Published : 17 Oct 2021 03:07 AM
Last Updated : 17 Oct 2021 03:07 AM

எளிய மனிதர்களின் நாயகி

ஏ.இராஜலட்சுமி

அக்டோபர் 20: ராஜம் கிருஷ்ணன் நினைவு நாள்

தமிழ்ப் படைப்புலகின் மிக நீண்ட வரலாற்றில் பெண் படைப்பாளிகளின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. படைப்புக் களத்தைப் போர்க்களத்திற்கு நிகராக எண்ணி, கீழ்மைகளுக்கு எதிராகத் தொடர்ந்து வாள் சுழற்றியவர் ராஜம் கிருஷ்ணன்.

கதைக் கருவை முடிவுசெய்தவுடன் அந்தக் களத்துக்கே சென்று தரவுகளைத் தேடி கண்டடைந்தவர் அவர். அவரின் மொழியிலேயே கூற வேண்டுமென்றால், “ஒரு நாவல் என்பது நான்கு சுவர்களுக்குள் அமர்ந்து வெறும் கற்பனையில் புனையப்படும் எழுத்துக் கோவை என்பதில் எனக்கு உடன்பாடு கிடையாது. நாவல் புனைகதைதான். ஆனால், மனித வாழ்க்கையின் பல்வேறு பிரச்சினைகளிலும், நிலைகளிலும் பிரத்தியட்சங்கள் எனப்படும் உண்மை வடிவங்களைத் தரிசித்த பின்னர் அந்த அனுபவங்கள் எனது இதய வீணையில் மீட்டிவிட்ட சுரங்களைக் கொண்டு நான் இசைக்கப் புகும் புதிய புதிய அனுபவங்களை நாடி நான் புதிய களங்களுக்குச் செல்கிறேன்”.

அவர் கூறியுள்ளவாறு புனைவுகளை உருவாக்க அவர் மேற்கொண்ட பயணங்களும், அதன்வழி அவர் பெற்ற அனுபவங்களும் அசாதாரணமானவை. மனித வாழ்வைத் தரிசிக்க, மனித அவலங்களைக் கண்டறிய எனத் தொடர்ந்து பல்வேறு நெருக்கடிகளைக் கடந்தும் அவரின் கள ஆய்வு தொடர்ந்தது.

மாற்றத்தை விதைக்கும் எழுத்து

அவர் இயற்றிய ஒவ்வொரு படைப்பின் பின்னும் ஒரு மிக நீண்ட சமூக வரலாறு பின்னிப் பிணைந்துள்ளது. சமூக இயக்கம் செய்ய வேண்டிய பணியை, அரசியல் இயக்கங்கள் மேற்கொள்ள வேண்டிய பணியை, அரசு செய்ய வேண்டிய தார்மிகக் கடமையைப் படைப்பாளியாக இருந்து அவர் மேற்கொண்டார்.

தஞ்சை மாவட்டம் முசிறி என்கிற ஊரில் பிறந்தவர் ராஜம் கிருஷ்ணன். அரசுப் பள்ளி ஆசிரியராக இருந்த தன் தந்தை பணியாற்றிய பள்ளிக்குச் சென்ற அனுபவங்களையும், ஐந்தாம் வகுப்புக்குப் பிறகு ஒன்றிரண்டு ஆண்டுகள் மட்டுமே கல்வி பயில முடிந்தமையையும் ‘திருக்குறளும் எனது வாழ்வும்’ என்கிற தலைப்பில் அவர் எழுதிய கட்டுரையில் பதிவுசெய்துள்ளார்.

பெண் படைப்பாளிகள் எதிர்கொள்ளும் நெருக்கடிகள் அதிகம். பெண் எழுதுவதையும், அறிவார்ந்து செயல்படுவதையும் தொடர்ந்து மறுதலிக்கும் சமூகம் நம்முடையது. அப்படியொரு நிலையில் 20ஆம் நூற்றாண்டின் தொடக்கக் காலத்திலிருந்து 21ஆம் நூற்றாண்டின் தொடக்கம்வரை கிட்டத்தட்ட 90 ஆண்டுக் காலம் வாழ்ந்து மறைந்தவர் ராஜம் கிருஷ்ணன். “நான் தேர்வு எழுதவோ, மதிப்பெண் பெறவோ எந்தப் புத்தகத்தையும் படிக்கவில்லை. சுதந்திரமான சிறகுகள் அசைய, அறிய வேண்டும் என்கிற பேரார்வத் துடன் நூல்களைப் படித்ததால் ஒவ்வொரு வரியிலும் புதைந்த பொருள் எனக்குப் புரியத் தொடங்கியபோது அடைந்த மகிழ்ச்சி ஈடு இணையற்றதாக ஆயிற்று” என்று அவர் சொல்லியிருக்கிறார்.

வாழ்க்கையைச் சொல்லும் கதைகள்

வாசிப்பு அனுபவத்தைப் பரந்து விரிந்த தளத்திற்குக் கொண்டு சேர்க்க அவரால் முடிந்தது. அவரின் ‘அலைவாய்க் கரையில்’ என்கிற நாவல் கடலை மையமாகக் கொண்டு தங்கள் வாழ்க்கையை நடத்தும் பரதவ மக்களின் துயரங்களைப் பேசியது. ‘கரிப்பு மணிகள்’ உப்பளத் தொழிலாளர்களின் கரிக்கும் வாழ்வை வெப்பம் மீதுற வெளிப்படுத்தும். பெண்கள், ஆண்கள், குழந்தைகள் என்று தகிக்கும் வெப்பத்தில் துடிக்கும் மக்களின் வாழ்வை மையமிட்டது. படகர் இன மக்களின் வாழ்வை மையமிட்ட ‘குறிஞ்சித்தேன்’ நாவல் மிக முக்கியப் பதிவு. காந்தியக் கொள்கைகளின் இன்றைய நிலையை விரித்துப் பேசும் ‘வேருக்கு நீர்’ சாகித்ய அகாடமி விருது பெற்ற நாவல். சிவகாசிப் பகுதியில் தீப்பெட்டித் தொழிற்சாலையில் வாடும் குழந்தைகளின் வாழ்வை முன்வைத்து இவரால் எழுதப்பட்ட நாவல் ‘கூட்டுக் குஞ்சுகள்’. மதுரை, உசிலம்பட்டி பகுதியில் நடைபெறும் பெண் சிசுக்கொலையினை மையமாக வைத்து ‘மண்ணகத்துப் பூந்துளிகள்’ நாவலை எழுதினார்.

பாரதியாரின் வாழ்க்கை வரலாற்றை ‘பாஞ்சாலி சபதம் பாடிய பாரதி’ என்கிற தலைப்பில் கள ஆய்வின்வழி நுட்பமாக வெளிப்படுத்தினார். இவரின் மற்றுமொரு வாழ்க்கை வரலாற்று நூல் ‘பாதையில் பதிந்த அடிகள்’. பொதுவுடைமை இயக்கப் போராளி மணலூர் மணியம்மையாரின் வாழ்க்கையை மிகச் செறிவாகப் புலப்படுத்தும் புனைவு இது.

புனைவுகளாக மட்டுமல்லாமல் கட்டுரை களாகவும் தன் கருத்துகளைச் சமூகச் சிந்தனையுடன் எழுதினார். பெண்கள் எதிர்கொள்ளும் சமூக நெருக்கடிகளைத் துல்லியமாகத் தன் கட்டுரைகளில் வெளிப்படுத்தினார். பெண்களுக்கு எதிரான சாதி, மத, அரசியல் கருத்தாக்கங்களுக்கு எவ்வித சமரசமுமற்று தன் நேர்மையான கருத்தை எழுத்திலும், பேச்சிலும் துணிச்சலாக முன்வைத்தார்.

பெண் படைப்புலகில் தனக்கெனத் தனியிடத்தைப் பெற்றவர் எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன். விளிம்புநிலை மக்களைப் பற்றிய பெரும் அக்கறையுடன் செயல்பட்டவர். சாகித்ய அகாடமி விருது பெற்ற முதல் தமிழ்ப் பெண் படைப்பாளி என்கிற சிறப்பும் இவருக்குண்டு.

எவ்விதப் பாசாங்குமின்றி அன்பை மட்டுமே விதைத்த இவரது வரிகளே இவரது எழுத்துப் பயணத்தை உணர்த்தும்:

“இலக்கியத்தை அனுபவிப்பதும், இலக்கியம் படைப்பதும், வாழ்க்கையை, சக மனிதர்களை நேசிப்பதற்கான அனுபவங்களாகவே எனக்குப் படுகிறது”

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x