Published : 06 Mar 2016 02:00 PM
Last Updated : 06 Mar 2016 02:00 PM
மார்ச் 8 உலகப் பெண்கள் தினம்
மார்ச் 8, உலக பெண்கள் தினம் கொண்டாடுவதற்கு உரிய தினமாக மாற்றப்பட்டிருப்பது வேதனைக்குரியது. உழைப்பாளிப் பெண்கள் மீது செலுத்தப்படும் உழைப்புச் சுரண்டலுக்கு எதிராகப் போராட்ட வடிவம் பெற்ற, உழைக்கும் பெண்களின் போர்க்குணத்தை வெளிப்படுத்திய நாள் அது. உழைக்கும் மகளிர் தினம் இன்று அனைத்துத் தரப்புப் பெண்களாலும் கொண்டாடப்படுவதற்கு, மூல வித்துக்களாக இருந்த பெண் போராளிகளை, அவர்களின் தீவிர போராட்டங்களை என்றென்றும் நினைவில் கொள்ள வேண்டிய நாள்.
ஆடு மாடுகளைப் போல் கொட்டடி யில் அடைத்து, 15 மணி நேரம் வேலை வாங்கிக்கொண்டு சக்கையாகக் கசக்கிப் பிழிந்து அடிமைப்படுத்தி வைத்திருந்த நிலையை எதிர்த்துப் பெண்கள் போர்க்குரல் எழுப்பத் தொடங்கினர். நிரந்தர வேலை, ஆண்களுக்கு நிகராக சமமான கல்வி, வாக்குரிமை, எட்டு மணி நேர வேலை போன்ற கோரிக்கைகளுக்காகவும், உழைப்புச் சுரண்டலுக்கு எதிராகவும், ஆடைத் தயாரிப்பில் ஈடுபட்டிருந்த பெண் தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கில் அமெரிக்காவின் நியூயார்க் நகரத் தெருக்களில் இறங்கிப் போராடிய நாள். பல்லாயிரக்கணக்கானவர்களைப் பலி கொடுத்து, சில ஆயிரம் பேர்வரை சிறைக்குள் சித்திரவதைப்பட்டுத் தங்கள் உரிமைகளை மீட்டெடுத்த நாள்.
இப்படிப் போராடிப் பெற்ற உரிமைகள் அனைத்தையும் இப்போது கொஞ்சம் கொஞ்சமாகப் பறித்துக் கொண்டு 12 மணி நேர வேலை, உழைப்புக்கேற்ற கூலியின்மை, ஒப்பந்தக் கூலி, தினக் கூலி போன்ற உழைப்புச் சுரண்டல்களை மீண்டும் திணித்துவருகின்றன தனியார் மயம், தாராள மயம், உலக மயம் போன்ற நவீன கொள்கை(ளை)கள்.
தொடரும் பணிச்சுமை
கடந்த 25 ஆண்டுகளில் மிக அதிக ஊதியம் என்ற காரணத்தால் தகவல் தொழில்நுட்பத் துறையைச் சுற்றி ஈயாய் மொய்த்தவர்கள், இன்று அங்கு பணிச்சுமை மற்றும் அதனால் ஏற்படும் மன அழுத்தத்துக்கு ஆட்பட்டுத் திண்டாடிக்கொண்டிருப்பதைப் பார்க்க முடிகிறது. தொழிற்சங்கம் அமைப்பதை விரும்பாத, அழுக்குப்படாத வேலைக்காரர்களான அவர்களில் பலர், தாங்களும் (சைபர்) கூலிகள்தான் என்பதை காலம் கடந்த பின்பு இப்போதுதான் உணர ஆரம்பித்திருக்கிறார்கள்.
நிரந்தரமற்ற வேலை, எட்டு மணி நேரம் கடந்து ஏறத்தாழ பத்து மணி நேரங்கள் உழைப்பதற்கு நிர்பந்திக்கப்படுகிறார்கள். அதிலும் மிக இளம் வயதிலேயே வேலை கிடைப்பதால், வேலை அடிமைகளாக இருப்பதற்கும் அவர்கள் சம்மதிக்கிறார்கள். இந்த நிறுவனங்களில் சீனியர்களுக்கோ, சீனியாரிட்டிக்கோ சற்றும் மதிப்பில்லை என்பதும் கசப்பான உண்மை.
மூன்றாம் உலக நாடுகளில் இரவு நேரப் பணிகளில் அதிகம் ஈடுபட்டிருப்பவர்களும் இவர்களே. இன்றைக்கு இந்தியாவில் இந்தத் துறை சார்ந்து பணிபுரிபவர்களில் மூன்றில் ஒரு பங்கினராக இருக்கும் பெண்களால் 50% அளவுக்கு முன்னேறித் திறம்படச் செயலாற்ற முடியும் என்றாலும், அதிகப் பணி நேரம் மற்றும் மகப்பேறு விடுப்பின்மை இரண்டும் பெரும் எதிரிகளாக இருக்கின்றன. கடந்த ஆண்டு ஒரு நிறுவனம், மகப்பேறு விடுப்பு அளிக்க விரும்பாமல் சம்பந்தப்பட்ட பெண்ணை வேலையை விட்டு விலக்கியதும், அவர் வழக்கு தொடுத்து தன் உரிமையை நிலைநாட்டிக்கொண்டதும் தகவல் தொழில்நுட்பத் துறையின் வரலாற்றில் என்றும் அழிக்க முடியாத சுவடுகள்.
எங்கும் எதிலும் பாகுபாடு
பெண்களுக்கு ஏற்ற துறையாகக் கருதப்படும் இங்கு, பெண்கள் அடிமட்டத்தில் அதிக எண்ணிக்கையில் பணிபுரிகிறார்கள். உயர் பதவிகளில், முடிவெடுக்கும் அதிகாரம் கொண்ட பதவி களில் எல்லாம் அவர்கள் அதிகம் ஈடுபடுத்தப் படுவதில்லை. அதிலும் திருமண மாகாதவர்களாக இருக்கும் வரைதான் மதிப்பும் மரியாதையும். இந்தியாவின் எந்த மாநிலத்திலும், எந்த நகரத்திலும் இட மாற்றம் என்ற பெயரில் தூக்கி அடிக்கப்படலாம் என்ற நிலையும் நிலவுகிறது.
இதில் ஆண், பெண் பேதம் எதுவும் கிடையாது. திருமணம் என்றான வுடன், பிரச்சனையும் ஆரம்பமாகிறது. முதல் சிக்கலே இந்த இட மாற்றம்தான். கணவன் மனைவி இதே துறையில் உள்ளவர்கள் என்றால் அது இரட்டிப்பாகிறது. வீட்டைக் கவனிப்பது யார் என்பதில் தொடங்கி அனைத்துமே தலைவலியும் திருகு வலியும்தான். இன்றைக்கு விவாகரத்து கோரி நீதிமன்ற படிக்கட்டு ஏறுபவர்களில் அதிக எண்ணிக்கையில் இருப்பவர்களும் இவர்கள்தான்.
தொழிற்சங்கம் அமைப்பதற்கும் உரிமையற்று இருக்கும் இவர்கள், மிகச் சமீபத்தில்தான், மிக நீண்ட ‘ஃபைட்’டுக்குப் பின் தங்கள் ஃபைட் (FORUM FOR IT EMPLOYEES - FITE) அமைப்பைத் தொடங்கியிருக்கிறார்கள். பெண்களுக்கு ஆறு மாதம் மகப்பேறு விடுப்பு, பிள்ளைப் பேற்றுக்குப் பிறகு இரண்டாண்டுகள்வரை குழந்தையை கவனித்துக்கொள்வதற்கு ஏற்றவாறு இலகுவாக இருக்கும் வகையில் எட்டு மணி நேர வேலை என்று கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.
நம் பெண்களின் கடந்த கால போராட்ட வரலாற்றை நூறு ஆண்டுகள் பின்னோக்கிப் பாருங்கள். அப்போது அவர்கள் வைத்த கோரிக்கைகள் அனைத்தும் நினைவுக்கு வரும். இந்த நூற்றாண்டிலும் பெண்கள் இதற்கெல்லாம் கோரிக்கை விடுப்பவர்களாகத்தான் இருக்கிறோம்; அந்த நிலையில்தான் சமூகம் இன்னமும் பெண்களை வைத்திருக்கிறது. பெண்ணின் உடல் கூறுக்கு ஏற்றவாறு இவையெல்லாம் ஒரு நிறுவனத்தால் அடிப்படை விதியாக நிர்ணயிக்கப்பட வேண்டாமா? நிறு வனங்கள் தங்கள் தொழில் பாதிக்கும் என்பதற்காகப் பெண்களை வதைக் கலாமா?
எந்தத் துறையை எடுத்துக் கொண்டாலும் ஆணுக்கு இணையாக உழைக்கும் பெண்களுக்கு ஊதியம் குறைத்தே அளிக்கப்படுகிறது என்பது நிதர்சனம். கட்டுமானத் துறை, விவசாயம், சாலைப் பணியாளர்கள் இவர்கள் அனைவரும் இதற்கு சாட்சி. இவற்றுடன் வரதட்சணை, பாலியல் வன்கொடுமைகள், திரைப்படங்கள், தொலைக்காட்சி சீரியல்கள், விளம்பரங்கள் இவற்றிலெல்லாம் இழிவுபடுத்தப்படும் நிலை, தற்போது சமூக வலைத்தளங்களையும் இந்தப் பட்டியலில் தாராளமாக இணைத்துக் கொள்ளலாம்.
பழமையான சிந்தனைகளிலிருந்து விடுபட்டு, சற்றே தங்களை ஆசுவாசப்படுத்திக் கொள்ள நினைக்கும் பெண்களை, இந்த நவீன அறிவியல் யுகத்திலும், அறிவியல் கண்டுபிடிப்புகள் வாயிலாகத் தரங்கெட்டவர்களாகச் சித்தரிக்கத் தவறவில்லை சமூகம். பெண்களும் இதையெல்லாம் எதிர்கொண்டு தங்கள் போராட்ட வடிவங்களை மாற்றிக் கொண்டேயிருக்க வேண்டியிருக்கிறது.
ஊதியமற்ற வேலைக்காரர்கள்?
தற்போது மகளிர் தினம், வியாபார நிறுவனங்களின் கொண்டாட்ட தினமாகவும், சலுகைகள், தள்ளுபடிகள் அறிவிக்கப்படும் நாளாகவும் மாற்றப்பட்டுக் கொண்டிருப்பது வேதனை. அதனால்தான் உலக மகளிர் தினம் நூறு ஆண்டுகளைக் கடந்த பின்னும் பெண்கள் மீது திணிக்கப்பட்ட பெண்ணடிமைத்தனம் துடைத்தெறியப்பட முடியாமல் தத்தளிக்கும் நிலையில் இருக்கிறது.
இந்தியாவில் 24 சதவீதம் பெண்கள் மட்டுமே ஊதியம் பெறும் வேலைகளைச் செய்கிறார்கள். மற்றவர்கள் பாதுகாப்பற்ற, விவசாயப் பணிகளில் தினக்கூலிகளாக சொற்ப ஊதியத்துக்கு வேலை செய்கிறார்கள். இப்படி இவர்கள் செய்யும் ஊதியமற்ற வேலைகளின் மதிப்பு ஆண்டுக்கு சுமார் 19.85 லட்சம் கோடி என்று ஒரு ஆய்வு முடிவு தெரிவிக்கின்றது. கடந்த பத்தாண்டுகளில் நாடு அடைந்த மாற்றத்துக்கும், வளர்ந்த வேகத்துக்கும் பெண்களின் நிலை எங்கேயோ உச்சம் தொட்டிருக்க வேண்டும். ஆனால், இந்த 21-ம் நூற்றாண்டிலும் பெண்கள் ஊதியமற்ற வீட்டு வேலை செய்வதற்கு மட்டுமே பிறந்தவர்கள் என்ற நிலையே உள்ளது என்பதுதான் துயரம்.
கட்டுரையாளர், எழுத்தாளர்.
தொடர்புக்கு: asixjeeko@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT