Published : 06 Mar 2016 02:02 PM
Last Updated : 06 Mar 2016 02:02 PM
ஜிம்னாஸ்டிக் பயிற்சியை வேடிக்கை பார்க்கச் சென்ற இடத்தில் ஏற்பட்ட ஈர்ப்பும் ஆர்வமும் சேலத்தைச் சேர்ந்த சகோதரிகளை தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்கும் அளவுக்கு உயர்த்தியுள்ளது. ஜிம்னாஸ்டிக் மீது ஆர்வம் வைத்த இந்தச் சகோதரிகள், பல தடைகளைத் தாண்டித்தான் வெற்றிக்கொடி நாட்டியிருக்கிறார்கள்.
விளையாட்டுத் துறையில் சாதனை படைப்பது என்பது அசாதாரண விஷயமல்ல என்று சிலருக்குத் தோன்றலாம். ஆனால் விளையாட்டுக்கு ஆதாரமான உடல் வலிமையைத் தரும் ஊட்டச்சத்து நிறைந்த உணவுக்குக்கூட வழியில்லாத குடும்பத்தைச் சேர்ந்த பெண்களுக்கு சாதனை சாத்தியமா? இப்படியொரு கேள்விதான் உமாமகேஸ்வரிக்கும் சுவாதிகாவுக்கும் தோன்றியது. ஆனால் அந்தக் கேள்விக்கு அடுத்து என்ன என்ற அவர்களின் தேடல் அவர்களுக்கு இன்று தேசிய அளவில் அங்கீகாரம் பெற்றுத் தந்திருக்கிறது.
சேலம் மணியனூர் காந்தி நகர் பகுதியைச் சேர்ந்த காய்கறி வியாபாரி சிவக்குமாரின் மூத்த மகள் உமா மகேஸ்வரி (17). இவர் கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் டூ படிக்கிறார். இவரது தங்கை சுவாதிகா (12), அதே பள்ளியில் 7-ம் வகுப்பும் படிக்கிறார்.
சுட்டித்தனம் நிறைந்த இந்தச் சகோதரிகள் படிப்பிலும் திறமைசாலிகள்.
இவர்கள் விளையாடுவதற்காகத் தங்கள் அப்பாவுடன் சேலம் காந்திவிளையாட்டு மைதானத்துக்கு வந்தபோது அங்கு நடந்த ஜிம்னாஸ்டிக் பயிற்சியை பார்த்தனர். பார்த்ததுமே அவர்களுக்கு ஜிம்னாஸ்டிக்கைப் பிடித்துவிட்டது.
இவர்களின் ஆர்வத்தை அறிந்த ஜிம்னாஸ்டிக் பயிற்றுநர் ஜெயமோகன், இவர்களுக்குப் பயிற்சியளித்தார். இவர்களின் அசாத்திய திறமையை உணர்ந்த ஜெயமோகன், சகோதரிகளின் தந்தையிடம் பேசி இருவரையும் இந்த விளையாட்டில் முழு அளவில் ஈடுபடுத்தினார்.
வலிமையே எல்லை!
ஜிம்னாஸ்டிக் கலை என்பது மனோ வலிமையை மேம்படுத்தும் விளையாட்டாக கிரேக்கர்கள் அறிமுகம் செய்தனர். ஆரம்பத்தில் ஆண்கள் மட்டும் இந்த விளையாட்டில் ஈடுபட்ட நிலையில், பெண்களின் உடல்வாகு காரணமாக இந்த விளையாட்டில் பெண்களும் சாதனைகளைப் படைக்கத் தொடங்கினர்.
இன்று உலக அளவில் பிரபலம் அடைந்துள்ள ஜிம்னாஸ்டிக் கலையில் சேலம் சகோதரிகளின் முன்னேற்றம் குறிப்பிடத்தக்கது.
பதக்கப் பட்டியல்
உமாமகேஸ்வரியும் சுவாதிகாவும் தங்கள் அபாரத் திறமையால் மாவட்ட, மாநில அளவிலான போட்டிகளில் அடுத்தடுத்து சாதனை படைத்தனர். 12 வயதில் பயிற்சியில் ஈடுபட்ட உமாமகேஸ்வரி, மாவட்ட மற்றும் மாநில அளவில் தலா 18 பதக்கங்களைப் பெற்றிருக்கிறார். தேசியப் போட்டியில் பங்கேற்ற அவருக்கு வெற்றி எட்டவில்லை என்றாலும், தனது திறமையால் அந்த இலக்கை விரைவில் எட்டுவேன் என்ற தன்னம் பிக்கையோடு கூடுதல் பயிற்சியில் களம் இறங்கியுள்ளார்.
இதே போல் ஆறு வயதில் பயிற்சியில் ஈடுபட்ட சுவாதிகா, மாவட்ட அளவில் 18 பதக்கங்களையும், மாநில அளவில் 16 பதக்கங் களையும் பெற்றுச் சாதனை படைத்திருக் கிறார்.
அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவிகளும் விளையாட்டுத் துறையில் சாதிக்க முடியும் என்பதை இவர்கள் நிரூபித்ததுடன் மற்ற மாணவிகளுக்கு முன்னுதாரணமாக மாறியுள்ளனர்.
அச்சம் தவிர்
“ஜிம்னாஸ்டிக் மீது எங்களுக்கு இருந்த ஆர்வத்தைப் புரிந்துகொண்ட எங்க அப்பா எங்களுக்கு ஊக்கம் அளித்தார்.
ஜெயமோகன் சார் அளித்த பயிற்சியால் இன்று தேசிய போட்டிகளைச் சந்திக்கும் வகையில் வளர்ந்துள்ளோம். ஆரம்பத்தில் சுவாதியைத் தூக்கி தலைமேல் வைத்து பயிற்சியில் ஈடுபடும்போது பலமுறை கீழே விழுந்து அடிபட்டபோது எனக்கு பயம் வந்துவிட்டது. ஆனால் அதையே சவாலாக நினைத்து பயிற்சி பெற்றதால் சாதனை படைக்க முடிந்தது.
மாவட்ட, மாநில சாதனைகள் தொடர்ந்தாலும், தேசிய சாதனை நாளை எதிர்பார்க்கிறேன்” என்கிறார் உமாமகேஸ்வரி.
வழிகாட்டல் வருத்தம்
தனது வெற்றியை நம்மிடம் பகிர்ந்துகொண்ட சுவாதிகா, “நான் 3-ம் வகுப்பு படிக்கும் போதே பயிற்சியில் ஈடுபட்டேன். தொடக்கத்தில் எனக்குள் இருந்த பயத்தை என் அக்கா போக்கினாள். பல்வேறு போட்டிகளுக்கு அக்காவுடன் சென்றதால் பயம் நீங்கியது. எங்களோட இந்த ஆர்வத்துக்குப் பள்ளி அளவில் வழிகாட்டுதல் இருந்தால் எங்களால் இன்னும் நிறைய சாதிக்க முடியும்.
மார்ச் மாதம் நடக்கும் சர்வதேசப் போட்டியில் பங்கேற்று வெற்றி பெறுவதுதான் அடுத்த இலக்கு” என்று உற்சாகத்தோடு சொன்னார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT