Published : 07 Nov 2021 03:23 AM
Last Updated : 07 Nov 2021 03:23 AM
கல்வி என்பதே பெருங்கனவாக இருக்கும் பழங்குடியின மாணவி, மருத்துவராகும் தன் லட்சியத்தின் முதல்படியைத் தொட்டுள்ளார். நீட் தேர்வில் வெற்றிபெற்றதன் மூலம், கல்வியே பெண்களின் முன்னேற்றத்துக்கான கருவி என்பதை நிரூபித்துள்ளார்.
கோவை திருமலையாம் பாளையம் பேரூராட்சிக்கு உட்பட்ட ரொட்டிக்கவுண்டனூர் அருகே உள்ளது நஞ்சப்பனூர் கிராமம். இங்கே மலசர் பழங்குடியினத்தைச் சேர்ந்த 50 குடும்பங்கள் வசிக்கின்றன. குடிசைகளில் வசிக்கும் அவர்களின் வாழ்வாதாரம், விவசாயக் கூலி வேலை மட்டுமே. இங்கிருந்து பள்ளி சென்றவர்களில் யாரும் 12-ம் வகுப்பைத் தாண்டவில்லை. இந்நிலையில், அந்தக் கிராமத்தைச் சேர்ந்த மாணவி சங்கவி, நீட் தேர்வில் 202 மதிப்பெண்கள் எடுத்துத் தேர்ச்சி பெற்றுள்ளார். இதன்மூலம் அந்தச் சமுதாயத்திலிருந்து மருத்துவராகப்போகும் முதல் மாணவி என்கிற பெருமையை சங்கவி அடைய உள்ளார்.
சங்கவியின் அப்பா முனியப்பன். விவசாயக் கூலித் தொழிலாளி. அம்மா வசந்தாமணி. 10-ம் வகுப்பு வரை குமிட்டிபதியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் பயின்ற சங்கவி, 11, 12 வகுப்புகளை பிச்சனூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயின்றுள்ளார். பிளஸ் 2 தேர்வில் 1,200-க்கு 874 மதிப்பெண் பெற்று, 2018-ல் முதல்முறையாக நீட் தேர்வெழுதியுள்ளார். அப்போது தேர்ச்சிக்கு 6 மதிப்பெண்கள் குறைவாகப் பெற்றதால் வாய்ப்பு தவறிப்போனது. 2018-ல் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க, பிச்சனூர் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர், ஆசிரியர்கள் உதவியுள்ளனர். அப்போது, பள்ளிக் கல்வித்துறை மூலம் கோவை புதூரில் உள்ள தனியார் கல்லூரியில் ஒரு மாதம் நடைபெற்ற நீட் பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டு சங்கவி பயிற்சி பெற்றுள்ளார்.
சாதிச் சான்றுக்காகப் போராட்டம்
அரசின் உதவித்தொகையைக் கொண்டு மட்டுமே படிக்க முடியும் என்கிற சூழலில், தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் சேர்ந்த சங்கவியிடம் சாதிச் சான்று இல்லை. பத்து நாட்கள் மட்டுமே அங்கு படித்த அவர், மேற்கொண்டு படிக்கவில்லை. சுற்றியிருந்த யாரிடமும் சாதிச்சான்று இல்லாததால், அதை ஆவணமாகக் காண்பித்துச் சான்று பெற முடியாமல்போனது. சங்கவிக்குச் சாதிச்சான்று பெற அவரது தந்தை இரண்டு ஆண்டுகள் போராடியுள்ளார்.
கரோனா முதல் அலை பரவத் தொடங்கி, ஊரடங்கு அமலில் இருந்தபோது, நஞ்சப்பனூர் கிராமத்துக்குத் தன்னார்வலர்கள் உதவச் சென்றுள்ளனர். அப்போது சங்கவிக்குச் சாதிச்சான்று கிடைக்காதது குறித்து ஊடகங்கள் மூலம் மாவட்ட நிர்வாகத்துக்குத் தெரியப்படுத்தி சான்று பெற வழிவகை செய்துள்ளனர். பல தடைகளைக் கடந்து சாதித்துள்ள சங்கவியிடம் பேசினோம்.
அரசின் பார்வை தேவை
“2020 மே மாதம், மாரடைப்பால் அப்பா உயிரிழந்துவிட்டார். எனது நிலையை அறிந்து, தனியார் நீட் தேர்வு பயிற்சி மையத்தில் சேர தன்னார்வலர்கள் உதவினர். கடந்த ஆண்டு நவம்பர் கடைசியில் அங்கு சேர்ந்து, ஒன்றரை மாதம் பயிற்சி பெற்றேன். கரோனா இரண்டாவது அலையாலும், ஸ்மார்ட் போன் இல்லாத காரணத்தாலும் ஆன்லைன் பயிற்சி வகுப்புகளைத் தொடர முடியவில்லை. நான் பள்ளியில் படித்தபோது இருந்த பாடத்திட்டமும் மாறியிருந்தது. அம்மாவுக்குக் கண் அறுவை சிகிச்சை செய்திருந்த சூழலில், கையில் இருந்த புதிய பாடத்திட்ட புத்தகங்கள், பயிற்சி மையத்தில் அளித்த மெட்டீரியல்களை வைத்து வீட்டிலேயே தேர்வுக்குப் படித்தேன். கரோனா பரவல் குறைந்த பிறகு, ஒரு மாதம் பயிற்சி மையத்திலேயே தங்கி பயின்றேன். அந்தப் பயிற்சி எனக்குக் கைகொடுத்தது. பழங்குடியின மாணவர்கள் மருத்துவ படிப்புப் பயில 108 முதல் 137 மதிப்பெண்கள் கட்-ஆஃப் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், நான் 202 மதிப்பெண்கள் பெற்றுள்ளதால், அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்கும் என எதிர்பார்க்கிறேன்” என்று சொல்லும் சங்கவி, பழங்குடியினச் சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களு்ககு உரிய வழிகாட்டுதல்களோ, தொடர்ந்து படிப்பதற்கான ஊக்கமோ கிடைப்பதில்லை என்கிறார்.
“அரசு அதிகாரிகள் எங்களிடம் வந்தால் மட்டுமே அவர்களை அணுகி உதவி கேட்க முடியும் என்கிற சூழல் உள்ளது. எனவே, பழங்குடியின மாணவர்களின் தேவையை நேரடியாகக் கேட்டறிந்து அரசு உதவினால், இன்னும் நிறைய மாணவர்கள் நல்ல நிலையை அடைவார்கள்” என்கிறார் சங்கவி.
படங்கள்: க.சக்திவேல்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT