Published : 30 Jun 2014 02:33 PM
Last Updated : 30 Jun 2014 02:33 PM
திரைப்படங்களில் பெண்கள் சித்திரிக்கப்படுவதைக் குறித்துக் கடந்த ‘பெண் இன்று’ பகுதியில் எழுதியிருந்தோம். ஆடையில் கண்ணியம் அவசியம் என்று சிலரும், ஆடை அணிவது பெண்களின் அடிப்படை உரிமை என்று சிலரும் தங்கள் கருத்துகளைப் பதிவு செய்திருக்கிறார்கள். அவற்றில் சிலவற்றை இங்கே பார்க்கலாம்:
பெண்ணடிமைத்தனத்தின் வெளிப்பாடு
இந்தச் சமூகம் ஆணாதிக்கத்தையும், பெண்ணடிமைத்தனத்தையும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகப் புராணங்கள், இதிகாசங்கள், நாடகங்கள், திரைப்படங்கள் வாயிலாகப் போதித்துவருகிறது. சின்னஞ்சிறு குழந்தைகள் பாலியல் வன்முறைக்கு ஆளாகிறார்களே. அவர்கள் என்ன உணர்ச்சிகளைத் தூண்டும்படியாகவா உடையணிந்திருந்தார்கள்? ஆண்களின் வக்கிரபுத்திக்குப் பெண்கள் என்ன செய்ய முடியும்? பெண்களைக் கேவலாமகச் சித்திரிக்கும் படங்கள் வெளிவருவது தமிழ் சினிமாவின் சாபக்கேடு. நூறு பெரியார் வந்தாலும் இவர்களை எல்லாம் திருத்த முடியாது என்ற திரைப்பட வசனத்தைத்தான் சொல்லவேண்டியிருக்கிறது.
- ஏ. ராஜமாணிக்கம், தஞ்சாவூர்.
அதுபோன்ற காட்சிகளில் நடிக்க நடிகைகள் மறுப்புத் தெரிவித்தால் எப்படி அந்தக் காட்சியைப் படமாக்க இயலும்? அதைப் பார்க்கும் பெண்களும் எந்தவித எதிர்ப்பும் தெரிவிப்பதில்லை. காரணம் பெண்ணுரிமை, பெண் சுதந்திரம், பெண்ணடிமைத்தனம் என்ற புரிதல் இல்லாததுதான். பொழுதுபோக்கிற்காகப் பார்க்கும் திரைப்படங்களில் லாஜிக் பார்க்கக் கூடாது எனப் பலர் நினைப்பதும் அதற்குக் காரணம். பெண்களிடம் விழிப்புணர்வு அதிகரிக்க வேண்டும்.
- ச. சாய்சுதா, நெய்வேலி.
ஆண்களையே குற்றம் சாட்டலாமா?
பெண்ணின் ஆடையால் கவரப்படுகிற ஆணுக்கு உணர்ச்சிகள் மேலிட்டு, தன் உணர்ச்சிக்கு வடி காலாக அந்தப் பெண்ணை அடைய முடியாவிட்டாலும் எதோ ஒரு வகையில் தனியே மாட்டிக்கொள்ளும் பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்ய முற்படுகிறான். இதற்குக் காரணம் உடை மட்டுமல்ல, ஆபாசமான காட்சிகளைத் திரைப்படங்களில் காட்டுவதும்தான்.
- ஹசன் அப்துல்லா.
எந்த தவறுக்கும் ஒருவர் மட்டுமே காரணம் அல்ல என்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். பெண்கள் கண்ணியமாக உடை உடுத்த வேண்டும் என்றுதான் உள்ளதே தவிர, அது மட்டுமே பெண் சிறுமைப்படக் காரணம் என்று சொல்லப்படவில்லை. பெண்ணுரிமை என்று பேசிக்கொண்டு ஆண்கள் மட்டுமே எல்லாத் தவறுக்கும் காரணம் என்பது பெண்கள் மீது உள்ள தவறை யாரும் சுட்டிக் காட்டக் கூடாது என்பதற்கான கேடயமாகவே தெரிகிறது.
- சரவணன்
பெண்களை வியாபாரப் பொருளாகத் திரைப்படங்கள் மட்டுமல்ல, விளம்பர உலகமே விற்பனை செய்துவருவது இன்று நேற்று தொடங்கியதல்ல. ஆடைக்குறைப்பு, ஆபாச உடைகள் வக்கிர உணர்வைத் தூண்டும் என்பது பல பெண்ணியவாதிகளும் ஏற்றுக்கொண்டது மட்டுமல்ல, இயற்கையின் நியதியும் அதுதான்.
- செழியன்.
என்ன ஒரு தகுதியற்ற வாதம்? பெண்கள் உடற்கூறு ரீதியாகவே ஆண்களால் ஈர்க்கப்படக்கூடியவர்களாக உள்ளனர். அதனால் கண்ணிய மாக ஆடை அணிவதுதான் அவர்களுக்குப் பாதுகாப்பு. இதைத்தான் அந்தப் படத்தின் காட்சியும் சொல்கிறது. இதில் பெண்ணடிமைத்தனம் எங்கே வந்தது? அப்படி நவநாகரிகமான உடையணிவதுதான் பெண்ணு ரிமையா? அப்படியென்றால் ஏன் மாதர் சங்கங்கள், திரைப்பட போஸ்டர்களில் கரி பூசுகின்றன?
- நீதியரசன்.
ஆடைக் கட்டுப்பாடே கட்டுக்கதை
பெண்கள் அரைகுறையாக உடையணிந்தால் பார்க்கிற ஆண்களுக்கு ஈர்ப்பு ஏற்படத்தான் செய்யும் என்று எழுதுபவர்கள், மனிதர்கள் பல வருடங்களுக்கு முன்னர் நிர்வாணமாகத்தான் இருந்தார்கள் என்பதையும் நினைத்துப் பார்க்க வேண்டும். அப்போது ஆண்கள் பெண்களை எப்படிப் பார்த்தார்கள் என்பதைச் சிந்தித்துப் பார்த்தால் தவறு பெண்களின் உடையில் இல்லை என்பது புரியும். பெண்களின் ஆடையால் ஆண் கவரப்படுவான் என்பது கட்டுக்கதை என்பதும் புரியும்.
- கணேஷ், பெங்களூர்.
படம் பார்த்து அதைச் சமூகத்துக்குக் கொண்டு வருகிற அளவுக்கா நமக்குப் புத்தி பேதலித்துப் போய்விட்டது? சுதந்திரம் கிடைத்த காலத்தோடு கருத்துப் படங்களை எல்லாம் குழிதோண்டிப் புதைத்தாயிற்று. இப்போதைய சினிமா வெறும் பொழுதுபோக்குதான். படம் ஓட என்ன வேண்டுமானாலும் செய்வார்கள். நமக்கு அறிவு என்பதே இல்லையா?
- வேலா, புதுடெல்லி.
இந்தப் போக்கு சினிமாவில் மட்டுமல்ல. எத்தனையோ சீரியல்களிலும் விளம்பரங்களிலும் உள்ளது. அதை யார் கேட்பது?
- ஜே.கே. மணி, தோஹா.
இருவருக்கும் பொதுவில் வைப்போம்
எல்லா ஆண்களுக்கும் ஒரு கேள்வி. இதுவே நம் சகோதரி யாரேனும் இப்படி டி-ஷர்ட் அணிந் தால் நமக்கு அவர்களிடம் தவறாக நடக்கத் தோன்றுமா? அது போல் பெண்களும் நமக்கு ஒரு பிரச்சினை என்றால் அதை எப்படித் தடுப்பது என்றே பார்க்க வேண்டும். அதை விடுத்து நான் ரோட்டில் எப்படி வேண்டுமானாலும் போவேன், எதிரே வருபவன் தள்ளி நிற்க வேண்டும் என்பது முட்டாள் தனம். இதற்குப் பேர் விடுதலை கிடையாது. சமூகம் என்பது ஆணும் பெண்ணும் சரிசமமாய் நடப்பதுதான். அதுபோல் ஒழுக்கம், கற்பு என்பது இருவருக்கும் பொதுவானதே. ஆண்/பெண் யார் அரைகுறை ஆடை அணிந்தாலும் தவறே.
- ராஜா, கத்தார்.
உடை, நடை போன்ற பாவனைகளில் ஒரு பெண் இயல்பை மீறும்போதுதான் மற்ற ஆண்களால் அவள் கவனிக்கப்படுகிறாள். ஆண்களின் ஒழுக்கப் பண்புகளில் குறையுள்ள சிலரால் அவள் இச்சைக்குரிய பொருளாகவும், பொழுதுபோக்கு பொம்மையாகவும் அவதானிக்கப்படுகிறாள். ஒவ்வொரு பெண்ணும் தனது ஒழுக்க விழுமியங்கள் சிதையாவண்ணம் வாழ வேண்டியது காலத்தின் அவசியம் எனக் கருத வேண்டும்.
- கீழை ஜஹாங்கீர்.
பாதுகாப்பை உறுதி செய்வதுதான் நம் கடமையே தவிர அடிப்படை உரிமைகளைத் தரமறுப்பது அல்ல. இங்கே பாலியல் குறித்த அறிவு போதிக்கப்பட வேண்டியது ஆண்களுக்குத்தானே தவிர பாதிக்கப்படும் பெண்களுக்கு அல்ல.
- விஜய்.
திரைத்துறையின் அலட்சியம்
ஆபாசமும் அட்டகாசமும் இல்லாமல் இன்று தமிழ் சினிமா இல்லை. பெண்களைக் கவர்ச்சியாகக் காட்டியும் பாடல்கள் மூலமும் கேவலமாகச் சித்திரித்துவருகிறார்கள். இதை சில பெண்கள் அமைப்புகளும் எதிர்ப்பதும் இல்லை, கண்டிப்பதும் இல்லை, கண்டுகொள்வதும் இல்லை. வருமானத்தை நோக்கமாகக் கொண்டு தமிழ்ச் சமுகத்தை, பெண்களைச் சிதைப்பது நியாயமா? ஒரு காலத்தில் தமிழ் சினிமா என்றால் விழிப்புணர்வு இருக்கும். மூடநம்பிக்கையை ஒழிக்க, மத பாகுபாடு, வேறுபாட்டை ஒழிக்க தமிழ் சினிமா உதவியது. தமிழ் சினிமாவில் இருக்கும் பல நடிகர்களுக்குப் பொது மக்கள் மீது சிறுதுளியும் அக்கறை கிடையாது.
- சதாசிவ சரவணன், கோயம்புத்தூர்.
பெண்களுக்கான பாதுகாப்பு அவர்களின் உடையில்தான் இருக்கிறது என்று சொல்லிச் சொல்லியே அவர்களை உசுப்பேற்றி ரசித்து மகிழும் ஆணாதிக்கச் சிந்தனையோடு இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது. சுயகட்டுப்பாடு ஆண்களுக்கு எந்தளவு பேணப்பட வேண்டுமோ அந்தளவு பெண்களின் உடை, அலங்காரங்களும் கண்ணியமாக இருக்க வேண்டும். பாதுகாக்கப்பட வேண்டிய பெண்மையைத் திறந்து போடச் சொல்லும் இவர்கள், பாதுகாக்க வேண்டிய இவர்களின் சொத்துகளைத் திறந்து போட்டுவிடுவார்களா?
- அப்துல் காதர், ரியாத்.
கண்ணியம் நல்லது
ஆணோ, பெண்ணோ யாரையுமே கேவலமாகச் சித்திரிக்க யாருக்கும் உரிமை இல்லை. ஆனால் இரு பாலருமே நவீனம் என்ற பெயரில் விரசமாகப் பொது இடங்களில் உடை அணிந்து வருவதைத் தவிர்ப்பதுதான் அறிவார்ந்த சமூகத்தில் நாம் உள்ளோம் என்பதற்குப் பொருள். மஞ்சப்பை தாத்தாவை அறையச் சொல்லும் கட்டுரையாளர் அந்தப் பெண் வல்லுறவுக்கு ஆளாகி இருந்தால் அவளுக்கு என்ன தீர்வு சொல்வார்? மீண்டும் சமூக அவலங்களைச் சாடி ஒரு கட்டுரையை எழுதித் தன் கடமையைத் தீர்த்துக்கொள்வார். என்னுடைய உடை, நான் எப்படி வேண்டுமானாலும் அணிந்துகொள்வேன் என்பது பொறுப்பற்ற பிடிவாதம். சமூகத்தில் வக்கிர புத்தி கொண்ட மனிதர்கள் இல்லாமலில்லை. அதற்காக நாகரிகமான உடைகள் வேண்டாமென்று சொல்லவில்லை. அந்தரங்க உணர்வுகளைத் தூண்டாத உடைகள் அழகை மட்டுமல்ல பாதுகாப்பையும் தரக்கூடியவை.
- செல்வபாண்டியன்.
கண்களைப் பார்த்துப் பேசுகிறார்களா ஆண்கள்?
ஆடைதான் இன்றும் கற்பின் அடையாளமாகச் சொல்லப்படுகிறது. ரவிக்கை அணியாமல் புடவை அணிந்த காலத்தில் கற்பு இல்லையா? பார்வையின் போக்கு ஆண்களிடம் மாறிக்கொண்டே வருகிறது என்பதை யாரும் உணரவில்லை. ஆள் பாதி, ஆடை பாதி என்ற பழமொழி அழகியலுக்கு உட்பட்டது. அப்படியிருக்கும்போது உடையை எப்படி விவாதப் பொருளாக முன்வைக்கலாம்? முதலில் கண்களை மட்டும் பார்த்துப் பேசுகிறவர்களாக ஆண்கள் மாறட்டும், பிறகு விவாதிக்கலாம்.
- சு. சத்யாவீணா, விருதுநகர்.
பல படங்களில் பெண்களை மிகக் கேவலமாகத்தான் சித்திரித்து வருகிறார்கள். ‘சிவாஜி’ படத்தில் இரண்டு பெண்களுக்கு அங்கவை, சங்கவை என்று பெயர் வைத்து வள்ளல் பாரியின் மகள்களை மட்டுமல்ல, ஒட்டுமொத்த பெண்ணினத்தையே இழிவுபடுத்தியிருக்கிறார்கள். பெண்களை வைத்தே பெண்களை இழிவுபடுத்தும் வேலைகளைத் திரைப்படத்துறையினர் நிறுத்திக்கொள்வது நல்லது.
- அ. இருளப்பன், மதுரை.
சிறு குழந்தைகளையே சீரழிக்கிற இந்தச் சமூகத்தில்தான் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். அப்படி இருக்கும்போது நவீன உடையணிந்து சென்றால் நிலைமை என்னவாகும்? ஆணைப்போலப் பெண் உடையணிவதில் தவறில்லை. ஆனால் பார்க்கிறவர்களுக்கு மரியாதை தோன்றும் வகையில் அணிவது நல்லது. அதற்காக இழுத்துப் போர்த்திக்கொண்டுதான் உடையணிய வேண்டும் என்பதில்லை.
- சுசீலா ராமமூர்த்தி, திருப்பூர்.
திரைப்பட நடிகைகளை வைத்துப் பெண்மை தீர்மானிக்கப்படுவதில்லை. நடிகைகளையும், திரைப்படங்களையும் வைத்து பெண்மை ஒளிர்கிறதா என்று முடிவெடுப்பதைவிட சாதாரண பெண்களை வந்து பாருங்கள். நிச்சயம் பெண்மை ஒளிவீசுகிறது.
- உஷா முத்துராமன், மதுரை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT