சீர் வளர்ச்சியாகத்தான் இருக்க வேண்டும். பெண்களால் ஆணுக்கு நிகராகப் பணியாற்ற முடியுமா என்ற கேள்வியே தேவையில்லாதது. ஒரே நேரத்தில் பல வேலைகளைச் செய்யும் பன்முகத் திறன் பெண்ணுக்கு உண்டு. இயற்கையாக அவளுடைய உடலில் ஏற்படும் மாற்றங்களை உணர்ந்து அதற்கேற்ப வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும்.
- தாரா ரமேஷ், புதுச்சேரி.
இன்று பல இடங்களிலும் பெண்கள் வீடு, பணியிடம் இரண்டு இடங்களிலும் பெருமளவு உழைப்பைச் செலுத்துகின்றனர். பணியிடத்தில் மற்றவர்களைப் போலவே பெண்ணுக்கும் நியமிக்கப்பட்ட வேலை உண்டு. ஆனால் வீட்டில் அனைத்து வேலைகளையும் பெண்களே செய்கின்றனர். பெண்ணுக்கு நிகராக ஏன் ஆண் வீட்டு வேலைகளைச் செய்வதில்லை? பணிகளைப் பகிர்ந்துகொள்வதில்லை? ஆணும் பெண்ணும் சரிநிகர் சமானம் என்பது அலுவலகத்தில் மட்டுமல்ல, வீட்டிலும்தானே?
- எஸ். ராஜம், சேலம்.
பெண்களுக்கான பணித்தளர்வை விடுங்கள். முதலில் பணியிடத்தில் பெண்கள் எப்படி நடத்தப்படுகிறார்கள்? ஒரு பெண் பணி நிமித்தம் தன் மேலதிகாரியிடம் பேசினாலே போதும், சக பணியாளர்கள் உடனே அவள் மீது பாலியல் சார்ந்த குற்றச் சாட்டை சுமத்திவிடுவார்கள். பணித்திறன் அதிகம் கொண்டவர்கள் பெண்கள். போதுமான ஊதியம், பதவி உயர்வு தரவில்லை என்றாலும் இது போன்ற பாலியல் வதந்திகள், அவர்களை வேலை செய்ய முடியாமல் முடக்கிவிடும்.
- எஸ். மைக்கேல் ஜீவநேசன், சென்னை.
இந்தக் காலத்துப் பெண்கள், தங்கள் வேலையில் உள்ள பொறுப்புகளை உணர்ந்து, தெளிவாகச் செயல்படுகிறார்கள். தவிர இப்போதெல்லாம் தனியார் நிறுவனங்களில் வேலை பார்க்கும் பெண்கள் பலரும் ஆறு மாதத்துக்கு மேல் மகப்பேறு விடுப்பும் எடுப்பதில்லை. தேவையைவிடக் குறைந்த விடுப்பு எடுத்துக்கொண்டு, அந்த நாட்களிலும் சிலர் வீட்டிலிருந்தபடியே அலுவலக வேலையைச் செய்கிறார்கள். எந்தக் காரணத்துக்காகவும் தங்கள் பொறுப்புகளைத் தட்டிக்கழிப்பதில்லை. அதனால் மகப்பேறு, குழந்தை வளர்ப்பு போன்ற காரணங்களுக்காகப் பெண்களுக்கு ஊதிய உயர்வு, பதவி உயர்வு போன்றவற்றை மறுப்பது எந்த விதத்திலும் நியாயமில்லை.
- எஸ். மங்கையர்கரசி, நெய்வேலி.
பெண்ணை அவள் சிந்திக்கும் போக்கில் விட்டுப் பார்த்தால்தான் அவர்களால் எவ்வளவு சாதிக்க முடியும் என்பது தெரியும். நான் ஒரு இல்லத்தரசி. என் வீட்டில் எந்த முடிவையும் நான் எடுப்பதில்லை. எனக்கென்று எந்த ஆசைக்கும் இங்கே இடமில்லை. அப்படியே இருந்தாலும் உடனே பறிக்கப்பட்டுவிடும். காலையில் காபி போடவா என்று கேட்டுவிட்டுத்தான் ஸ்டவ்வைப் பற்றவைக்க வேண்டும். என்ன சாப்பாடு என்று கேட்டுவிட்டுத்தான் காய் நறுக்க வேண்டும். இத்தனைக்கும் என் கணவர் படித்தவர், முற்போக்குச் சிந்தனை உடையவர்(?). ஆனால் பெண்ணை அடக்கிவைப்பதில் சர்வாதிகாரக் குணம் கொண்டவர். இதில் பெண்களுக்குப் பணித் தளர்வு குறித்துப் பேச என்ன இருக்கிறது?
- பெயர் வெளியிட விரும்பாத வாசகி.
பெண்ணுக்கு அவள் உடலில் சார்ந்து எழும் மாற்றங்களை வைத்தும் அதனால் அவள் பணிகளில் ஏற்படும் இடைவெளியை அல்லது தொய்வை வைத்தும் அவளது ஊதியத்தையும் பதவி உயர்வையும் புறந்தள்ளுவதைவிட அநீதி வேறில்லை. இது போன்ற செயல்களில் ஈடுபடும் நிறுவனங்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். காலம் காலமாகப் பெண்ணுக்கு எந்த உரிமையும் தானாக கிடைத்துவிடவில்லை. வலுவான போராட்டங்கள்தான் அவற்றை மீட்டுத் தந்திருக்கின்றன. போராடும் பெண்களோடு ஆண்களும் இணைந்து நின்று குரல் கொடுக்க வேண்டும்.
- பொன். கருணாநிதி, கோட்டூர்.
பெண்களுக்கு இணக்கமான பணிச்சூழலை உருவாக்கித்தர வேண்டிய பொறுப்பு அவள் சார்ந்திருக்கும் துறையில் வேலை பார்க்கும் ஆண்கள் அனைவருக்கும் உண்டு. அதே போல மகப்பேறு மற்றும் குழந்தை வளர்ப்பு ஆகியவற்றில் ஆண்கள் தங்கள் பங்களிப்பை மறந்துவிட்டு, தாய்மை அடைகிற பெண்ணினத்தை அதையே காரணம் காட்டிப் பணி முன்னேற்றத்தை முடக்குவது குறுகிய மனப்பான்மையின் வெளிப்பாடு. ஆணாதிக்கச் சமூகத்தின் இந்தச் சுயநல வெளிப்பாட்டை என்னவென்று சொல்வது? ஆண், பெண் இருவருக்குமிடையே சரியான புரிந்துகொள்ளுதலும் விட்டுக்கொடுத்தலும் இருந்தால் எல்லா நிலைகளையும் பெண்கள் கடந்து வரலாம்.
- பா. சுபிசுதா, காவேரிப்பாக்கம்.
போதுமான, சவுகரியமான கர்ப்ப கால, குழந்தைப்பேறு ஓய்வு விடுப்பை வழங்கி, பெண்களின் உழைப்பை வீட்டு, நாட்டு முன்னேற்றத்துக்குப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதில் யாருக்காவது மாற்றுக் கருத்து இருக்குமா என்ன?
- எஸ்.எஸ். ரவிக்குமார், கிருஷ்ணகிரி.
ஒரு குழந்தை இந்த உலகில் ஜனனம் எடுக்க ஆண்-பெண் பங்களிப்பு சமம். வெளிநாடுகளில் மகப்பேறு விடுப்பு ஆண், பெண் இருவருக்கும் உண்டு. குழந்தையைப் பெற்றெடுக்கும் தகுதி பெண்ணுக்கு மட்டுமே கிடைத்த வரம். ஆனால் மகப்பேறு மற்றும் குழந்தை வளர்ப்பில் பெண்ணுக்குத் துணையாக இருக்க வேண்டியது ஆணின் கடமை. ஆண்கள் பலருக்கும் அவர்களது கடமை தெரிவதில்லை.
- ந. உமா, நாகர்கோவில்.
கருத்தரித்தல், பிரசவம், குழந்தை வளர்ப்பு போன்றவை பெண்களுக்கான தனித்துவமானவை. இவற்றில் எந்த ஆணாலும் தன்னை இணைத்துக்கொள்ள இயலாது. இதைக் கருத்தில் கொண்டு ஒரே தரத்திலான பணியில் ஆணுக்கும் பெண்ணுக்கும் தனித்தனியான பணி ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பதுதான் சம உரிமை. இது பெண்களுக்கு வழங்குகின்ற சலுகை என்று குறைத்து மதிப்பிடக் கூடாது. ஊதியம் மட்டும் சமம், வேலை பளு நமக்கு அதிகம் என்று ஆண்கள் நினைக்கலாம். ஆனால் பெண்கள் வீட்டில் செய்யும் வேலைகளில் கணக்குப் பார்த்தால் எந்த ஆணும் வீட்டில் நிம்மதியாக இருக்க முடியாது. எல்லாப் பணியிடங்களிலும் பெண்களுக்கு என்று தனிப் பங்களிப்பு வழங்குவதுதான் சமுதாயத்தில் ஆண், பெண் சம நிலையை எட்டுவதற்கான வழி.
- சு. தட்சிணாமூர்த்தி, கோயம்புத்தூர்.
எனக்குத் தெரிந்த ஒரு பெண் மிக நல்ல வேலையில் இருந்தாள். திருமணம் முடிந்து ஒரு குழந்தைக்குத் தாயாகவும் ஆனாள். கணவனுக்கும் நல்ல இடத்தில் வேலை. இந்த நிலையில் அந்தப் பெண்ணுக்கு வெளிநாட்டுக்குச் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. அதை அவளுடைய கணவன் முழு மனதுடன் ஆதரித்தான். குழந்தையையும் கணவனையும் பிரிய வேண்டுமே என்ற மனைவின் மனதை வருத்தத்தைப் புரிந்துகொண்டு அந்த அன்புக் கணவன் தன் வேலையை விட்டு விட்டு அவளுடன் வெளிநாட்டுக்குச் சென்றான். சில மாதங்களிலேயே ஒரு வேலையையும் தேடிக்கொண்டான். இப்போது அவர்கள் மிகவும் மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள். இது போல செய்ய எத்தனை ஆண்கள் முன்வருவார்கள்?
- உஷா முத்துராமன், திருநகர்.
படித்த பெண்களை, அலுவலக விதிமுறை என்று சொல்லி ஏமாற்றுகிறார்கள் என்றால் படிக்காத பெண்களை அவர்களது அறியாமையைப் பயன்படுத்தி ஏமாற்றுகிறார்கள். மகப்பேறு காலத்திலும் குழந்தை வளர்ப்பிலும் பெண்கள் தங்களை அர்பணித்துக்கொள்ளும் போது அவர்களின் செயல்திறனை அளவுகோல் வைத்து பார்ப்பது தவறு. இவற்றைச் சுட்டிக்காட்டிப் பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்ற அடிப்படை உரிமைகளைத் தட்டிப் பறிப்பது நியாயமில்லை. சமுதாயத்தின் பிரதிபிம்பமே பெண். அவளுக்குத் தரும் சலுகைகள் எல்லாம் சமுதாயத்துக்குத்தான் பலன் கொடுத்துக்கொண்ருக்கின்றன என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
- வீ. யமுனா ராணி, சென்னை.
இயற்கையின் படைப்பில், ஆணின் உடற்கூறும் பெண்ணின் உடற்கூறும் வெவ்வேறானவை. அதனால் இருவரும் செய்கிற பணிகளை ஒப்பிட்டுப் பார்ப்பது அர்த்தமில்லாதது மட்டுமல்ல, தேவையில்லாததும்கூட. அவரவர் பணிகளைத் தனித்தனியே முடிந்தவரை நன்றாகச் செய்வதே தனிச் சிறப்பு. குறிப்பாக, திருமணத்திற்குப் பின், பெண்ணின் உடல்நலம் (ஆணின் உடல் நலத்தைவிட) முற்றிலும் மாறுபடுகிற காரணத்தால், அவருக்கு ஏற்ற பணியைத் தருவதே பொருளாதார ரீதியாக, குடும்பம் என்ற வண்டி சீராக ஓட வழிவகுக்கும். அதை விட்டு விட்டு, ஆணோடு பெண் செய்கிற வேலையையும், பெண் செய்கிற பணிகளை ஆண்கள் செய்கிற பணிகளோடும் ஒப்பிட்டுப் பார்த்து எதிர்பார்ப்புகளை ஏற்படுத்திகொள்வது, குழப்பத்தையே விளைவிக்கும்.
- பி. நடராஜன், மேட்டூர்அணை.
ஆண்களுக்கு அலுவலக வேலை மட்டும்தான் இருக்கிறது. ஆனால் பெண்களுக்கு அலுவலகம், வீடு என்று இரட்டைச் சுமை இருக்கிறது. எனவே அவர்களால் எல்லா நேரத்திலும் ஒரே மாதிரி பணிபுரிய முடியாது. இதைப் புரிந்துகொள்ளாமல் பெண்களை வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்க வேண்டும் என்று சொல்வது அப்பட்டமான ஆணாதிக்க குரூர மனப்பான்மைதான். பெண்களின் சுமையைப் பகிர்ந்துகொள்ள ஆண்கள் முன்வராத வரை இந்த நிலை மாறாது.
- தேஜஸ், காளப்பட்டி.
பெண்களுக்கு உடலில் இயற்கையாக ஏற்படும் மாற்றங்களை காரணம் காட்டி அவர்களை ஒதுக்குவதும், அவர்களைச் சில பணிகளைச் செய்யவிடாமல் தடுப்பதும் பெண்களுக்குச் செய்யும் அவமரியாதை. பெண்களுக்குத் தேவையான நேரங்களில் சில சலுகைகள் அளிக்கப்பட
வேண்டியது அவசியம். வேலைக்குப் போகாமல் வீட்டை நிர்வகிக்கும் பெண்களுக்கு இன்னும் கூடுதல் மரியாதை, சலுகைகள் அளிக்கப்பட வேண்டும். வீட்டு வேலை அனைத்தையும் அவர்கள் செய்கிறார்கள். அவர்களின் நேரம், செயல் அகியவற்றைக் கணக்கில் கொண்டால் அவர்கள்தான் முழுநேரத் தொழிலாளி. ஆண்கள், பெண்களின் இயல்பைப் புரிந்துகொண்டு அவர்களுக்கு உறுதுணையாக இருந்தாலே அவர்கள் ஆண்களுக்கு நிகராக எதையும் சாதிக்க முடியும்.
- ஜீவன்.பி.கே, கும்பகோணம்.
பெண்ணின் உடற்கூறு, மனக்கூறு ஆண்களைப் போல இருந்தால் நாம் பெண்ணையும் எல்லாச் சூழ்நிலைகளிலும் ஆணைப் போலவே வேலை செய்ய சொல்லலாம். உடலில் ஏற்படும் இயற்கையான மாற்றங்களால் பெண்களால் சரியான பணி பங்களிப்பைத் தர முடியாதபோது, அவர்களை வீட்டுக்குப் போகச் சொல்வது ஒரு வகை மிரட்டல். உண்மையிலேயே பெண்கள் வீட்டுக்குப் போய்விட்டால் தாங்கள் திண்டாடிப் போய்விடுவோம் என்பது அவர்களுக்கே தெரியும். அதனால்தான் போகச் சொல்வதோடு மட்டும் நிறுத்திக் கொள்கிறார்கள். இல்லையென்றால் உண்மையிலேயே வீட்டுக்கு அனுப்பிவிடுவார்கள். பெண்களின் அளப்பரிய திறமை எல்லோருக்கும் தெரிந்தே இருக்கிறது. வேலைக்குச் செல்லும் பெண்களின் எண்ணிக்கை அதிகரிப்பதிலிருந்தே இதைத் தெரிந்துகொள்ளலாம். அப்புறமும் ஏன் இந்த கண்ணாமூச்சி விளையாட்டு?
- ஜே. லூர்து, மதுரை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT