Published : 13 Mar 2016 02:40 PM
Last Updated : 13 Mar 2016 02:40 PM

கடவுளின் தேசத்தில் செழித்து வளரும் அரசியல்!- பிரமிப்பூட்டும் சாசகப் பயணம்

(இந்தியா, பெண்களுக்குப் பாதுகாப்பான நாடு என்பதை உலகிற்கு உணர்த்தும் நோக்கத்துடன் சவால்கள் மிகுந்த இந்திய‌ச் சாலைகளில் இருசக்கர வாகனத்தில் தனி ஒருத்தியாக வலம் வருகிறார் ஈஷா குப்தா. 37 வயதான ஈஷா குப்தாவின் மோட்டார் சைக்கிள் அனுபவங்கள் தொடர்கின்றன.)

‘க‌டவுளின் சொந்த தேசம்’ என்ற பதத்தை நியூசிலாந்தைச் சேர்ந்தவர்கள்தான் முதன் முதலில் உச்சரித்தார்கள். புத்தம் புது ஒளி, எங்கெங்கும் பசுமை வெளி, நித்தமும் தொடரும் கடலலை, ஆன்மாவைத் தீண்டும் தென்றல், அழகை ஆராதிக்கும் கார்முகில் கூட்டம் என சொர்க்கமாக காட்சியளிக்கும் தங்களது ஊரை ‘கடவுளின் சொந்த தேசம்’ என உச்சி முகர்ந்தார்கள். கன்னியாகுமரியிலிருந்து கேரளா நோக்கி பயணிக்கையில் இந்த எண்ணங்கள் மனதில் ஓடின.

புள்ளுவிலா அறிவீரோ?

அடர் மரங்கள் சூழ்ந்த‌ சாலைகள், வழியெங்கும் ஒலித்த க‌டலைலைகள், கேரள நாட்டிளம் பெண்கள், மூலிகைச் செடிகளின் வாசனை.. கோவளம் சாலையில் பயணிப்பது ஏகாந்தமாக இருந்தது. புள்ளுவிலா என்ற இடத்தில் நுழையும்போது ஃபுட் பால் மேட்ச்சின் ரன்னிங் கமென்ட்ரி காதில் ஒலித்தது. உடனே என் மைக்கியை ஓரங்கட்டிவிட்டு, கடற்கரை நோக்கி ஓடினேன். அங்கு ‘சிட்டிசன்’ அஜீத் அணியும், ‘ஃப்ரெண்ட்ஸ்’ விஜய் அணியும் மோதிய‌ ஆட்டம் அனல் பறந்தது. இந்தியாவின் எதிர்கால பீலே, மரடோனாக்கள் டி-ஷர்ட் இல்லாமல், ஷூ இல்லாமல், மைதானம் இல்லாமல் கடற்கரையில் ஆடுவதைப் பார்க்கையில் கவலையாக இருந்தது.

அரபிக் கடலோரம் அமைந்துள்ள அழகிய மீனவ கிராமம் புள்ளுவிலா. இங்குள்ள மீனவ மக்கள் மலையாளமும் தமிழும் கலந்த புதுவிதமான‌ புள்ளுவிலா வட்டார மொழியைப் பேசுகின்றனர். உலகில் எந்த மூலையில் போய் இந்த மொழியை பேசினாலும், ‘நீங்க எந்த ஊரு? புள்ளுவிலாவா?’ என அடுத்த கணமே கண்டுபிடித்துவிடுவார்கள். அந்த அளவுக்குத் தனித்துவமான மொழி. மலையாளக் கரையோரத்தில் வசித்தாலும் இந்த மக்கள், அத்தியாவசியத் தேவைகளுக்குக்கூட‌த் தமிழகத்தின் தேங்காய்ப் பட்டணத்துக்குப் படையெடுக்கிறார்கள்.

புள்ளுவிலாவில் 300-க்கும் மேற்பட்ட வீடுகள் இருக்கின்றன. இதில் பெரும்பாலான வீடுகளில் கதவுகள் இல்லை. புதிதாகக் கட்டப்பட்ட வீடுகளுக்குக் கதவுகள் இருந்தாலும் பூட்டுகள் இல்லை. வீட்டில் எவ்வளவு விலை உயர்ந்த பொருளை வைத்துவிட்டு துபாய்க்குப் போய் வந்தாலும்கூட, அந்தப் பொருள் வைத்த இடத்திலேயே இருக்கும். அந்த அளவுக்கு இந்த ஊர்க்காரர்கள் நேர்மையானவர்கள். மீனவப் பெருங்குடிகள் திருட்டைத் தவிர்த்து, உழைத்துச் சாப்பிடுவதைக் கொள்கையாகக் கொண்டிருக்கிறார்கள். அடுக்கடுக்காய் புள்ளுவிலா மக்களின் பெருமைகளைக் கேட்டபோது புருவங்கள் அன்னிச்சையாகவே உயர்ந்தன. அன்றிரவு கோவளக் கடற்கரையோரத்தில் உள்ள நண்பரின் வீட்டில் இடியாப்பமும் முட்டைக் குழம்பும் சாப்பிட்டுவிட்டு உற‌ங்கினேன்.

பரிதாபத்துக்குரிய கேரள யானைகள்

பனி விழும் அதிகாலைப் பொழுதில் கோயில் நகரமான கோட்டயம் நோக்கிப் புறப்பட்டேன். வாழ்க்கையில் எவ்வளவு வலி இருந்தாலும் பனி விழும் பாதையில் பயணிக்கையில் பறந்து போகிறது. மனதில் உள்ள பாரமெல்லாம் பஞ்சாகப் பறந்தது. மனித வாழ்க்கையைப் போலவே இந்தச் சாலையில் எதிர்ப்பாராத் திருப்பங்களும், திடீர் வளைவுகளும், ஆங்காங்கே நீண்டிருக்கும் மரங்களும், பழைய பாலங்களும் மிகவும் சவாலாக இருந்தன. திருவனந்தபுரம், கொல்லம், வர்காலா என வழியில் தென்பட்ட அம்பல‌ங்களில் வீற்றிருந்த தெய்வங்களெல்லாம் என்னை வாழ்த்தின.

ஆறுகளும், ஏரிகளும், குளங்களும் நிறைந்த ஆலப்புழாவைக் கடக்கும்போது நறுமணப் பொருட்களின் வாசனை உயிரெல்லாம் பரவியது. விதவிதமான படகு இல்லங்களில் புகுந்திருந்த பல‌ நாட்டு மனிதர்களை, அதில் கூடுகட்டியிருந்த சிட்டுக்குருவிகள் ஏக்கத்தோடு பார்த்துக்கொண்டிருந்தன. கோட்டயம் நகருக்குள் நுழைகையில் ஆங்காங்கே பெரிய வீடுகளை கம்பீரமான‌ யானைகள் மணியோசையுடன் வலம் வருவதைக் காண‌ முடிந்தது. சாலையோர டீக்கடையில் பழம்பொரி சுவைத்த போது, அருகிலுள்ள‌ வீட்டில் இருந்து ஒரு குட்டி யானை பிளிறியது.

ஆறுகளும், ஏரிகளும், குளங்களும் நிறைந்த ஆலப்புழாவைக் கடக்கும்போது நறுமணப் பொருட்களின் வாசனை உயிரெல்லாம் பரவியது. விதவிதமான படகு இல்லங்களில் புகுந்திருந்த பல‌ நாட்டு மனிதர்களை, அதில் கூடுகட்டியிருந்த சிட்டுக்குருவிகள் ஏக்கத்தோடு பார்த்துக்கொண்டிருந்தன. கோட்டயம் நகருக்குள் நுழைகையில் ஆங்காங்கே பெரிய வீடுகளை கம்பீரமான‌ யானைகள் மணியோசையுடன் வலம் வருவதைக் காண‌ முடிந்தது. சாலையோர டீக்கடையில் பழம்பொரி சுவைத்த போது, அருகிலுள்ள‌ வீட்டில் இருந்து ஒரு குட்டி யானை பிளிறியது.

உடனே டீக்கடை சேட்டனிடம், “அந்த யானைக் குட்டியைப் பார்க்க முடியுமா?” எனக் கேட்டேன். “நீங்கள் யானையைப் பார்க்கலாம். அந்த யானையால் உங்களைப் பார்க்க முடியாது. அதற்குக் கண் தெரியாது. கேரளாவில் உள்ள 50 சதவீத யானைகளுக்குக் கண் தெரியாது. திட்டமிட்டே அவை குருட்டு யானைகளாக ஆக்கப்படுகின்றன” என்ற அதிர்ச்சியான செய்தியைச் சொன்னார். பரிதாபத்துக்குரிய அந்த யானைகளின் உலகை நினைத்துக்கொண்டே கோட்டயத்தில் தங்குமிடத்தை அடைந்தேன். கடும் பயணக் களைப்பிலும் அன்றிரவு நித்திரை கொள்ள இயலவில்லை.

திசையெட்டிலும் கோயில்கள் நிறைந்த கோட்டயத்தில் இருந்து பெரியாறு, இடுக்கி வழியாக மூணாறை நோக்கி அதிகாலையிலே புறப்பட்டேன். பெரியாறு சாலையில் சென்றுகொண்டிருந்த போது முண்டகாயம் என்ற இடத்தில் பெரிய கால்நடை சந்தையைப் பார்த்தேன். ஆயிரக்கணக்கான மாடுகளும், எருமைகளும், ஆடுகளும் விற்பனைக்காக அடைத்து வைக்கப்பட்டிருந்தன. கேரளாவிலுள்ள பெரிய கால்நடைச் சந்தைகளில் இதுவும் ஒன்று. இங்கு ஆண்டுக்கு நூறு கோடி ரூபாய்வரை பிஸினஸ் ஆகிறது. தமிழகத்தில் இருந்து மட்டும் ஆண்டுக்குச் சுமார் ஒரு கோடிக் கால்நடைகள் இறைச்சிக்காக கேரளாவுக்குக் கொண்டுவரப்படுகின்றன. இதில் 30 லட்சம் கால்நடைகள் கேரள கால்நடை பராமரிப்புத் துறையின் சோதனையை மீறி, திருட்டுத்தனமாக கேரளாவுக்குக் கடத்தப்படுவதாக அங்கிருந்தவர்கள் சொன்னார்கள்.

தேயிலை மரங்களின் கதை

வானூயர்ந்த மரங்கள், அடர் வனம், கடும் நிசப்தம், பெயர் தெரியாத பறவைகளின் ரீங்காரம், காட்டை ஆக்கிரமித்திருக்கும் அழகிய‌ தேயிலைத் தோட்டங்கள் என மேற்குத் தொடர்ச்சி மலையின் ரம்மியமான சூழல் பயணத்தை அழகாக மாற்றியது. தேக்கடி, குமுளி, இடுக்கி வழியாக மூன்று ஆறுகள் சங்கமிக்கும் மலைப் பிரதேசமான மூணாறை அடைந்தேன். ஆங்கிலேயர்கள் காலத்தில் உருவாக்க‌ப்பட்ட மூணாறில் தமிழர்கள் அதிக அளவில் வசிக்கிறார்கள். இவர்கள் 19-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தேயிலைத் தோட்டத்தில் வேலை செய்வதற்காக அழைத்துவரப்பட்டிருக்கிறார்கள். சமீபத்தில் தேயிலைத் தோட்டங்களில் கொழுந்து கிள்ளும் பெண் தொழிலாளர்கள் நடத்திய போராட்டம் சர்வதேச அளவில் அதிர்வுகளை ஏற்படுத்தியது.

மூணாறில் உள்ள நல்லத்தண்ணி எஸ்டேட்டில் தேயிலை வரலாற்றையும், தோட்டத் தொழிலாளர்களின் வலியையும் விவரிக்கும் ‘டீ அருங்காட்சியகம்’ உருவாக்கப்பட்டிருக்கிறது. அதைப் பார்த்தபோதுதான் பல உண்மைகள் தெரிந்தன. தேயிலை என்பது செடி அல்ல. வளர வளர வெட்டப்படும் மரங்கள். நாள்தோறும் நாம் அருந்தும் ஒவ்வொரு சொட்டு தேநீரிலும், ஏராளமான தொழிலாளர்களின் செந்நீரும் கண்ணீரும் கலந்திருக்கின்றன. யாரோ ஒருவரின் நலனுக்காக வெட்டப்படும் தேயிலை மரங்களைப் போல தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கை வளராமலே இருக்கிறது என்ற பேருண்மை எனக்குத் தெரிந்தது.

மெல்லிய தூறல்களிடையே ஒளிர்ந்த பொன்னிற மாலைப் பொழுதை மூணாறில் தரிசித்தேன். கடந்த கால நினைவுகளை அசைபோடுவதற்கும், எதிர்காலத்தைச் சிந்திப்பதற்கும், கொஞ்சமாக எழுதுவதற்கும் இதைவிடச் சிறந்த இடம் இருக்க முடியாது என நினைக்கிறேன். திட்டமிட்ட பயணம் இடைவிடாது அழைத்ததால் கொச்சி, குருவாயூர், திரிச்சூர் வழியாக ஆலுவா நோக்கிப் புறப்பட்டேன். சாலையும், நீர்நிலைகளும் தண்டவாளங்கள் போல நீண்ட பாதையில் பயணித்தது அருமையாக இருந்தது. கிறிஸ்துவ தேவாலயங்கள் நிறைந்த‌ ஆலுவா நகருக்குள் நுழைகையில் பிரார்த்தனை கால மணியோசைகள் ஒலித்தன.

கம்யூனிஸம் வளர்க்கும் சுலைமானி

மீண்டும் அதிகாலையில் ஆலுவாவில் இருந்து பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு வழியாக வயநாடு நோக்கி வட கேரளாவில் பறக்கத் தொடங்கினேன். கேரளம் தேர்தலுக்குத் தயாராகிறது என்பதை அறிவிக்கும் விதமாக ஆங்காங்கே சாலையோர முக்குகளில் பொதுக் கூட்டங்கள் களைகட்டியிருந்தன‌. வேட்டி அணிந்த மனிதர்கள் தொண்டையின் அடிநாதத்தில் இருந்து ஒலிபெருக்கியை மிஞ்சும் தொனியில் பேசிக்கொண்டிருந்தனர். இன்னொரு பக்கம் சே குவேரா சிரிக்கும் சாலையோர டீக்கடைகளில் இரவு நேரத் தொலைக்காட்சி விவாதங்களைவிட அனல் பறக்கிறது.

மலப்புரத்தை அடுத்துள்ள டவுன்ஹில் பகுதியில் உள்ள ஒரு சாயா கடையில் மைக்கியை நிறுத்தினேன். பேப்பரும் கையுமாக அமர்ந்திருந்த இளைஞர்கள் கம்யூனிஸ சித்தாந்தத்தைக் கதைத்துக்கொண்டிருந்தனர். அடுத்த சில நிமிடங்களில் ஆவி பறக்கும் சுலைமானியை (டீயில் ஒரு வகை) சுவைத்துக்கொண்டே மோடியின் இந்தியாவை விளாசித் தள்ளிக்கொண்டிருந்தனர்.

அப்படியே ஓரமாக நின்று கவனித்தபோது, ‘ஆசியாவிலேயே முதல் முறையாக கேரளாவில்தான் கம்யூனிஸ்ட்டுகள் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தார்கள். அதிலும் வட கேரளாவில்தான் கம்யூனிஸ்ட்டுகளின் செங்கொடி இன்னமும் தாழாமல் பறக்கிறது. அதற்குப் பல காரணங்கள் இருந்தாலும், முக்கியமான காரணம் சுலைமானிதான். சாயா கடைகளில் மிக எளிதாக குறைவான விலைக்குக் கிடைக்கும் எலுமிச்சை சாறு கலந்த கறுந்தேநீர் குடிப்போருக்கு அதிக ஆற்றலைக் கொடுக்கிறது. இதைக் குடித்துவிட்டு சாயா கடையிலும், கல்லூரியிலும், நூலகத்திலும் மணிக்கணக்கில் அரசியல் பேசுவார்கள். நிலா வெளிச்சத்தில் கோழிக்கோடு கடற்கரையில் சுலைமானி சுவைத்துக்கொண்டு கார்ல் மார்க்ஸ் - ஜென்னி காதலைப் பற்றி கம்யூனிஸ்ட்டுகள் விடிய விடிய பேசிக்கொண்டிருப்பார்கள். இதைக் கேட்ட பலர் மறுநாள் காலையிலேயே கம்யூனிஸ்ட் கட்சி ஆபிஸில் போய் நிற்பார்கள்’ என விலாவரியாக விவரித்துக்கொண்டிருந்தார் மூத்த சகா ஒருவர்!

கடவுளின் சொந்த தேசம்

வளைவு நெளிவான சாலைகளைக் கடந்து அடர் வனமும், உயர் மரங்களும் நிறைந்த மேற்குத் தொடர்ச்சி மலையின் முகடான வயநாட்டை அடைந்தேன். சில்லிடும் மழையும், கண்களைக் கொள்ளைகொள்ளும் காபித் தோட்டமும் மனதைப் பட்டாம்பூச்சியாக மாற்றின. அன்றிரவை வயநாட்டில் கொண்டாடிவிட்டு காசர்கோட்டைத் தாண்டி கர்நாடகா நோக்கிப் பயணித்தேன். ஏற்றத்தாழ்வுகள் நிறைந்த சாலைகளில் மூன்று நாட்களில் 1,235 கிலோ மீட்டர் தொலைவு பயணித்து, சராசரியாக 55 கிலோ மீட்டர் வேகத்தில் கேரளாவைக் கடந்திருக்கிறேன்.

கபினி ஆற்றங்கரையில் கால் நனைத்துக்கொண்டே திரும்பிப் பார்த்தால் மேற்குத் தொடர்ச்சி மலையில் மிதக்கும் பசுமை, அழகான அரபிக் கடலலைகள், தென்னைசூழ் நிலம், செடி கொடிகளால் செழித்த இல்லம், வழியெங்கும் நீர்நிலைகள், சிணுங்கிக்கொண்டே கொட்டும் அருவிகள், ஆலாபனை செய்யும் காற்று, போதாக்குறைக்கு வானில் ஊர்வலம் போகும் மேகக் கூட்ட‌ங்கள்.. இவையெல்லாம் முலாம் பூசப்பட்ட வார்த்தைகள் அல்ல. இங்கு வந்து காலூன்றி நடக்கும்வரை உணர முடியாது. சத்தியமாகச் சொல்கிறேன். கேரளா

கடவுளின் சொந்த தேசம்தான்!

- பயணம் தொட‌ரும்

தொகுப்பு: இரா.வினோத்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x