Last Updated : 20 Mar, 2016 12:33 PM

 

Published : 20 Mar 2016 12:33 PM
Last Updated : 20 Mar 2016 12:33 PM

இரண்டாம் உலகப் போரும் பெண்களும்

மார்ச் ‘பெண்கள் வரலாறு’ மாதமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. வரலாற்றில் பெண்களின் பங்கு மிக மிகக் குறைவாகவே பதிவு செய்யப்பட்டிருக்கிறது. உலகையே உலுக்கிய இரண்டாம் உலகப் போரில் பெண்களின் பங்களிப்பு என்ன?

இரண்டாம் உலகப் போரில் பெண்களின் நிலையும் மாற்றத்தைச் சந்தித்தது. அதுவரை வீட்டையும் பண்ணையையும் பார்த்துக்கொள்வதே பெண்ணின் முக்கியமான வேலையாக இருந்துவந்தது. ஆனால் போர் ஆரம்பித்தவுடன் புதுப் புது வேலைகள் பெண்களைத் தேடி வந்தன. பெண்கள் புது அவதாரங்கள் எடுக்க ஆரம்பித்தனர். அவர்களின் பொறுப்புகள் விரிந்தன. ஆண்கள் போருக்குச் சென்றுவிட, அதுவரை ஆண்கள் பார்த்துவந்த வேலைகளைப் பெண்கள் பார்க்கவேண்டிய நிலை உருவானது. விமானம் கட்டும் தொழிற்சாலைகளில் வேலை பார்த்தனர். வெடிகுண்டுகள் தயாரிக்கும் இடங்களில் பணிபுரிந்தனர். வாகனங்களை ஓட்டினர். எதிரி விமானங்களைக் கண்காணித்து, மக்களைக் காக்கும் பணியில் ஈடுபட்டனர். காயமடைந்த வீரர்களுக்கும் மக்களுக்கும் மருத்துவம் செய்யும் செவிலியர்களாக மாறினர். அதுவரை ஈடுபடாத அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் பெண்கள் ஈடுபட்டு, சிறப்பாகச் செயல்பட்டனர். போரில் ஆயிரக்கணக்கான பெண்கள் தங்கள் உயிரைத் தியாகம் செய்தனர்.

போர் முடிந்தபோது மீண்டும் இந்த வேலைகள் எல்லாம் ஆண்களின் கைகளுக்கு வந்து சேர்ந்தன. எதிரிகளுடன் போரிட்ட, எதிரிகளின் முகாம்களுக்கு உளவு பார்க்கச் சென்று வந்த தைரியமான பெண்கள், பதக்கங்கள் அளித்து கெளரவிக்கப்பட்டனர். பல்லாயிரக்கணக்கான பெண்கள் போர் எதிர்ப்பு இயக்கங்களில் சேர்ந்தனர்.

உலகப் போர் முடிந்து 70 ஆண்டுகள் கடந்துவிட்டன. உலகம் முழுவதும் நூற்றுக்கணக்கான போர் நினைவுச் சின்னங்கள் எழுப்பப்பட்டு, அவர்களின் தியாகங்கள் நினைவுகூரப்பட்டுவருகின்றன. அவற்றில் பெண்களின் பங்களிப்பை மட்டும் சொல்லும் சில நினைவுச் சின்னங்களைப் பார்ப்போம்.

* இங்கிலாந்து

லண்டனில் உள்ள ஒயிட் ஹால் பகுதியில், 2005-ம் ஆண்டு பெண்களுக் கான போர் நினைவுச் சின்னம் அமைக்கப்பட்டது. போர் முடிந்து 60 ஆண்டுகளுக்குப் பிறகு மிகத் தாமதமாக அமைக்கப்பட்டாலும், இப்படி ஒரு நினைவுச் சின்னம் வேறு எங்கும் இல்லை. 22 அடி உயரமும் 6 அடி அகலமும் கொண்ட கறுப்பு வெண்கலச் சுவர். இதில் பல்வேறு பணிகளில் ஈடுபட்ட 17 பெண்களின் போர்ச் சீருடைகள் செதுக்கப்பட்டிருக்கின்றன.

* அமெரிக்கா

வர்ஜீனியாவில் இருக்கும் மெமோரியல் அவென்யூ, கோள வடிவில் கட்டப்பட்டிருக்கிறது. இரண்டாம் உலகப் போரில் பங்கு பெற்ற பெண்களுக்கான தனி நினைவுச் சின்னமாக இது இல்லை. அமெரிக்க ராணுவத்தில் இன்றுவரை பணிபுரிந்த, பணிபுரியும் பெண்களின் பங்களிப்பைச் சொல்வதாக இது அமைக்கப்பட்டிருக்கிறது. இதில் பெண்கள் படைகள், பெண்களின் பங்களிப்புகள், பெண் தியாகிகள், புகழ்பெற்ற பொன்மொழிகள், புகைப்படங்கள் போன்றவை இடம்பெற்றுள்ளன. இங்குள்ள திரையங்கில் ராணுவத்தில் பணிபுரிந்த பெண்களின் ஆவணப்படங்கள் திரையிடப்படுகின்றன.

* ஜப்பான்

இரண்டாம் உலகப்போரின் போது ஜப்பானிய ராணுவம் ஆயிரக்கணக்கான ஜப்பானியப் பெண்களைப் பாலியல் அடிமைகளாக வலுக்கட்டாயமாக மாற்றியது. அவர்களை ‘Comfort women’ என்று அழைக்கிறார்கள். நான்கில் 3 பங்கு, அதாவது 2 லட்சம் கம்ஃபர்ட் பெண்கள் இறந்து போனார்கள். எஞ்சியிருந்தவர்கள் பாலியல் நோய்களுக்கு ஆளாகினர்.

ஜப்பானிய கம்ஃபர்ட் பெண்களுக்கான அருங்காட்சியகம் டோக்கியோவில் அமைக்கப்பட்டிருக்கிறது. போரின் கோரத்தையும் அமைதியின் அவசியத்தையும் உணர்த்தும் விதமாக இந்த அருங்காட்சியகம் இயங்கிவருகிறது.

* தென் கொரியா

ஜப்பானியர்களின் ஆக்கிரமிப்புக்குட்பட்ட ஆசிய நாடுகளைச் சேர்ந்த இளம் பெண்கள் தங்கள் வீடுகளிலிருந்து கடத்தப்பட்டனர். தொழிற்சாலைகள், உணவு விடுதிகளில் வேலை என்று சொல்லி அழைத்துவரப்பட்ட பெண்கள், பாலியல் அடிமைகளாக மாற்றப்பட்டனர். இரவும் பகலும் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டனர். கர்ப்பமாகும் பெண்களுக்குக் கட்டாயக் கருக்கலைப்பு செய்யப்பட்டது. இணங்காத பெண்கள் தூக்கிலிடப்பட்டனர்.

கொரியாவைச் சேர்ந்த கம்ஃபர்ட் பெண்களுக்கான நினைவுச் சின்னம், தென் கொரியத் தலைநகர் சியோலில், ஜப்பான் தூதரகத்துக்கு வெளியே அமைக்கப்பட்டிருக்கிறது. உட்கார்ந்திருக்கும் ஒரு சிறுமியின் வெண்கலச் சிலை. 2011-ம் ஆண்டு நிறுவப்பட்ட இந்த நினைவுச் சின்னத்தில் ஒவ்வொரு புதன்கிழமையும் கொரிய பெண்கள் நீதி கேட்டு ஜப்பானுக்கு எதிராகப் போராட்டத்தை நடத்திவந்தனர். சமீபத்தில் ஜப்பானிய ராணுவத்தினர் செய்த கொடூரங்களுக்கு ஜப்பானிய அரசாங்கம் மன்னிப்பு கோரியிருக்கிறது.

இதேபோன்று ஒரு நினைவுச் சின்னம் லாஸ் ஏஞ்சலீஸில் 2013-ம் ஆண்டு அமைக்கப்பட்டது. ‘நான் ஜப்பானிய ராணுவத்தினரால் பாலியல் அடிமையாக மாற்றப்பட்டேன்’ என்ற வாசகமும் இதில் இடம்பெற்றுள்ளது.

அமெரிக்கா, ஜப்பான், கொரியா, பிலிப்பைன்ஸ், சீனா மற்றும் சில நாடுகளில் கம்ஃபோர்ட் பெண்களுக்கான நினைவுச் சின்னங்கள் ஏராளமாக அமைக்கப்பட்டிருக்கின்றன. வரலாற்றின் கறுப்புப் பக்கங்களைப் பிரதிபலிக்கும் இந்த நினைவுச் சின்னங்கள் கடந்த காலத்தில் பெண்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை நிகழ்காலத்துக்குச் சொல்லிக்கொண்டிருக்கின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x