Last Updated : 20 Mar, 2016 12:36 PM

 

Published : 20 Mar 2016 12:36 PM
Last Updated : 20 Mar 2016 12:36 PM

எங்க ஊரு வாசம்: வாசலில் துலங்கும் பூசணிப் பூ!

ஒவ்வொரு வீட்டிலும் காளைகள், பசுக்கள் என்று பத்து, இருபது மாடுகள், நாலைந்து ஆடுகள் என்று இருப்பதால் நான்கு குலுதாளிகளை (தண்ணீர்த் தொட்டி) நிரப்ப வேண்டும். அதனால் பெண்களின் சலசலப்பும் தண்ணீர் இறைக்கும் உருளைச் சத்தமும் கிணற்றோரம் இருக்கும் மரங்களில் அடைந்திருக்கும் பறவைகளை விரட்டியடிக்கும். கிணற்றுப் படிகளில் உட்கார்ந்திருக்கும் தவளைகள் கிணற்றில் குதித்து ஓடி மறைய, பாம்பரையின் (கிணற்றுச் சுவர்) சிறு சிறு பொந்துகளில் அடைந்திருக்கும் மாடப்புறாக்கள், சிட்டுக்குருவிகள், மைனாக்கள் அந்த இருட்டில் என்ன செய்வது என்று தெரியாமல் கிறீச்சிட்டவாறு கிணற்றையே சுத்திச் சுத்தி வந்து தட்டுத் தடுமாறி அலையும். சில குருவிகள் இறைக்கும் வாளி பட்டுச் செத்து, தண்ணீருக்குள்ளேயே விழுவதும் உண்டு.

புளி நாரும் செங்கல் பொடியும் போட்டு விளக்கிய குடங்களும், சருவங்களும் அந்த விடியற்கால வளர்பிறை நிலவின் வெளிச்சத்துக்குப் பொன்னாக மின்னியவாறு குமரிகளின் தலையிலும் இடுப்பிலுமாக உட்கார்ந்திருக்கும். தண்ணீர் எடுத்து முடித்த பெண்கள் பசுஞ்சாணம் எடுத்துக் கரைத்து, வாசல் தெளித்துக் கூட்டி, பொட்டாய்த் தெள்ளிய சுண்ணாம்புப் பொடியில் கோலம் போடுவார்கள். கோலத்தின் சரிகை கரையாகச் செம்மண் இட்டு அழகு பார்ப்பதோடு, சாணி உருண்டை பிடித்து ஆங்காங்கே வைப்பார்கள். பிறகு கூரைகளிலும் கொல்லைகளிலும் பூத்து, மலர்ந்திருக்கும் பூசணிப் பூக்களில் ஆண் பூக்களை மட்டுமே பறித்துவந்து சாணி உருண்டையில் பதிக்க, இப்போது வாசலைப் பார்க்கப் பார்க்க எல்லோருக்கும் பார்த்துக்கொண்டே இருக்கலாம் போலிருக்கும். அத்தனை ‘ரஞ்சிப்பூ!’.

இந்தக் குமரிப் பெண்கள் கோலம் போடுவதைப் பார்ப்பதற்கென்றே இளவட்டங்கள் ஏதோ வேலையிருப்பது போலத் தெருக்களில் அங்குமிங்கும் நடந்துகொண்டிருக்க, இந்தப் பெண்களுக்கும் அவர்களின் நடை சந்தோஷத்தைக் கொடுக்கும். அந்தச் சந்தோஷத்தில் வாசலின் கோலங்கள் இன்னும் அழகாக, பூக்களும் கொடிகளுமாகக் கண்ணைக் கவரும். அதோடு பக்கத்தில் கோலம் போடும் பென்களிடம் சாடை மாடையாகப் பேச்சு கொடுக்க, இளைஞர்களும் சளைக்காமல் யாரிடமோ பேசுவது போலப் பேசிக்கொண்டு போவார்கள்.

கோலம் முடிந்த பின் சிறுமிகள் அரைத்து உருட்டிக்கொண்டு வந்த மஞ்சள் உருண்டையோடும், சிரட்டைகள் நிறைய கரம்பை மண்ணோடும் குமரிகள் எல்லோரும் கிணறு, குளம் என்று குளிக்கப் புறப்படுவார்கள். அந்தக் காலத்தில் சீயக்காய், சோப்பு என்று எதுவும் கிடையாது. வெறும் கரம்பை மண்தான். இந்தக் கரம்பை மண் தண்ணீர் தேங்கியிருக்கும் வயல்களில் கிடைக்கும். இந்த மண்ணைத் தலைக்குக் குளிப்பதற்காகவே ஒவ்வொரு பொட்டி என்று அள்ளிக்கொண்டு வந்து அடுக்குப் பானைகளில் சேமித்துக்கொள்வார்கள். வயிற்றுப் பிள்ளைக்காரிகளுக்கு இந்த மண் கருப்பட்டியாக இனிக்கும்!

தோசை சுட்டு முடித்த குடும்பத் தலைவிகளுக்குக் கிணற்றுக்குப் போக நேரமிருக்காது. பின் கொல்லையில் நெஞ்சு உயரத்துக்குக் கட்டிய சேலையோடு நான்கு போனி தண்ணீரை ஊற்றிக்கொண்டு வந்துவிடுவார்கள். பின்பு பலபலவென்று விடிவு வருகையில் சந்தனம், குங்குமம் பூசிய புதுப்பானை, புது அடுப்பில் ஏற்றப்படும். புது அகப்பை, புதுத் துடுப்பு என்று எல்லாமே புதுசுதான். கிழக்கில் சூரியன் சிவப்பு நிறம் கூட்டிப் பூமியை விட்டு மெல்ல வெளிவந்து தன் தீக்கதிர்களை நிலத்தில் தங்க ஊசியாகப் பாய்ச்சும் போது இங்குப் பொங்கல் பானை, பூ, மஞ்சள், சந்தனம், குங்குமம் என்று எல்லாப் பொருட்களோடும் தயாராக இருக்கும். ‘பொங்கலோ பொங்கல்’ என்று சிறுவர்கள், குமரிகள், இள வட்டங்கள் உற்சாகமாகக் கைதட்டியவாறே குரல் கொடுக்க, வயது முதிர்ந்த பெண்களின் குலவைச் சத்தம் ஊரின் நாலு திசைகளுக்கும் போய் முட்டித் திரும்பும். மொழு மொழுவென்று எரியும் சூடத்தின் வெளிச்சத்தில் எல்லோருடைய முகமும் ஒளிர்ந்து சிவக்கும்.

பத்தியின் வாசனையோடு சாம்பிராணியின் புகை கொட்டத்துக்குள்ளும் வீட்டுக்குள்ளும் காட்டப்படுவதால் மெல்லிய புகை குப்பென்று பரவிச் சிறு வாசத்தோடு காற்றுக்குக் கலைந்துபோவதைக் கண்டு வானத்தில் பறக்கும் பறவைகள்கூட உற்சாகக் கூச்சலிடும்.

பொங்கல் பானையை இறக்கிய உடனே எனக்கு, உனக்கு என்று பறந்துகொண்டிருக்கும் பிள்ளைகளுக்கு, நறுக்கிய வாழையிலையில் வரிசையாக ஒவ்வொரு அகப்பை பொங்கலிட்டு உட்காரவைப்பார்கள். பிறகு புது மண் சட்டியில் இரண்டிரண்டு அகப்பைகள் பொங்கலை அள்ளிப்போட்டுச் சிறு உருண்டையாக உருட்டி, கொட்டத்தில் கட்டியிருக்கும் பசு, காளைகளுக்குக் கொடுத்து முடித்த பின் சற்று ஒதுக்கமாகக் கட்டியிருக்கும் ஆடுகளுக்கும் பொங்கல் தருவார்கள். ஊருக்காகச் சேவை செய்யும் ஊர்க்காலி, மாடு மேய்ப்பவர், சலவை செய்பவர், முடி வெட்டுபவர் என்று அவர்களுக்கும் கொடுத்த மிச்சம்தான் வீட்டுக்காரர்களுக்கு. இரண்டு படி அரிசியும் அதற்கு ஈடாகப் பாசிப் பருப்பும் போட்டு வைப்பதால் பானை நிறையப் பொங்கல் இருக்கும்.

கட்டுரையாளர், எழுத்தாளர்.தொடர்புக்கு: arunskr@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x