Published : 27 Mar 2016 03:37 PM
Last Updated : 27 Mar 2016 03:37 PM
தமிழகத்தில் களைகட்டிவிட்டது தேர்தல் திருவிழா. நாளொரு கூட்டணியும் பொழுதொரு பிரச்சாரமுமாக அரசியல் அனல் வீசுகிறது. பல்வேறு துறைகளில் பெண்கள் பங்கேற்றாலும் அரசியலில் பெண்களின் பங்களிப்பு அரிதாகவும் சவால் மிக்கதாகவும் இருக்கிறது. இந்திய மண்ணில் ஒரு பெண், குடியரசுத் தலைவராகவோ மாநில முதல்வராகவோ ஆக முடியும். ஆனால் சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தலில் ஆண்களுக்கு நிகராகப் போட்டியிட்டு அரசியலுக்குள் நுழைய முடிவதில்லை. இப்படியொரு சூழலில் தமிழகத்தில் பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். ஏற்கனவே சில வட கிழக்கு மாநிலங்களில் பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை ஆண்களைவிட அதிகமாக இருக்கும் நிலையில் தற்போது முதல் முறையாகத் தமிழகத்திலும் பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. ‘எண்ணிக்கையே பலம்’ என்பதைப் பெண்கள் உணர வேண்டும்.
ஆர்வத்துடன் வாக்களிக்கும் பெண்கள்
வாக்குரிமை பெற்ற அனைவருமே ஓட்டுப் போடுவது இல்லை. ஆரம்பத்தில் ஆண்களைவிடப் பெண்கள் குறைவான அளவிலேயே தங்கள் ஓட்டுரிமையைப் பயன்படுத்திவந்தனர். ஆனால் அந்த நிலையும் தற்போது மாறிவருகிறது. 2011-ம் ஆண்டு தேர்தலில் பதிவான வாக்குகளில் பெண்களின் சதவீதம் ஆண்களைவிட அதிகம். இது மிகப் பெரிய மாற்றம். தமிழகத்தில் மட்டுமல்ல; இந்தியாவில் கிட்டத்தட்ட 21 மாநிலங்களில் ஓட்டுரிமையைப் பயன்படுத்துவதில் ஆண்களைவிடப் பெண்கள் முன்னிலையில் இருக்கிறார்கள். இந்த மாற்றமும் வளர்ச்சியும் பெண் வாக்காளர்கள், புறக்கணிக்க முடியாத பெரும் சக்தியாக மாறிவருகின்றனர் என்பதை உணர்த்துகின்றன.
ஓட்டுப் போட்டால் மட்டும் போதுமா?
ஓட்டுரிமை என்பது அதிகாரம் மிக்க ஜனநாயக உரிமை. தங்களை யார் ஆள வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் கடவுச் சீட்டு அது. அதனால் பெண்கள் ஓட்டுப் போடுவதோடு மட்டும் தங்கள் அரசியல் பங்களிப்பை நிறுத்திவிடாமல், வேட்பாளர்களாகத் தேர்தலில் களம் இறங்க வேண்டும். இல்லையென்றால் சமூகத்தின் சரி பாதி இனமான பெண்களின் பங்களிப்பே இல்லாமல், ஆட்சி அதிகாரத்தில் ஆண்களின் பங்கேற்பு மட்டுமே நிகழும். உலக அளவில் நாடாளுமன்றங்களில் பெண்களின் பிரதிநிதித்துவம் 21.4 சதவீதம். ஆனால் இந்தியாவில் அதில் பாதியளவுகூட இல்லை!
இன்டர் பார்லிமெண்டரி யூனியன் (Inter Parlimentary Union) என்ற உலக அமைப்பின் கருத்துப்படி நாடாளுமன்றத்தில் பெண்கள் பங்கேற்பில் இந்தியா 99-வது இடத்தில் உள்ளது. ஆனால் உள்ளாட்சி அமைப்புகளில் மூன்றில் ஒரு பங்கு பெண்களின் பங்கேற்பு இருக்க வேண்டும் என்ற சட்டத் திருத்தத்தால் பெண்களின் பங்கேற்பு கணிசமாக இருக்கிறது. ஆனால் அங்கேயும் பெண்களுக்குப் பின்னால் இருந்து அவர்களது வீட்டைச் சேர்ந்த ஆண்களே ஆட்சி செய்வது நடக்கத்தான் செய்கிறது.
தடுக்கும் காரணிகள்
பிறப்பு முதலே திருமணம், குடும்ப வாழ்க்கை இவற்றுக்காகவே பெண்கள் தயார் செய்யப்படுகின்றனர். பொது வாழ்வு என்பது அவர்களுக்குத் தொடர்பற்றதாக இரு பாலராலும் கருதப்படுகிறது.
பெண் பலவீனமானவள், பாதுகாக்கப்பட வேண்டியவள் என்ற நம்பிக்கையும், பெண்களுக்குப் பாதுகாப்பற்றதாக மாறிவரும் பொதுவெளியும் பெண்களின் அரசியல் பங்கேற்புக்குத் தடையாக உள்ளன.
ஆட்சி அதிகாரம் என்பது பணி செய்வதற்கு என்ற நிலை மாறி, அதிகாரம் செய்ய என்றான பிறகு அதிகாரம் கொண்டு ஆள்பவனாக ஆண் இருக்க, ஆளப்படுபவளாகப் பெண் இருக்கும் நிலை அரசியலிலும் தொடர்கிறது.
அரசியல் என்பது பணம், சாதி, வன்முறை கொண்ட களமாக மாறிவரும் சூழலும் பெண்கள் பங்கேற்க ஏதுவாக இல்லை.
குடும்பத்தின் பொருளாதாரத்தைப் பகிர்ந்துகொள்ளவே பெரும்பாலான பெண்கள் வேலைக்குச் செல்கின்றனர். பணி புரியும் இடங்களில் தொழிற்சங்கங்களிலோ, இயக்கங்களிலோ தங்களை இணைத்துக்கொள்ளவே பெண்கள் தங்கள் குடும்பத்தின் அனுமதிக்காகவும் ஒத்துழைப்புக்காகவும் காத்திருக்கும் நிலையில் அரசியல் நுழைவு எப்படிச் சாத்தியமாகும்?
குடும்ப அரசியல் கோலோச்சும் சூழலில் அரசியல் பின்புலம் இல்லாத பெண்களுக்கு இங்கே வாய்ப்பு குறைவு. தேர்தலில் போட்டியிட ஒரு கட்சியில் பல ஆண்டுகள் நீடித்திருக்க வேண்டும் என்பது அவசியம் என்ற சூழலில் பெண்களுக்கு இது சாத்தியமில்லாமல் போகிறது.
பெண்கள் ஏன் போட்டியிட வேண்டும்?
ஒரு நாட்டின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்துக்கும் பாலின இடைவெளியும் பாகுபாடும் களையப்பட வேண்டும் என்கிறது ஐ.நா. சபை. முடிவுகளை எடுக்கும் இடத்திலும் சட்டம் இயற்றும் பொறுப்பிலும் பெண்களின் பங்கேற்பு என்பது பிரச்சினைகளை விவாதிக்கவும் பெண்கள் நலன் சார்ந்து முடிவுகள் எடுக்கவும் உதவும். மேலும் கல்வி, சுகாதாரம், குழந்தை நலன், சுற்றுச்சூழல் பாதுகாப்பு என பல்வேறு விஷயங்களிலும் பெண்களின் பார்வையும் ஆலோசனையும் அவசியம்.
சட்டமன்றத் தேர்தலுக்குத் தயாராகிவரும் கட்சிகள், பெண்களின் வாக்குகளை மட்டும் குறிவைக்காமல் பெண் வேட்பாளர்களையும் அதிக அளவில் நிறுத்த வேண்டும். அறிவும் ஆளுமையும் மக்கள் நலனில் அக்கறையும் கொண்ட அனைத்து தரப்புப் பெண்களும் களம் இறங்கினால், அரசியலிலும் மாற்றம் சாத்தியமே!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT